

“விடிஞ்சா தீபாவளி. காலங்காலையில என்னை குளிக்க வைப்பியாம்மா. புது உடுப்பு போட்டுக்கணும்”னு சொல்லிட்டுப் படுத்தேன். இருட்டுப் பிரியறத்துக்கு முன்னமே என்னை எழுப்பி தலையில எண்ணை வெச்சி, பல்லுத் தேய்க்க கையில புருஷ்சை குடுத்து படிக்கட்டுல உக்கார வெச்சிட்டு வென்னியடுப்பைப் பத்த வைக்கப் போச்சு அம்மா.
தீக்குச்சியை உரசி அடுப்புலருந்த விறகு மேலே போட்டதுதான் தெரியும். படால்ன்னு நெருப்பு அப்படியே அம்மா மேலே பாய்ஞ்சது. அம்மா மண்ணுல விழுந்து உருளுது. ஊஹூம். தீ வானமுட்டும் வரை திருவண்ணாமலை தீபமா எரியுது. அதுக்குள்ள ‘அம்மா அம்மா’ன்னு கதறிட்டுக் கிட்டப் போனேன். “கிட்ட வராதே. இங்கே நிக்காம எங்கேயாவது ஓடு..ஓடு..ஓடு”ன்னு கூவிட்டே அம்மா எரிஞ்சிட்டு இருந்தது.
அதுக்கு மேல நான் ஏன் அங்கே நிக்கப் போறேன்? ஒரே ஓட்டமா ஓடினேன். குளத்தைத் தாண்டி, கோயிலைத் தாண்டி, பள்ளிக்கூடத்தைத் தாண்டி சின்ன ஆஸ்பத்திரியைத் தாண்டி, காட்டாத்தைத் தாண்டி ஓடினேன். இருள் பிரியாத அந்த விடியகாலையில ஏர்கலப்பையும் மாட்டையும் பிடிச்சிட்டு வயலுக்குப் போயிட்டிருந்த மருதையன் மேலே போய் விழுந்தேன்.