

மாலைச் சூரியன் மெதுவாக மேற்கே சாய்ந்து கொண்டிருந்தான்.
அந்தத் தெருவில் பல ஆண்டுகளாகக் கேட்காத சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
குழந்தைகளின் சிரிப்பு...
பெரியவர்களின் கலகலப்பான உரையாடல்...
எண்ணெயில் பொரித்த பஜ்ஜியின் மணத்தோடு கலந்த அடுப்பில் கொதிக்கும் தேநீரின் மணம்...
அந்தத் தெரு, இன்று ஒரு தெருவாக இல்லை.
ஒரே குடும்பமாக மாறியிருந்தது.
அப்போது திடீரென்று ஹரிஷின் வீட்டிலிருந்து ஒரு பதற்றமான குரல் கேட்டது.
"ஹரிஷ்...!"
அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
ஹரிஷின் மனைவிக்கு பிரசவ வலி தொடங்கியிருந்தது.
மொபைல் இன்னும் செயல்படவில்லை.
ஆம்புலன்ஸை அழைக்க முடியவில்லை.
ஒரு கணம் அனைவரும் பதற்றமடைந்தனர்.
அந்த முதியவர் மட்டும் அமைதியாகச் சொன்னார்.
"பயப்படாதீங்க... மனிதர்கள் இருக்கிற இடத்தில் வழியும் இருக்கும்."
அருண் உடனே பேசினான்.
"என்னிடம் பைக் இருக்கு முன்னாலே ஆஸ்பிட்டல் போய் அரேன்ஜ் பண்ணீரலாம் "
அதற்குள் மற்றொருவர்,
"என்னோட கார் வெளியே இருக்கு அதில போயிரலாம் கவலைப்படாதிங்க ஹரிஷ் " என்றார்.
என்றார்.
கமலாக்கா வீட்டுக்குள் ஓடி, தேவையான துணிகளையும் தண்ணீரையும் எடுத்துவந்தாள்.
பெரியம்மா கர்ப்பிணியைத் தைரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.
இளைஞர்கள் இருவர் அருகிலிருந்த மருத்துவமனைக்குத் தகவல் சொல்ல நேரடியாக ஓடிச் சென்றனர்.
சில நிமிடங்களில் அனைவரின் ஒத்துழைப்புடன் ஹரிஷின் மனைவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.
அந்த இரவு...
ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
மருத்துவர் வெளியே வந்து சிரித்தபடி சொன்னார்.
"தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்."
ஹரிஷின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவன் முதலில் அந்த முதியவரின் கைகளைப் பிடித்தான்.
"நன்றி... ஐயா "
முதியவர் சிரித்தார்.
"எனக்கு வேண்டாம்."
"இங்க இருந்த ஒவ்வொருவருக்கும் சொல்லுங்க."
"இன்று உங்க குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு போனது மொபைல் இல்ல..."
மனிதர்கள்.
அந்த ஒரு வாக்கியம் அனைவரின் இதயத்திலும் ஆழமாகப் பதிந்தது.
இரவு ஒன்பது மணியைத் தாண்டியது.
திடீரென்று...
டிங்... டிங்... டிங்...
ஒரே நேரத்தில் தெரு முழுவதும் மொபைல்கள் உயிர் பெற்றன.
நூற்றுக்கணக்கான அறிவிப்புகள்.
தவறிய அழைப்புகள்.
செய்திகள்.
சமூக வலைத்தள அறிவிப்புகள்.
காலை முதல் அமைதியாக இருந்த திரைகள் மீண்டும் ஒளிரத் தொடங்கின.
ஆனால்...
யாரும் உடனே தங்கள் போனை எடுக்கவில்லை.
குழந்தைகள் இன்னும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பெரியவர்கள் இன்னும் பேசிக் கொண்டிருந்தனர்.
தேநீர் இன்னும் சூடாகவே இருந்தது.
அந்த உரையாடல்களை விட எந்த அறிவிப்பும் முக்கியமானதாகத் தோன்றவில்லை.
அருண் தனது போனை எடுத்துப் பார்த்தான்.
திரை முழுவதும் தவறிய அழைப்புகள்.
செய்திகள்.
வேலை தொடர்பான நினைவூட்டல்கள்.
அவன் ஒரு நொடி அவற்றைப் பார்த்தான்.
பிறகு...
மெதுவாக மீண்டும் போனைப் பையில் வைத்துவிட்டான்.
அருகில் நின்றிருந்த ஹரிஷைப் பார்த்து சிரித்தான்.
"நாளைக்கு எல்லா வேலையும் பார்த்துக்கலாம்."
"இன்னைக்கு... கொஞ்சம் பேசலாம்."
அந்த வார்த்தையைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.
அப்போது அந்த முதியவர் மெதுவாக எழுந்தார்.
"சரி... நான் கிளம்புறேன்."
"ஐயா... நீங்க யாரு?" என்று அருண் கேட்டான்.
முதியவர் மெதுவாகப் புன்னகைத்தார்.
"நான் யாருன்னு தெரிஞ்சா என்ன?"
"சாதனங்கள் நம்மை இணைக்கலாம்; ஆனால் உறவுகளை உருவாக்க முடியாது.
உண்மையான தொடர்பு, சிக்னலில் இல்லை... மனித மனங்களில்தான் இருக்கிறது."
"நீங்க இன்று ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்கிட்டீங்களே...
அதுதான் முக்கியம்."
என்று சொல்லிவிட்டு அவர் மெதுவாக நடந்து சென்றார்.
சில அடிகள் சென்ற பிறகு, யாரோ அவரை அழைக்கத் திரும்பிப் பார்த்தார்கள்.
ஆனால்...
அவர் அந்த இரவின் இருளோடு கலந்து மறைந்துவிட்டார்.
அவர் உண்மையிலேயே ஒரு மனிதரா?
அல்லது, மனிதர்களை மனிதர்களிடம் மீண்டும் அறிமுகப்படுத்த வந்த ஒரு நினைவூட்டலா?
அதற்கான பதில் யாருக்கும் கிடைக்கவில்லை.
ஆனால் அந்தத் தெருவுக்கு ஒரு பதில் கிடைத்துவிட்டது.
அடுத்த நாள் முதல் அந்தத் தெருவில் ஒரு புதிய பழக்கம் பிறந்தது.
மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை...
அனைவரும் தங்கள் மொபைலை வீட்டுக்குள் வைத்துவிட்டு வெளியில் வந்து பேசினார்கள்.
குழந்தைகள் விளையாடினார்கள்.
பெரியவர்கள் சிரித்தார்கள்.
அண்டை வீட்டார் உறவினர்களாக மாறினார்கள்.
மொபைல்கள் மீண்டும் வேலை செய்யத் தொடங்கின.
ஆனால்...
அந்த ஒரு நாள், மனிதர்களின் மனங்களில் மீண்டும் "சிக்னல்" கிடைக்கச் செய்த நாள் என்று மட்டும் என்றும் மறக்கப்படவில்லை.
(நிறைவு)