

"அவசரச் செய்தி! நகரம் முழுவதும் மொபைல் சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."
தொலைக்காட்சித் திரையில் செய்தி வாசிப்பாளரின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தக் குரலில் இருந்த பதற்றத்தைவிட, நகரம் முழுவதும் பரவியிருந்த மௌனமே அச்சமூட்டுவதாக இருந்தது.
அந்தச் செய்தியைப் பார்த்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் மொபைலை எடுத்துப் பார்த்தார்கள். யாரோ ஒருவருக்கு அழைத்தார்கள். மீண்டும் மீண்டும் முயன்றார்கள். விமானப் ஏரோபிளேன் மோடுக்கு போய் மீண்டும் பயன்முறையை அணைத்தும் போட்டும் பார்த்தார்கள். போனை ரி ஸ்டார்ட் செய்தார்கள்.
ஆனால் எல்லா முயற்சிகளும் ஒரே பதிலைத்தான் தந்தன.
"சேவை இல்லை."
அந்தக் கணத்தில் யாரும் உணரவில்லை.
அந்த ஒரு நாள், அவர்கள் தொடர்பை இழந்த நாள் அல்ல.
உண்மையில், அவர்கள் மீண்டும் மனிதர்களை அடையத் தொடங்கிய நாள் அது.
பல ஆண்டுகளாக அருண் தனது அடுத்த வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதைக் கூட சரியாக அறிந்ததில்லை.
தினமும் நூற்றுக்கணக்கானோரிடம் பேசுவான். டாக்டர்கள், மருந்தக உரிமையாளர்கள், நிறுவன மேலாளர்கள், வாடிக்கையாளர்கள்...
ஆனால் அந்தப் பேச்சுகள் அனைத்தும் வேலைக்கானவை.
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுடன் ஒரு "வணக்கம்" கூட பகிர்ந்ததில்லை.
காலை பத்து மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பினால், இரவு நடுநிசிக்குத்தான் வீடு திரும்புவான்.
மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ் வேலை அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தான்.
கடைசி நோயாளியைப் பார்த்து முடித்த பிறகுதான் டாக்டரைச் சந்திக்க நேரம் கிடைக்கும்.
வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தது.
அன்று காலையும் அதே அவசரத்தில்தான் தொடங்கியது.
கண்ணாடி முன் நின்றபடி முகம் கழுவ குழாயைத் திறந்தான்.
ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வரவில்லை.
"என்னடா இது?" என்று முணுமுணுத்தவனின் கை தன்னிச்சையாக மொபைலைத் தேடியது.
மின்மோட்டார் பழுதாகிவிட்டதா என்று அடுத்த வீட்டாருக்கு அழைக்க நினைத்தான்.
போன் திரை கருமையாக இருந்தது.
"சார்ஜ் தீர்ந்திருக்கும்."
அவன் சார்ஜரில் இணைத்தான்.
சில நொடிகள் காத்திருந்தான்.
எந்த ஒளியும் இல்லை.
மீண்டும் பவர் பட்டனை அழுத்தினான்.
அமைதி.
"ச்சே..."
எரிச்சலுடன் கதவைத் திறந்து வெளியே வந்தான்.
அவன் கண்முன் விரிந்த காட்சி அவனை ஒரு கணம் அசையாமல் நிறுத்தியது.
தினமும் பூட்டிய கதவுகளுக்குள் மறைந்து போகும் அந்தத் தெரு, இன்று உயிருடன் இருந்தது.
வீட்டுக்கு வீடு மக்கள் வெளியே நின்றிருந்தார்கள்.
யாரோ சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
யாரோ சிரித்துக் கொண்டிருந்தார்.
யாரோ கவலையுடன் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்.
பல வருடங்களாக ஒரே தெருவில் வாழ்ந்தவர்கள், இன்று முதல் முறையாக ஒரே இடத்தில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அருண் மெதுவாக அவர்களிடம் நெருங்கினான்.
"இந்தத் தம்பிக்குத் தெரியுமோ... கேட்கலாம்," என்றார் உயரமாக இருந்த ஒருவர்.
"என்னாச்சு சார்?" என்று கேட்டான் அருண்.
"என்னன்னே தெரியல தம்பி. யாரோட போனும் வேலை செய்யல. டிவில எல்லா மொபைல் சேவையும் முடங்கிப் போச்சுன்னு சொல்றாங்க."
அதைக் கேட்டவுடன் அருகில் இருந்த பெரியம்மா கவலையுடன் பேசினார்.
"அடப்பாவி.. என் பேத்தி ஸ்கூல் பஸ் வரும்போது டிரைவர் ஒரு மிஸ்டு கால் விடுவாரு. அதைப் பார்த்துதான் நான் தெருமுனைக்கு போவேன். இப்ப என்ன பண்ணுவது?"
"என் வொய்ஃப் க்கு டெலிவரி டைம் இது அவள் நிறைமாத கர்ப்பம்," " ஏதாவதுன்னா ஆஸ்பிட்டல் போக ஆட்டோவோ கால் டேக்ஸிக்கோ நான் எப்படி தகவல் தருவது?" என்றான் ஹரிஷ்.
"அவசர நேரத்துக்குத்தானே வேணும் இந்த ஃபோன்?" என்றாள் கமலாக்கா.
"அதுவே வேலை செய்யலன்னா?"
அனைவரும் தங்கள் கவலையைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் யாரும் கவனிக்காத ஒரு விஷயம் அங்கே நடந்துகொண்டிருந்தது.
பல ஆண்டுகளாகப் பேசாத அண்டை வீட்டார், இன்று ஒருவரின் கவலையை மற்றொருவர் கேட்டு நின்றிருந்தார்கள்.
பகுதி 2 - தொடரும்...