

திருச்செந்தூரில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்து வானில் தாராகசூரனோடு போர் புரிந்து சம்ஹாரம் செய்த இடம் திருப்போரூர். அந்த முருகனுக்கு கந்தசாமி என்று பெயர் என்று சொல்கிறது ஸத்லப் புராணம்.
கந்தசாமி கோயில் வீதியில் சாமி படங்கள் விற்கும் கடையை நடத்தி வந்தார் கணேஷ். அந்தக் கடையில் பழனி பஞ்சாமிர்தம் முதல் பூஜைக்குத் தேவையான கற்பூரம், சந்தனம், பன்னீர், முருகன் டாலர் போன்றவற்றை விற்பனை செய்து வந்தார் கணேஷ். கணேஷ் கடைக்கு பெயர் முருகன் ஸ்டோர்ஸ். வியாபாரம் நன்கு நடந்தது.
கணேஷூக்கு 2 ஆண் குழந்தைகள். அவர்களுக்கு பெயர் கந்தன் மற்றும் சக்தி வேல்.
ஒரு வயதானவர் கணேஷ் வீட்டிற்கு வந்து கணேஷிடம் மன்னிப்பு கேட்டு ஒரு நீண்ட கவரை… ஓரங்களில் மஞ்சள் தடவப்பட்டு இருந்ததை கணேஷிடம் கொடுத்தார். அது கணேஷ் பெயருக்குத்தான் வந்திருந்தது.
வந்தவர் வயதான போஸ்ட்மேன், கணேஷுக்கு 15 வருடங்களுக்கு முன் வந்தக் கடிதத்தைத் தந்தார். "ஆங்கிலத்தில் திருப்பூர் Thirupoor. திருப்போரூர் Thiripoorur.. வித்தியாசம் அதிகம் இல்லை. அவசரத்தில் அந்தக் கடிதத்தைத் திருப்பூருக்கு அனுப்பிவிட்டேன். என் தவறு அன்றே எனக்குத் தெரிந்துவிட்டது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு திருப்பூர் தபால் நிலையம் சென்று டெலிவரி செய்யாத கடிதங்களைத் தேடும்போது 'மஞ்சள் தடவிய கவர் கிடைத்தது. நான் செய்த தவறுக்கு மன்னிக்க வேண்டும்” என்று கூறினார்.
கணேஷ் கவரைப் பிரித்து படித்து, கண் கலங்கினார்.
கல்லூரியில் படிக்கும்போது காதலி வளர்மதி தனக்கு அனுப்பிய கடிதம் என்று கண்டுபிடித்துவிட்டார். வளர்மதி தனது அப்பாவிற்கு கோவைக்கு மாற்றம் ஆனதால் கோவை முகவரி கொடுத்து, வீட்டிற்கு வந்து பெண் கேட்க சொல்லி இருந்தார். கணேஷ் கண்ணீர் சிந்தினார்.
கணேஷ் போஸ்ட்மேனிடம் “இப்போது ஏன் இதைக் கொண்டு வந்தீர்கள்?” எனக் கூறினார்.
போஸ்ட்மேன் “தனக்கு குற்ற உணர்வு வருவதால் இரவில் தூங்கக்கூட முடியவில்லை… அதனால்தான் கொண்டுவந்தேன்…!” என்றார்.
“சரி... நீங்கள் போகலாம்…!” என்று சொல்லிவிட்டு யோசித்தார். கணேஷ் உடனே கோவை செல்ல தீர்மானத்தார்.
தன் மனைவியிடம் கடையைப் பார்க்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார். சென்னையிலிருந்து கோவை எக்ஸ்பிரஸில் கோவைக்கு சென்றார். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வளர்மதி அனுப்பிய முகவரிக்கு சென்றார்.
முகவரியில் ஒரு கிளினிக் இருந்தது. டாக்டர் வளர்மதி என்று பெயர் பலகையில் இருந்தது.
வீட்டின் முன்னே கிளினிக். பின்னே வீடு.
உள்ளே சென்றார். வளர்மதி வந்தார்.
“ஐ... ஐ… கணேஷ்…! வாங்க... உட்காருங்க கணேஷ்… !”
அப்போது வளர்மதி கணவர் வந்தார்.
வளர்மதி “இவர் பெயர் ரங்கசாமி" என்று சொல்லி, "இவர்தான் என் கணவர். எனக்கு 2 பெண் குழந்தைகள். ஒருத்தி பேர் ஈஸ்வரி மற்றவர் பேர் பார்வதி” என்று சொல்லிவிட்டு,
“உங்களுக்கு கல்யாணம்…?”
“நடந்துவிட்டது. எனக்கு 2 ஆண் குழந்தைகள்…!” – கணேஷ்.
ரங்கசாமி, “சார் உங்கள் கதை எல்லாம் தெரியும். நீங்கள் ஏன் அப்போதே வரவில்லை..?”
“சார்… வளர்மதி அனுப்பிய கடிதம் இப்போதுதான் கிடைத்தது… அதான்…!”
“நீங்கள் இப்போதும் வளர்மதியை…?”
“இல்லை சார்... ஒரு நண்பராகவே பார்க்கிறேன்…!” “
ரங்கசாமி பேசினார்.
“சார் எது எது எப்படி நடக்கணுமோ அது அது அப்போ அப்போ அப்படியே நடக்கும்...!”
“ஆமாம் சார். ஒரு சின்ன விருப்பம். நீங்கள் குடும்பத்துடன் ஒரு இரண்டு நாட்கள் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கி திருப்போரூர் முருகனைத் தரிசிக்க வேண்டும்! “
“சரி. நிச்சயமாக வருகிறோம். நீங்களும் அடுத்த முறை குடும்பத்துடன் வாருங்கள்! “
நட்பு காதலாக மாறும் போது;
காதல் ஏன் நட்பாக மாறக்கூடாது…?