காதல் வயப்படும்
கட்டிடங் காளையோ…
கல்விதனைப் பயிலும்
கல்லூரி மாணவனோ…
கனிவையே மிகக்காட்டும்
கல்லூரி பேராசிரியரோ…
எல்லாப் பாத்திரத்திலும்
இயல்பாய் நடித்தே
இதயங்களை நிறைத்தவன் நீ!
என்றும் வாழ்பவன் நீ!
சங்கடத்தில் உழன்றுவாழ்ந்த
சரித்திர நாயகர்களை
கண்முன்னால் கொண்டுவந்து
காட்சிப் படுத்தியவன் நீ!
வீரத்தின் விளைநிலமாய்
விவேகத்தின் நிலைக்களனாய்
சுதந்திர வேட்கையினைச்
சுருதிகூட்டி உணரவைத்த
வீரபாண்டியக் கட்டபொம்மனாய்…
எங்கள் உள்ளங்களில்
என்றும் வீற்றவன் நீ!
சுதந்திரமே உயிர்மூச்சென்று
சுகதுக்கங்களை மறந்துவிட்டு…
கப்பலோட்டிய கனிவானநாட்களை
செக்கிழுத்தபடி மனதில்சுமந்து
சிரமப்பட்ட சிதம்பரனாரை…
அப்படியே மனதில்
ஆழமாகப் பதித்த
அற்புத நடிகன் நீ!
அயராத உழைப்பாளி நீ!
கொடுத்துச் சிவந்த
கர்ண வள்ளலை…
செஞ்சோற்றுக் கடன்தீர்த்த
சிறந்த வீரனை…
இன்றைக்கும் மனதில் நாங்கள்
இறுத்தி இருப்பதற்கு…
காரணம் நீதானே!
கர்ணனாய் வாழ்பவனே!
ஆன்மிகக் கடலினிலும்
அதிரடியாய் நீகுதித்து…
பற்பல வேடமேற்று
பக்தியைப் பரவச்செய்தாய்!
இப்படித்தான் சிவபெருமான்
இருந்திருப்பாரோ என்று…
எங்களை நம்பவைத்தாய்
இனிய திருவிளையாடலில்!
நாதசுர வித்வானாய்…
லாரி ஓட்டியாய்…
எவ்வேடம் ஏற்றாலும்
இதயத்தை நிறைத்தவன் நீ!
திரையுலகம் உள்ளவரை
தில்லானா மோகனாம்பாளை
என்றைக்கும் ஞாபகத்தில்
இவ்வுலகம் வைத்திருக்கும்!
காவல்துறை என்றாலே
கண்டிப்பும் கருணையும்
தேவையென்றாலும் தேனானகுடும்பமும்
தேவை என்பதையுணர்ந்து…
அடிதாங்கும் உள்ளத்தில்
இடியையும் தாங்கியவன் நீ!
தங்கப் பதக்கம் மூலம்
சரித்திரம் படைத்தவன் நீ!
தெய்வ மகனாகவே
தெய்வம் உன்னைப்படைத்ததனால்…
மூன்று வேடத்திலும்
முத்திரையே நீபதித்தாய்!
அதிலும் அப்பாவும்
இரண்டு மகன்களுமாய்!
அரிதான நிகழ்வன்றோ!
மூன்றென்ன? மும்மூன்றிலும்
முத்தாய் நடிப்பேனே!
என்றே இவ்வுலகிற்கு
எடுத்துக்காட்டினாய் நவராத்திரியை!
சரியான ராணுவவீரனுக்கு
சாகும் நிலையிலுங்கூட
சமுதாயப் பொறுப்பு வேண்டுமென்று…
தாவணிக்கனவுகளில் சங்கடங்கள் ஏற்றவனே!
எத்தனைதான் சொன்னாலும்
இனிதாய் அது முடியாது!
அனைத்திலுமே உன் முத்திரையை
ஆழமாய்ப் பதித்தவன் நீ!
எங்கள் சிவாஜியே!
இன்னொருமுறை நீ பிறந்து
தேவர்மகனாய் ஜொலித்திடவேண்டும்!
முதல் மரியாதையை முழுதாய் வழங்கிட
தயாராய் உள்ளோம்! சல்தியில் வந்திடு!