
கோபத்துடன் அம்மாவின் நம்பருக்கு டயல் செய்தாள் வனிதா…
அந்தப்பக்கம் கடும் கோபத்துடன் அவளது அம்மா கத்தத் துவங்கினாள் "என்ன டி? என்ன நெனச்சிட்டு இருக்க உம் மனசுல… நீ பாட்டுக்கு உங்க அத்தக்காரிக்கு போன் பண்ணி பேசியிருக்க…. கல்யாணம் வேணாம், உங்க பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவீங்களா? அது இதுன்னு பேசியிருக்க…. பூ வச்சிட்டுப் போன அன்னைல இருந்து நிம்மதியே போச்சு எனக்கு…" நிறுத்தாமல் கத்தினாள் கற்பகம்….
"அம்மா, அம்மா கொஞ்சம் நிறுத்துரியா? என்ன பண்ணிட்டேன்னு இப்படி கத்துற? நான் சரியாதான் பேசுனேன்… உனக்குதான் புரியல… அவனப் பத்தி எனக்குத் தெரிஞ்ச விஷயத்த உன்கிட்ட சொன்னா நீயே கல்யாணத்த நிறுத்திருவ…"
"என்ன சொல்ற? அவன் மோசமானவனா? உங்க அத்தக்காரி அவன் மகன் நல்ல தருமருன்னு ஊரெல்லாம் சொல்லிட்டுத் திரியரா…"
"ஆமா… அவன் தருமரு… நீ வேறமா அவனே ஒரு உருப்புடாதவன்…"
"ஏய்… அப்படிலாம் பேசாத … உங்க அத்தைக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்…"
"ஆமா… அவங்க மகன் லட்சணத்துக்கு கோபம் வேற வருமா?"
"சும்மா இருடீ… ஆம்பளை இல்லாத வீடு… அவங்க தம்பி பிள்ளைனுதான் உனக்குப் பூ வச்சிட்டுப் போயிருக்கா…"
"ஏன்மா… நீ வேற எப்பப் பாத்தாலும் 'ஆம்பளை இல்லாத வீடு', 'ஆம்பளை இல்லாத வீடு'னு ராகம் பாடாத… இதுதான் எல்லாருக்கும் இளக்காரமாப் போச்சு… இப்ப அப்பா இல்லனு நாம என்ன செத்தாப் போயிட்டோம்… நீ தனியாதான வளர்த்த… அப்புறம் என்ன?"
"ஏய்… என்னடீ இப்படி பேசுற? எல்லாரும் நமக்கு எவ்வளவு உதவி பண்ணாங்க… அதெல்லாம் மறக்கக் கூடாது …"
"மறக்கல மா… அதுக்காக அடிமையா இருக்கனும்னு அவசியம் இல்லல்ல... ஆமா என்ன உதவி பண்ணாங்க? உன்ன வேலக்காரி மாறி வேல வாங்கிட்டு எனக்கு டிரெஸ் வாங்கித் தருவாங்க… நீ ஆம்பிளை இல்லாதவ, ஆம்பிளை இல்லாதவனு சொல்லி சொல்லியே எதுவும் பண்ண விட மாட்டாங்க…"
"இருக்கலாம் … ஆனா, அதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு இப்ப கல்யாணம் வேணானு சொல்றியா?"
"அப்படி சொல்ல நான் ஒன்னும் முட்டாள் இல்லமா… அவன் சரியான குடிகாரன்… அது மட்டுமில்லாம வேற ஒரு பொண்ண லவ் பண்றான்…. வேலைக்கும் போகல… நீ என்ன எம்.காம் வரை படிக்க வச்சிருக்க... என்ன வச்சி மகன் வாழ்க்கைய செட்டில் பண்ணிரலாம்னு பாக்குறாங்க…"
"என்ன … என் தலையில இடிய இறக்குற... உங்க அப்பன் குடியாலதான அழிஞ்சான்..."
"புரியுதா உனக்கு… உன்ன ஆம்பிளை இல்லாதவனு சொல்லி மட்டம் தட்டி பயமுறுத்தி வச்சிருக்காங்க… நீ பூ வச்சிட்டு கல்யாணம் நின்னா அசிங்கம்னு நெனச்சி பயப்படுவ… அதுக்காகதான் அவசர அவசரமா பூ வச்சிருக்காங்க…"
"என்ன என்னென்னமோ சொல்ற… இப்ப கல்யாணம் வேணான்னு சொன்னா, உங்க அப்பா வீட்டு சொந்தமே இல்லாம போயிருமே."
"அதுக்காக என்ன குடிகாரனுக்கு குடுத்துட்டு கஷ்டப்பட சொல்றியா??"
"அப்படி சொல்லல டீ…."
"நீ எப்படி சொன்னாலும் சரி… நான் அத்தைட்ட சொல்லிட்டேன்… அடுத்து உன்கிட்டதான் பேசுவாங்க… ஆம்பிளை இல்லாதவனு சொல்லி பயமுருத்துவாங்க… உன் இஷ்டம் அவன கல்யாணம் பண்ணிக்க சொன்னா பண்ணிக்கிறேன்…"
"ஏய் என்ன டீ நான் என்ன சொல்ல??"
"அது உன் இஷ்டம்…" இணைப்பைத் துண்டித்தாள் வனிதா.
கற்பகத்தின் போன் மீண்டும் சிணுங்கியது… எடுத்தாள் அவளது கணவரின் அக்காதான்…
"ஏய் கற்பகம் என் தம்பி இல்லனு அம்மாவும் மகளும் ஆடுறீங்களா? ஆம்பிளை இல்லாத வீடு தான?"
"ஆமா அண்ணி ஆம்பிளை இல்லாத வீடு தான்… ஆனா அறிவில்லாத வீடு இல்ல… அங்க அண்ணனும் நீங்களும் சேர்ந்துதான உங்க பிள்ளைய வளாத்தீங்க? ஆம்பளை இல்லாத வீடுன்ற அடையாளம் எங்களுக்கு இல்ல… என் மக படிச்சிருக்கா… அது ஆம்பளைத் துணைய விட ஆயிரம் மடங்கு மேல்…" சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் இணைப்பைத் துண்டித்தாள்…