

'என்ன ஒரு மாசாமா பையன் போனே பண்ணல. வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் பண்ணிடுவானே..! ஏன் பண்ணல?, வெளிநாட்டுல இருக்கான். பக்கத்து ஊருல இருந்தா ஒரு நடை நாமலே போய் பார்த்துட்டு வந்திடலாம். நம்மல மறந்துட்டானா? ஒரு வேளை உடம்பு செளகரியபடலையா? இல்ல நாம தான் போன் வந்ததை கவனிக்காம இருந்துட்டோமோ..?' என்று தனக்கு தானே பேசிக் கொண்டே, தன் கண் கண்ணாடியை பல இடங்களில் தேடி ஒரு வழியாக கண்டு பிடித்து எடுத்து அதனை நன்கு துடைத்து போட்டு கொண்டார் பெரியவர்.
தன் பழைய பட்டன் மொபைல் போனை கையில் எடுத்து பச்சை நிற பட்டனை அழுத்தினார். போன் ஒளிர்ந்து, மீண்டும் இருளானது. தட்டி பார்த்தார் ஒளிரவில்லை. 'ஒரு வேளை சார்ஜ் இல்லையோ..?' என்று பேசிக் கொண்டே போனை சார்ஜ் செய்தார்.
போன் சார்ஜரில் போட்டவுடன் 0% என்று காட்டியது. 'அடடா..!, போன்ல சார்ஜ் இல்ல; பத்து நாளைக்கு முன்னாடி சார்ஜ் போட்டது. அதான்... எனக்கு என் பையன் போன் பண்ணியிருப்பான்; நம்ம மேல தப்பை வச்சிக்கினு, பையனை தப்பா நினைச்சிட்டேனே, நான் ஒரு மடையன் என்று கூறிக் கொண்டே ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து போனை எடுத்து பார்த்தார். 20% சார்ஜ் உள்ளதாக காட்டியது. சந்தோஷமடைந்து மீண்டும் சார்ஜரில் போட்டார். மாலை மணி 5.00 ஆகியது. போனை எடுத்து பார்த்தார் 100% சார்ஜ் உள்ளதாக காட்டியது. இன்று கட்டாயம் போன் வரும் என்று மகிழ்ச்சியுடன் போனை கையில் வைத்துக்கொண்டு போனின் திரையை பார்த்தவாறே இரவு 10.00 மணிக்கு சாப்பிட்டார்.
ஆனால் அன்று இரவு 11.00 மணி வரையிலும் தன் மகனிடம் இருந்து போன் வரவில்லை என்று அறிந்து சற்று சோர்ந்த முகத்துடன், 'ஒரு வேளை போன் ரிப்பேர் ஆகியிருக்குமோ?' என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு தூங்க போனார்.
மறுநாள் போன் ரிப்பேர் செய்யும் கடையில் போனை கொடுத்து, "தம்பி ஒரு மாசமா போன் வேலையே செய்யவில்லை என்னான்னு பாருப்பா" என்றார். போன் மெக்கானிக் அவரிடமிருந்து வாங்கி பார்த்தார்.
"சார்ஜ் வேற 100% இருக்கே" என்று கூறிக் கொண்டே பெரியவர் போனிலிருந்து தன் மொபைலுக்கு டயல் செய்தார். மெக்கானிக் போன் ஒலித்தது. "அய்யா போன் நல்லா தானே இருக்கு" என்றார் போன் மெக்கானிக்.
"தம்பி உன் போன்லருந்து என் போனுக்கு பண்ணி பாருப்பா.., என் பையன் அவன் போன்ல இருந்து தான் எனக்கு போன் பண்ணுவான். இது கூட தெரியல..!, என்ன மெக்கானிக்கோ", என்று கூறி தன் மொபைல் எண்ணை கூறினார். மெக்கானிக் பெரியவரை பார்த்து சிரித்தபடியே, "எல்லாம் என் நேரம்" என்று கூறிக் கொண்டே பெரியவர் கூறியபடியே செய்தார். பெரியவர் போன் ஒளிர்ந்து கால் வந்தது.
"தம்பி என் போனுக்கு இந்த மாசத்துல ஏதாவது கால் வந்திருக்கா பாரு" என்றார் பெரியவர். மெக்கானிக் அவரிடமிருந்து போனை வாங்கி பார்த்தார். "இல்ல பெரியவரே உங்க போனுக்கு ஒரு மாசமா எந்த காலும் வரலேயே ஆனால்..", என்று கூற முயல, "என்ன ஆனால், உனக்கு பார்க்க தெரியலைன்னு சொல்லு, என் பையன் எனக்கு போன் பண்ணாம இருக்க மாட்டான். நான் வேற யார் கிட்டேயாவது கொடுத்து பார்க்க சொல்றேன், என்ன மெக்கானிக்கோ.." என்று மகன் மேல் இருக்கும் பாசத்தில் கோபமாக கூறி விட்டு போனை மெக்கானிக்கிடமிருந்து பிடுங்கி கொண்டு வேகமாக நடந்து சென்றார்.
ஆனால் மெக்கானிக், பெரியவர் கோபமாக பேசியதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் பெரியவரின் போனில் அவர் மகன் அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த போரில் இறந்து விட்டதாக ஒரு SMS இருந்தது. அதை கூறுவதற்குள், அவர் கோபத்துடன் போனை தன் கையிலிருந்து பிடுங்கி கொண்டு வேகமாக நடந்துச் செல்வதை வேதனையுடன் பார்த்தவாறே இருந்தார்.