சண்டையிட்டு பெற்ற வெற்றியை தக்கவைப்பது ரொம்பவே கடினம். அதேபோல், எதிரியை குறைத்து மதிப்பிடுவதும் மிகப்பெரிய தவறு என்பது பட்டாளத்தில் முக்கியமான விதி.
டெபுடி கமாண்டர் சுனில் பர்மாருக்கு ஏதோ உள் மனதில் சரியான தெளிவு வரவில்லை. இவர்கள் கொடுத்த ஓகே ரிப்போர்ட்டை அவர் ஏற்கவில்லை. ஐதராபாத் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு, ‘ஹெலிகாப்டர் மூலம் மலையில் ஏதும் நடமாட்டம் இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும்’ என்று கேட்டார்.
‘ஹெலிகாப்டர் வேணுமா? அதற்கெல்லாம் அனுமதி வாங்குவது பெரும் கஷ்டம். இரண்டு மாதம் முன்பே சொல்லியிருக்க வேண்டும். நீங்கள் மீண்டும் சாலைகளை சோதித்து, புது பட்டாலியன் ஆட்கள் வந்தவுடன் அதேவழியில் உங்கள் படைகளை அந்த பத்து வண்டிகளிலும் பகிர்ந்து ஏற்றிக்கொண்டு வாருங்கள்’ எனச் சொல்லி விட்டார்கள்.
அதன்படி புது பட்டாலியன் ஆட்கள் சுமூகமாக வந்து சேர்ந்தார்கள். சுனில் பர்மாருக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. ‘நாளை காலை 4 மணிக்கு நமது 77வது படைகள் புறப்பட்டுப் போகலாம்’ என கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார். இருந்தும் அந்த 60 கிலோ மீட்டர் காட்டுப்பாதையை கடக்கும் வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
‘இடையில் எந்த வண்டியும் எங்கும் நிறுத்தக் கூடாது. இன்று இரவு முழுதும் யாரும் தூங்க முடியாது. எல்லோரும் எல்லாம் சோதித்து சரி செய்து கொண்டுதான் போக வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
மீதமான சாப்பாடு வாங்க வரும் கிழவி மூலம் அம்பேத் கடைசி தகவல் வரை பெற்றுக் கொண்டான்.
அன்று இரவு ஐதராபாத்தில் இருந்த மணிவர்மனுக்கு செல்வராணி காட்டுப் பகுதியில் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு, ‘மணி, மணி’ என்று கூப்பிடுவதுபோல் அதே பழைய கனவு வந்தது. உடனே எழுந்து வெளியில் வந்து பார்த்தான். நகரம் நிலவொளியில் அமைதியாகக் கிடந்தது.
திருச்சி, துவாக்குடி சிவநேசன் வீட்டில் கீர்த்திக்கு வயிறு, நெஞ்சு எல்லாம் பெரும் வலியெடுக்க, எல்லோரும் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.
நாகூரில் இஸ்மாயில் வீட்டில் அப்ரின், ‘வாழ்ப்பா, வாழ்ப்பா...’ என்று சொல்லிக் கொண்டு தூங்காமல் அடம் பிடித்தாள். உம்ரா அவளை சாந்தப்படுத்தினாள்.
கேம்பை சுற்றி உள்ள காட்டுப் பகுதியில் மிருகங்கள், பறவைகளின் சத்தம் கேட்டது. கிளம்பும் வேலையில் அதை யாரும் பெரிதாய் கவனிக்கவில்லை.