எட்டு மாதங்கள் கடந்தன. புரட்சிப் படையை மீண்டும் அதே பலத்தோடு கட்டமைத்தான் அம்பேத். இந்த முறை அது ஒரு ரகசியக் கட்டமைப்பாக செயல்படுவது, 77வது பட்டாலியன் ஆட்கள் எல்லோரையும் ஒட்டுமொத்தமாகக் கொன்று தீர்ப்பது, முடிந்தால் 20 பேர்களை கைதிகளாகப் பிடிப்பது என்று பெரும் திட்டம் அம்பேத் மூளையில் ரெடி ஆகி விட்டது.
அதற்கு முன்பு அவர்களை மன ரீதியாக அயர்ச்சி அடைய வைக்க வேண்டும். அரசியல் பிரச்னையை கிளப்ப வேண்டும் என அம்பேத் திட்டம் தீட்டினான். அதற்கு வினய் யாதவின் பெண்ணாசை பலகீனம் போதுமானதாக இருந்தது.
ஒரு நாள் மலையில் வினய் யாதவை ஒரு பெண் மூலம் கிராமத்திற்கு வரச் சொல்லி, அவன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் நாலாபக்கமும் தாழிட்டு சத்தம் போட்டு கிராம மக்களை திரட்டினார்கள். போலீஸ், மீடியா, அரசியல்வாதிகள் என பிரச்னையை பெரிதாக்கினார்கள். வினய் யாதவை ஜட்டியோடு மரத்தில் கட்டிவைத்து புகைப்படம் எடுத்து பத்திரிகையில் போட்டார்கள். சட்டசபையில் பெரும் அமளியானது.
‘77வது பட்டாலியன் அருகில் உள்ள அப்பாவி கிராம மக்களை துன்புறுத்துகிறது, பெண்களிடம் அத்து மீறுகிறது, அவர்களை உடனே அங்கிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டார்கள்.
டெபுடி கமாண்டன்ட் சுனில் பர்மார் வினய் யாதவ் பற்றி முன்னர் கொடுத்த ரிப்போர்ட் மறுபடியும் உயிர் பெற்றது. வினய் யாதவை பணியிடைநீக்கம் செய்து விசாரணைக்கு டில்லி தலைமை உத்தரவிட்டது. இங்குள்ள தலைமை கமாடெண்ட்க்கு வார்னிங் மெமோ கொடுத்தார்கள். 77வது பட்டாலியன் பெரும் பிரச்னையில் தவித்தது. ‘யாருக்கும் இனி விடுப்பு இல்லை’ என உத்தரவு வந்தது.
சிவநேசன், தனது மனைவி கீர்த்தியின் வளைகாப்புக்குப் போக முயற்சித்து நடக்கவில்லை. பெரும் தவிப்பில் இருந்த சிவநேசனை எல்லோரும் தேற்றினார்கள். கீர்த்தி, ‘உடல் பலகீனமாக இருக்கிறது. ஆனால், மாதா மாதம் டெஸ்ட் செய்வதில் ஏதும் பெரும் பிரச்னையில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்’ என கீர்த்தி கடிதம் எழுதியிருந்தாள்.
பதிலுக்கு சிவநேசன், ‘இங்கிருந்து விடுப்பில் வரும் நம்ம ஊர் தம்பி மணிவர்மனிடம் உனக்கு ஐதராபாத் வளையல்களும் உன் வயிற்றுக்குள் இருக்கும் நம் செல்லக்குட்டி சிவகீர்த்திக்கு காஷ்மீர் குங்கும பூவும் பெரிய டப்பாவில் கொடுத்திருக்கிறேன்’ என்று பதில் எழுதி நெகிழ்ந்தான்.