

ரமேஷ் திருவான்மியூரில் ஒரு டீ கடையில் வேலை பார்த்து வந்தான். காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை.
சம்பளம் வெறும் 8,000 ரூபாய்தான்.
3 மாதங்களுக்கு முன்பு ஒரு கஸ்டமர் ரமேஷூக்கு ஒரு ஸ்மார்ட் போன் பரிசாகக் கொடுத்தார். ரமேஷூக்கு ஒரே குஷி. போனில் லாட்டரி விளம்பரம் வரும். ஆம் கேரளா லாட்டரி. தமிழ்நாடு லாட்டரி விற்பனையை தடை செய்து உள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆன்லைனில் ரூபாய் 10 கொடுத்து லாட்டரி சீட்டு வாங்குவான். லாட்டரி முடிவுகள் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் வரும். கேரளா டிவி சேனலில் முடிவு வரும்.
இந்த புதன் கிழமை ஒரு சீட்டு வாங்கி இருந்தான். வெள்ளிக்கிழமை முடிவு வந்தது.
அதிர்ஷ்டம் அவன் பக்கம்.. ரமேஷூக்கு ரூபாய் 1 கோடி கிடைத்தது. மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான்.
அந்த நேரத்தில் டீ கடை முதலாளி வீட்டுக்குச் சென்று இருந்தார். அப்போது ஒரு நடுத்தர வயது பெண்ணும் அவரது மகனும் அழுதுகொண்டே வந்தார்கள். ரமேஷூக்குப் பரிதாபமாக இருந்தது. அவன் ஒரு மனிதாபிமானம் மிக்கவன்.
அந்தப் பெண் தன் பெயர் பார்வதி என்றும் மகன் பெயர் ரகு என்று சொல்லி அழுதார்கள்.
ரமேஷ் “ஏன் அழுகிறீர்கள்..?” என்று கேட்க,
பார்வதி விம்மி விம்மி அழுதுகொண்டே பேசினார்...
“தம்பி… இவன் எனக்கு ஒரே மகன். ரகு. இவனுக்கு இதயம் மற்றும் சிறுநீரக பிரச்னை. உடனே அறுவை சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால் இன்னும் 6 அல்லது 9 மாதத்தில் இறந்து விடுவான் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அதுவும் ரோபோடிக் சர்ஜரி செய்ய வேண்டுமாம்.
எல்லாம் மிஷினே செய்துவிடுமாம். அது மட்டுமல்ல. அந்தச் சிகிச்சை அமெரிக்காவில் மட்டுமே செய்ய வேண்டுமாம்… லட்சக்கணக்கில் செலவு ஆகும். ரூபாய்க்கு நான் ஏங்கே போவேன்…?”
என்று அழுதுகொண்டே முடித்தார்.
ரமேஷ் அதிகம் யோசிக்கவில்லை. தனது லாட்டரி சீட்டு பிரிண்ட் அவுட்டை… பார்வதி இடம் கொடுத்து சொன்னான்.
“அம்மா.. எனக்கு இன்றுதான் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. நீங்கள் அமெரிக்காவுக்குச் சென்று ரகுவை காப்பாற்றுங்கள்…!” எனச் சொன்னான்.
பார்வதி சீட்டை வாங்கி, “தம்பி... ஜென்மத்திற்கும் நான் இந்த உதவியை மறக்கமாட்டேன்..! “ என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாகச் சென்றார்.
ரமேஷூக்கு ‘ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்கிறேன். இந்த சந்தோஷம் போதும்’ என்று தன் மனதில் நினைத்துக்கொண்டு, எப்போதும்போல டீ கடையில் வேலை செய்தான். நாட்கள் ஓடின. மாதங்கள் பறந்தன.
தீபாவளிக்கு முதல் நாள் ஒரு காரில் ஒரு பெண்ணும், ஒரு சிறுவனும் வந்தார்கள்.
ரமேஷ் அடையாளம் கண்டுகொண்டான். அது பார்வதி அம்மாவேதான்… .
ரகு திடக்காத்திரமாக இருந்தான்.
“நான் யாரு என்று தெரிகிறாதா…?”
“அம்மா.. நீங்கள் பார்வதிதானே…?” எனக் கேட்டான்.
“ஆமாம்..!” என்று சொல்லி தனது கை பையில் இருந்து ஒரு காசோலையை (செக்) ரமேஷிடம் கொடுத்துவிட்டுப் பேசினார்.
“நீங்கள் என் மகன் உயிரைக் காப்பாற்றிவிட்டீர்கள்… இது ரூபாய் 50 லட்சம். நான் உங்களுக்குத் தருகிறேன். மிச்சம் ரூபாய் 50 லட்சம் நான் உங்களுக்குக் கடன் வைத்திருக்கேன்… ரொம்ப நன்றி…!” என்று சொல்லிக் கிளம்பினார்.
ரமேஷ் வாயடைத்துப் போனான்.
கையில் ரூபாய் 50 லட்சம்.
அது சந்தோஷமாகத்தான் இருந்தது.
ஆனால்…
அதைவிட ஒரு உயிரைக் காப்பாற்றி விட்டோம் என்பது அதிக சந்தோஷமாக இருந்தது.