சிறுகதை: காதலில் இடை சருகல்...

இந்தக் கதை தியாகம் கலந்த காதல் எத்தகைய வலிமை வாய்ந்தது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
தியாகம் கலந்த காதல்
தியாகம் கலந்த காதல்AI generated
Published on
Kalki Strip
Kalki Strip

'11 - H - அசோக் நகரில் இருந்து குருநானக் நகர் வழியாக வேளச்சேரி செல்லும் எம் டி சி பஸ்' - கோபியின் கனவில் அடிக்கடி வந்து சென்றது.

அந்த பஸ்ஸில் என்ன விசேஷம் என்று அவனுக்கு தெரியாமல் இல்லை.

இந்த பஸ்ஸில் அவன் கடந்த ஒரு வாரமாக பயணப்பட்டுக் கொண்டுதான் இருந்தான். ஆனால் கடந்த இரு தினங்களாக அவன் மனது அவனிடம் இல்லை.

எப்போது அந்த பஸ் வரும்; அதில் எப்போது அந்த தேவதை ஏறும்? அந்த தேவதை ஏறியவுடன் பின் தொடர்ந்து, அவள் குருநாத் கல்லூரி பக்கத்தில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் இறங்கி செல்வதை பார்த்து மனம் குதூகலம் அடைந்த பிறகுதான், தான் வேலை பார்க்கும் கனரா வங்கியின் வேளச்சேரியை அவன் மனசு சென்று அடையும்.

கோபி, கனரா வங்கியில், உதவி மேலாளர், மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்ப்பதால் பல இடங்களுக்கு பிரயாணப்படுவது என்பது தொழில்முறையில் தேவையாக இருந்தது.

பலமுறை பார்த்திருந்தாலும் இன்று அவளிடம் பேசுவது என்று அவன் திட்டமிட்டு இருந்தான்.

“நீங்க அசோக் நகர் ப்ளாக்ல மூன்றாவது பிரிவுல இருக்கீங்க?”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அனுபவம்
தியாகம் கலந்த காதல்

“நீங்க யாரு?”

“என் பெயர் கோபி...”

“நானும் உங்க பிளாக்ல தான் இருக்கேன்.”

"ஓ ஐ சீ!"

“உங்க அப்பாவும் எங்க அப்பாவும் ரொம்ப பிரெண்ட்ஸ். போன வாரம் முதல் ப்ளாக்கில் உள்ள எங்க வீட்டுக்கு வந்து எங்க அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.”

“மேலும் நீங்க குருநாத் கல்லூரியில் இந்த வருடம் தான் பிஎஸ்சி ஜூவாலஜி முடித்தீர்கள் அல்லவா?”

"ஆமாம்."

“உங்க பெயர் அனிதாதானே?”

"ரொம்ப கரெக்ட்."

“உங்க அப்பா ஓய்வு பெற்ற இந்தியன் வங்கியின் பொது மேலாளர்..?.”

“ரொம்ப ரொம்ப சரி.”

"வேறு என்ன எல்லாம் தெரியும் உங்களுக்கு?”

“நீங்க மேலும் கேட்டீங்கன்னா நான் சொல்ல தயாரா இருக்கேன்!”

“இப்போதைக்கு இது போதும். கல்லூரி வந்துவிட்டது நன்றி!”

அவளுடைய இந்த சிரிப்பு அவனுக்கு ஆனந்த பூங்காற்றை அலை அலையாய் அள்ளித்தந்தது.

அடுத்த முறை சந்திக்கும் போது தன்னைப் பற்றியும் தன் குடும்பம் பற்றியும் அவளிடம் சொல்லி தன் விருப்பத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தான்.

ஐயகோ!!

அவன் அன்று கண்ட காட்சி அவனுக்கு மனதில் ஒரு சுனாமியை ஏற்படுத்தியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அன்று அவள் ஒரு பியட் காரில் தன் காதலனுடன் வந்து இறங்கினாள்...

'மனம் என்னும் மகா சக்திக்கு மாமருந்து என்பது அமைதியாக இருந்து தன்னை ஆட்கொண்ட மனதை ஆழ துணிவது' என்று நினைத்துக் கொண்டான்.

இப்போதெல்லாம் கோபி பஸ்ஸில் வருவதை தவிர்த்து பைக்குக்கு மாறினான்.

அது அவனுடைய மார்க்கெட்டிங்க்கு உதவியது என்பதை விட மனதிற்கு வேறு என்ன பதில் சொல்ல முடியும்?

அவனுக்கு மேலும் இன்னொரு அடி காத்திருந்தது.

அந்த மகா கயவன் ஒரு மாதத்திற்கு பிறகு வேறொரு பெண்ணிடம் மவுண்ட் ரோட்டில் தன் பல்சரில் பாய்ந்து செல்வதை பார்த்தான்.

இப்படியான பெண்களை மயக்கும் ஒரு பித்தலாட்டக்காரனிடம் தன் அனிதா மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக திரும்பவும் தன் பஸ் பயணத்தை தொடர்ந்தான்.

அவள் பஸ்ஸிலிருந்து இறங்கி அசோக் நகர் வீடு செல்வதற்குள் பேச்சை ஆரம்பித்தான்.

“அனிதா...”

திரும்பியவள், முறைத்தாள்.

“நான் ஒன்று சொல்கிறேன்; தயவு செய்து கேட்டுக் கொள்ளுங்கள்.”

“உன் காதலன் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பல இடங்களில் சுற்றி வருவதை நான் கண்கூடாக பார்த்தேன். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.”

இதைக் கேட்டவுடன் அனிதா அக்னியாக மாறினாள்.

“It is none of your business; shut up; I know my route; this is my life -my way, my highway... don't interfere.”

இந்த முறை மனம் உடையவில்லை. நல்லது நடக்க எல்லாம் வல்ல இறைவன் வழி செய்யட்டும் என்று நகர்ந்து சென்றான்.

காலம் யாரை விட்டு வைத்தது.

ஒருமுறை அனிதா ஒரு அபார்ஷன் கிளினிக்கில் இருந்து வெளிவருவதை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளானான்.

அவள் சென்றவுடன் கிளினிக்கு சென்று தன்னை அனிதாவின் கசின் பிரதர் என்று சொல்லி அந்த மருத்துவச்சியிடம் விவரம் அறிந்தான்.

அந்த மருத்துவச்சியும் இவனுடைய நல்ல குணாதிசயங்களை உணர்ந்து உண்மையை கூறினார்.

"வந்த பெண்ணுக்கு 5 மாதத்தில் குழந்தை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே அதை தடுக்க வேண்டாம் என்று நாங்கள் ஆலோசனை கூறி வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். மற்றவற்றை பொறுப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட கோபியினுடைய மனம் வெடித்து சிதறியது.

ஒரு முடிவுக்கு வந்தான்.

இது அவளுடைய வீட்டிற்கு தெரிந்தால் நிச்சயம் அவளுடைய கடைசி வருட படிப்பு பாதிக்கும்; மேலும் அவளுடைய வாழ்க்கை சீரழிவதை கோபியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

உடனே தன் ஆபீஸில் இரண்டு நாள் விடுப்பு எடுத்து அவளுடைய காதலனுடைய இருப்பை நோக்கி பயணப்பட்டான்.

அந்தக் கள்வன் பெயர் தீபக் என்பதும், மேலும் விசாரித்ததில் அவன் மோட்டார் சைக்கிள் ஆக்ஸிடன்ட்டில் இறந்து ஒரு மாதம் ஆகிறது என்கிற செய்தி கிடைத்தது.

இதைச் சொன்னால் அனிதா அதிர்ந்து விடுவாள். மேலும் பொறாமையால் நான் இவ்வாறாக சொல்கிறேன் என்று நினைக்கவும் கூடும்.

முடிவெடுத்தான் இனி காலதாமதம் கூடாது.

சரியாக ஆறரை மணி; பொது மேலாளராக இருந்து இந்தியன் வங்கியில் இருந்து பணி ஓய்வு பெற்ற பரசுராமருக்கு ஒரு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது.

“Sir, நான் கோபி பேசுகிறேன். வேளச்சேரி, கனரா பேங்கில் உதவி மேலாளராக பணிபுரிகிறேன்.”

“நானும் நீங்கள் வசிக்கும் அசோக் நகர் காலனியில் உள்ள முதல் பிளாக்கில் வசிக்கிறேன்.”

“என்னுடைய அப்பா குமாரலிங்கம், ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரி. ஒரே மகன்; செல்லமாக வளர்த்து விட்டார்.”

“பொறுப்பு தவறி ; வாழ்க்கையில் ஒரு தப்பு செய்துவிட்டேன் என்னை மன்னிக்கவும்.”

“நாளை 6.30 மணிக்கு உங்களை என் பெற்றோர்கள் உடன் வந்து பார்க்கிறேன். மற்றவற்றை கூறுகிறேன் என்று சொல்லி வைத்தான். தொலைபேசியானது முடிவுக்கு வந்தது.”

இதைக் கேட்ட பரசுராமன் அதிர்ச்சிக்கு உள்ளாகி தன் மனைவியிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

“எது எப்படியோ; நாளை வரட்டும் மற்றவற்றை பேசிக் கொள்ளலாம். அவசரப்பட்டு எந்த காரியத்தையும் செய்து விடாதீர்கள்" - மனைவி மங்களம் பொறுமையாக பேசினாள்.

அவர்களுக்கு ஒவ்வொரு மணி நேரமும் ஒரு வருடங்களாக கழிந்தது.

அடுத்த நாள் சரியாக ஆறு அரை மணி; பெற்றோர்களுடன் வந்த கோபி பரசுராமனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றான் .

கோபியின் பெற்றோர் தன் மகனின் உடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு மன்றாடினர்.

கோபி தொடர்ந்தான்... "உங்க பொண்ணு இப்போ 5 மாத கர்ப்பிணி. இதை வெளியில் சொன்னால் உங்களுக்கு அவமானம். ஏதோ தெரியாம நடந்த ஒரு விபரீதம். நான் முழு பொறுப்பையும் எடுத்துக்கிறேன்."

"கல்யாணம் பண்ணிக்கிறதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்க அப்பாவ பத்தி தெரியும் உங்களுக்கு ... நல்ல குடும்பம்; ஒரே பையன் நான். நீங்க விரும்புனீங்கன்னா நாளைக்கு காலையில் சிவன் கோயிலில் கல்யாணம் முடிச்சுக்கலாம். எங்க வீட்டுல எல்லாரும் சம்மதம்தான்.”

“இந்த விஷயத்தை கோபி தன் பெற்றோரிடம் சொன்னபோது தன் காலனியில் இப்படி ஒரு செயல் நடந்தது தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதினாலும் அதை பொறுப்பேற்று அதற்காக கல்யாணம் வரை பேசிய தன் மகனை ஒரு விதத்தில் தைரியமாக பாராட்டினார் என்று தான் சொல்ல வேண்டும்”.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: டயப்பரை போட்டது யார்?
தியாகம் கலந்த காதல்

கோபியின் அம்மாவும் தன் மருமகளை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்..

"எனக்கு தெரியும். அனிதா நல்ல பொண்ணு தான். ஏதோ நடந்திருச்சு! நாங்க இருக்கோம். வா போகலாம்” ...

"பரமசிவத்தினுடைய மனைவி தன் மகள் அனிதாவை பார்த்து வெளியில் வா, உன் கணவர் இங்கே வந்திருக்கிறார் எல்லாம் நல்லதுக்கு தான் என்று சொல்ல..."

அனிதா முகம் வெளிறிப் போய், தலை நிமிர்ந்தாள்.

மயக்கம் அடைந்தாள். கீழே சரிந்த சரீரத்தை ஆற தழுவிக் கொண்டான் கோபி.

"நாளை நமக்கு கல்யாணம். அதற்கு வேண்டி சிவன் கோயிலில் என் நண்பன் வரதராஜன் ஏற்பாடு செய்துவிட்டார்," என்று கோபி சொல்ல...

இது தன்னை பழிவாங்கும் படலம் என்று நினைத்துக் கொண்டு அமுதா கண்ணீர் விட, பக்கத்தில் இருப்பவர்களுக்கு அது ஆனந்த கண்ணீராக தென்பட்டது.

கல்யாணம் நடந்து முடிந்தது.

கடைசிவரை எல்லா பொறுப்புகளையும் சற்றே குறைவில்லாமல் ஏற்று, தன் நன்நடத்தையால் எல்லோருடைய பாசத்தையும் அன்பையும் பெற்றான் கோபி.

அனிதாவின் கல்நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது.

குழந்தையும் பிறந்தது.

இரு வீட்டாரும் மகிழ்ந்து குலாவிட, பெயர் வைக்கும் படலமும் தொடர்ந்து வந்தது.

“எல்லோரும் குழந்தை கோபி போல் இருக்கிறது" என்று சொல்லும் போது...?

கோபி குழந்தைக்கு ‘தீபக்’ என்று பெயர் இட்டான்.

கண்கள் மயங்க, கைகள் செயல் இலக்க, கோபியிடம் தஞ்சம் அடைந்து கீழே விழுந்தாள் அனிதா!

அவளை மேலே தூக்கி கெட்டியாக அணைத்தான் கோபி..

உடல்கள் ஒன்று சேர்ந்தன. உணர்வுகள் பொங்கி எழுந்தன.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: விளங்கா விளா மரமும் ஆலமர அம்புலுவும்!
தியாகம் கலந்த காதல்

இது உணர்வுகளின் சங்கமம் என்று எல்லோரும் நினைத்தனர்.

இவ்வாறாக இவர்களுடைய இரண்டாவது பயணம் இனி தொடரும்....

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com