
மாதங்களிளவள் மார்கழியென்று
மாபெருங்கவிஞர் சொன்னாரன்று!
இதயத்தைக்கிள்ளும் இதமானகுளிரும்
இன்பஉணர்வுதரும் இனியயிசையும்
இந்தமாதத்தின் எழிலானசிறப்புகளாய்
நின்றிடுமென்றும் நினைவுகளூடே!
காற்றும்மழையும் கடினஇடியும்
கார்த்திகையோடே கழன்றுபோக
ஆற்றுமணலும் அமைதிகாக்கும்
அற்புதமாதம் மார்கழியென்று
நிரூபணமாகி நிரந்தரமாகி
நின்றேவிட்டது நெஞ்சந்தனிலே!
விடியற்காலை வேளையில்கூட
கோயில்களனைத்தும் சுறுசுறுப்பாகி
திருப்பாவை திருவெம்பாவை
திருப்பள்ளி யெழுச்சியென்று
ஊர்முழுதும் உற்சாகமடைந்து
பாடல்கள்பாடி பரவசம்பெருக்கும்!
மிதமானவெப்பமும் மிஞ்சும்குளிரும்
எழிலானமண்ணின் எழிலைக்கூட்டி
உலகமக்களை ஒன்றாய்ஈர்த்து
நமதுமண்ணில் நர்த்தனமிடவே
அழைத்துவந்திடும் அனைத்துநாட்டாரையும்
அன்புடனிங்கு அமைதிகண்டிடவே!
வெளிநாட்டவர் விழுமியவரவால்
சுற்றுலாத்தளங்கள் சுகத்தில்மிளிர
திருவையாற்றில் தியாகராஜர்சன்னிதியில்
இசைக்கலைஞர்கள் படையெடுத்துப்பாட
நாடுமுழுதும் நல்லிசைபொங்கிட
மகிழ்ச்சிபெருகும்! மனங்கள் குளிரும்!
வண்ணப்பொடிகளால் வகைவகைக்கோலம்
வஞ்சியர்போட்டே வாசலைநிறைப்பர்!
நெருங்கிடும்தையில் தாலிஏற்றிட
கழுத்தைஅவர்களும் காத்துநிற்பர்!
கணவனுடன்ஆன களிப்புவாழ்க்கைக்
கனவில்அவர்களும் மிதந்தேகிடப்பர்!
ஆரம்பமென்றும் அசத்தலில்தொடங்கினால்
முடிவுங்கூட முத்தாய்ப்பாய்த்தானே
இருக்குமென்பது இயல்பானதுதானே?
மார்கழிமுடிவில் மகரசங்கராந்தி
பொங்கல்வந்து புளகாங்கிதம்தந்து
வாழ்வும்பொங்கிட வழிவகுத்திடுமே!
ஒவ்வோர்ஆண்டும் ஒருபதினொருமாதம்
காத்திருந்தபின்பே நாங்களும்உன்னை
நெருங்கிவந்து நேசித்துமகிழ்கிறோம்!
இந்தஆண்டும் எங்களின்நிம்மதி
உன்னால்பெருகி உயரும்என்பதில்
எள்ளளவுகூட எமக்கில்லைசந்தேகம்!
மார்கழிப்பெண்ணே வந்திடுநீயும்!
மனதில்மகிழ்வைத் தந்திடுநித்தம்!
சித்தம்தெளிந்து சிறந்துவாழ்ந்திட
சத்தம்இன்றி சந்தோஷம் மிளிர்ந்திட
எல்லாநாளும் இசையில்மிதந்திட
நீதான்என்றும் எங்களின்தஞ்சம்!