
‘‘என்னங்கடா பொழப்பு இது... துத்தேறி... ’’அலுத்துக் கொண்டார் கஜேந்திரன்.
‘‘முப்பது வருஷம் சர்வீஸ் ஆச்சு எனக்கு. நேத்து ஒரு பையன் வந்து சேர்ந்தான் மனேஜர்ங்கறான்.... ஆர்டர் போடறான்... தடாபுடாங்கறான்... என் சர்வீஸ் வருஷத்தைவிட அவனோட வயசு கம்மி… !’’
பக்கத்து சீட் முத்துசாமி ஆறுதல் சொன்னார். ‘‘வருத்தப்படாதே கஜா. வேலைக்குன்னு வந்தாச்சு.. பொணம் தூக்கற வேலைல கால் பக்கம் தூக்கினா என்ன, தலைப் பக்கம் தூக்கினா என்ன? கௌரவம் பர்த்துகிட்டிருந்தா பிழைக்க முடியாது. சம்பளம் கொடுக்கறவன் நாலு கேள்வி கேட்கத்தான் கேட்பான்...’’
கஜேந்திரன் சமாதானமடையவில்லை. பெரிய படிப்பு படிச்சுட்டானாம், அதுக்காக இத்தனை வருஷம் சர்வீஸ் போட்ட என்கிட்ட கொஞ்சம்கூடவா மரியாதையா நடந்துக்க முடியாது? ஆனா இந்தப் பய எல்லார்கிட்டயும் அப்படித்தான் நடந்துக்கறான்….
நினைக்க நினைக்க அப்படியே ரத்தம் கொதித்தது. பளிச்சென்று முடிவெடுத்தார். வாலன்டரி ரிடயர்மென்டுக்கு விண்ணப்பித்தார். நிரந்தரமாக வீட்டுக்குத் திரும்பினார்.
அடுத்தது? அட, நாமே முதலாளியா இருந்துட்டாப் போச்சு. என்ன செய்யலாம்?
பளிச்சென்று தன் வீட்டுக்கு முன்னால் இருந்த ஒரு சிறு இடம் அவரை அழைத்தது. கடை போட வேண்டியதுதான். அதேபோல பெட்டிக் கடை போட்டார். பீடி, சிகரெட், சோடா, கலர், சோப்பு, பேஸ்ட், மிட்டாய், சாக்லெட் , பிஸ்கட், சிப்ஸ், முட்டை, என்று வாங்கி அடுக்கினார்.
நல்ல நாள் பார்த்துக் கடை திறந்தார்.
ஒரு இளைஞன் வந்தான். ‘‘ஒரு ரூபாய்க்கு பீடி கொடுப்பா..’’ என்றான்.
‘‘என்னது கொடுப்பாவா? ஏண்டா, என்ன வயசு உனக்கு….? என்னடா மரியாதை இல்லாமப் பேசறே?’’ கஜாவுக்குக் கோபம் கொப்புளித்தது.
‘‘யோவ், சர்த்தான் அலட்டாதேய்யா. என்னை மாதிரி கஸ்டமருங்க உங்கிட்ட பீடி வாங்கி வியாபாரம் செய்யலேன்னா நீ கடையை ஊத்தி மூடிக்கினு போக வேண்டியதுதான், தெரிஞ்சுக்க. சரி, சரி, பீடி எடு... நேரமாவுது...’’ என்று சொல்லிவிட்டு அவன் இரண்டு ரூபாய் காசை எடுத்து கஜாவை நோக்கி வீசியெறிந்தான். தன் மேல் பட்டு கீழே விழுந்த அந்தக் காசை எடுத்துக் கொள்ளவும் தோன்றவில்லை கஜாவுக்கு. அந்த அளவுக்கு ரொம்பவும் அவமானமாகப் போய்விட்டது நாலு பீடிகளை அவன் மீது தூக்கிப் போட்டார்.
‘‘ரொம்பதான் திமிர்யா உனக்கு. சீக்கிரமே கடையை மூடிடுவே...’’ என்று ஆசிர்வதித்த இளைஞன் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு போனான்.
இவற்றைக் கவனித்தபடி மனைவி உள்ளிருந்து காபி தம்ளருடன் வந்தாள்.
‘‘பார்த்தியா, இந்தப் பொடியன் என்ன பேச்சுப் பேசறான்...!’’ என்று அவளிடம் பொருமினார் கஜா.
"இவன் மட்டுமா? கண்ட கண்ட பயலுக வருவானுங்க... சிகரெட்டைப் புடிச்சு புகையை ஒம் மூஞ்சியிலேயே விடுவானுங்க. கேக்கற சாமான் இல்லாட்டி திட்டிட்டுப் போவானுங்க. இதெல்லாம் பார்த்தா முடியுமா? அவனுங்க கொடுக்கற அம்பது பைசாவிலேயும், ஒரு ரூயாயிலேயும்தானே நாம வியாபரம் பண்ண வேண்டியிருக்கு? எல்லாத்தையும் அனுசரிச்சுகிட்டுப் போக வேண்டியதுதான்....’’ என்றாள் மனைவி.
நெஞ்சில் சாட்டையாக சொடுக்கியது அவள் பேச்சு.
‘‘மதிய சாப்பாட்டுக்குக் கடையை விட்டுட்டு வந்துடாதீங்க. நானே எடுத்தாரேன். இல்லாட்டி வியாபாரம் போயிடும்...’’ சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள்.
"அடப்பாவிகளா, எல்லா கஸ்டமர்களும் மானேஜர்களாகவே இருக்கானுங்களே! உரிமையோட வேலையை மறுக்கற சுதந்திரம் போய், இப்பத் தெருவிலே போற வர்ரவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கொடுமை... ஹும்..."
கஜா மனசுக்குள் மருகி வெந்து போனார்.