
அம்பேத் கடும் கோபத்தில் இருக்கிறான். இந்த சண்டையால் ஈடு செய்ய முடியாத பெரிய நட்டம் ஆகிவிட்டது. புரட்சிப் படையை நம்பி வந்த 37 பேர்களை துடிக்கத் துடிக்கக் கொன்று விட்டார்கள். 55 பேர் வசமாக மாட்டியிருக்கிறார்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்த அத்தனை ஆயுதங்களையும் அரசுப் படைகள் எடுத்துக் கொண்டு அவர்களை நிர்மூலமாக்கி இருக்கிறது.
‘விடவே மாட்டேன். 77வது பட்டாலியனிலிருந்து ஒருவர் கூட உயிருடன் திரும்ப போகக்கூடாது. ஏன் அவர்கள் சாம்பல் கூட கிடைக்கக் கூடாது. ஏற்கெனவே வறுமையில் கொலை உயிரும் குற்றுயிருமாய் பட்டினியில் கிடந்த என் மக்களை துன்புறுத்தி சித்ரவதை செய்த வினய் யாதவ் போன்றவர்கள் மிருகம் போல் நடந்துள்ளார்கள். விடமாட்டேன். யாரோ நம் குழுவில் உள்ள துரோகிகள் தகவல் கொடுக்கப்போய், அரசுப் படை நம்மைக் கண்டுபிடித்து அழித்துள்ளது. விடமாட்டேன், விடவே மாட்டேன். நான் திருப்பி அடிக்கப்போகும் அடியில் மொத்த நாடும் தூக்கத்தைத் தொலைக்க வேண்டும்’ என யோசனை செய்தான்.
அம்பேத் புரட்சிப் படையில் மூன்றாம் தலைமுறை ஆள் இவன். அப்பனையும் பாட்டனையும் ஏற்கெனவே அரசுப் படைகள் கொன்று விட்டன. ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி 45 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாடி, நரம்பு, மூளை முழுக்க போர் தந்திர அனுபவத்தையும் அறிவையும் வைத்திருக்கின்ற படுபயங்கரமானவன் அம்பேத்.
அம்பேத்தான் தலைவன் என்று யாருக்கும் தெரியாது. ஏற்கெனவே இறந்தவர்களின் ஓரளவு சாயலில் உள்ளவர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து கொஞ்சம் ஒப்பனை செய்து அவர்களை தலைவர்கள் என்று புரட்சிப்படை, அரசுப் படை, ஊர் மக்கள் என எல்லோரையும் நம்ப வைத்து, பின் அவர்களை உருமாற்றி ஊருக்குள் உலவ விடுவது, 10 பேரையும் சந்திக்க விடாமல் 10 இடத்தில் வைத்து பராமரித்து அம்பேத் நடத்தும் நாடகத்தை எளிதில் யாராலும் புரிந்துகொள்ள முடியாது.
அம்பேத் எந்தக் காட்டிலும், போலீஸ் தேடுகின்ற நாட்டிலும் இல்லை. 77வது பட்டாலியன் இருக்கும் மலையடிவாரம் அருகே இரண்டு கிராமங்கள் தள்ளி உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிதிலமடைந்த வீட்டில் தனது அப்பா வழி பாட்டியுடன் சாதாரண கூலித் தொழிலாளியாய் வசித்து வருகிறான். இறந்துபோன தனது அப்பா ஒரு புரட்சிவாதி என்பதால் இவன் வாரம் ஒருமுறை போலீசில் கையெழுத்தும் போடுகிறான். யாருக்கும் தெரியாத ஒற்றைத் தலைவனாய் இந்தப் பெரிய புரட்சிப் படையைக் கட்டி எழுப்பியிருக்கிறான். எல்லாமே ரகசியம். யாரையும் நம்புவதில்லை, யாருக்கும் எந்தத் தகவலையும் முழுவதுமாக சொல்வதில்லை. மூளை முழுவதும் போர் தந்திரங்கள்.
முப்பதுக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை, மக்களை வதைத்து ஊழல் செய்ததற்காக கொன்று இருக்கிறான். 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அள்ளிக்கொண்டு வந்துள்ளார்கள். இதுவரை அவனை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை, நெருங்கவும் முடியவில்லை.
புரட்சிப் படையில் உள்ள யாரோ ஒருவரை மடக்கி, மயக்கி காட்டில் உள்ள அவர்கள் பயிற்சிக்கூடம், ஆயுதக் கிடங்கு எல்லாவற்றையும் 77வது பட்டாலியன் கண்டுபிடித்து அழித்தது, கொன்றதுதான் 15 வருட புரட்சி வாழ்வில் அம்பேத்க்கு ஏற்பட்டிருக்கின்ற முதல் சறுக்கல். இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் இப்படி ஆகிவிட்டதே என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
இனி, இதுபோன்ற படை, ஆயுதங்கள் திரட்டுவது எல்லாம் எளிதான காரியமல்ல. ஆனால், அம்பேத் விட மாட்டான். தனது 10 ரகசிய தளபதிகளுக்கும் 10 வேலைகளை வடிவமைத்தான். 10 பேரையும் 10 திசைகளாய் பிரித்து சித்து வேலைகளைத் தொடங்கினான்.
அரசுப் படையின் அத்தனை நகர்வுகளையும் கண்காணித்தான். குறிப்பாக, 77வது பட்டாலியனின் முழு அசைவுகளையும். இன்று என்ன சாப்பிட்டார்கள், எத்தனை பேர் விடுப்பில் போகிறார்கள், யார் திரும்பி வருகிறார்கள் உட்பட எல்லா தகவல்களையும் பெறத் தொடங்கினான்.