ரஷ்ய நாடோடிக் கதை: பேராசை பெரு நஷ்டம்..!

பேராசை வாழ்க்கையை எப்படி மாற்றும்? என்பதை இந்த சுவாரஸ்யமான கதை விளக்குகிறது.
Ivan and the Wonder Tree
தமிழ் சிறுகதை |Ivan and the Wonder TreeImage credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

ரஷ்ய கிராமம் ஒன்றில் இவான் என்ற விவசாயி, மனைவி மாஷாவுடன் வசித்து வந்தான். மாஷாவிற்குப் பேராசை அதிகம். இவான் சம்பாதித்துக் கொண்டு வருவது போதவில்லை என்று அவனைக் குறை சொல்வாள். ஒரு நாள் வீட்டில் அடுப்பெரிக்க விறகு இருக்கவில்லை. நதிக்கரைக்குச் சென்று மரத்திலிருந்து கிளைகளை ஒடித்து வரச் சொன்னாள்.

நதிக் கரையிலிருந்த பாப்லர் மரத்தினருகே சென்ற இவான், அதை வெட்டுவதற்கு கோடாலியை ஓங்கினான். “என்னை தயவுசெய்து வெட்டாதே” என்றது மரம். மரம் பேசுவதில் ஆச்சரியப்பட்ட இவான், மரத்தை வெட்டாமல் வீடு திரும்பினான். மாஷாவிற்கு கோபம் வந்தது. “மரம் வெட்டாதே என்று சொன்னால், திரும்பி வர வேண்டுமா? விறகு இல்லாமல் சமைப்பது எப்படி என்று மரத்தைக் கேள்” என்று திருப்பியனுப்பினாள்.

சொன்னது போலவே பாப்லர் மரத்தினிடம் சென்ற இவான், “என் மனைவி வீட்டில் சமைப்பதற்கு மரக்கிளைகள் இல்லை என்று சொல்கிறாள். ஆகவே, நான் மரத்தை வெட்ட வந்திருக்கிறேன்” என்றான்.

“வெட்ட வேண்டாம். வீட்டிற்குச் சென்று பார். நீ கேட்டது அங்கிருக்கும்” என்றது மரம். வீட்டிற்குப் போனவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவனுடைய வீட்டின் பின்புறம் மரக்கிளைகளும், மரத்துண்டுகளும் குவிந்திருந்தன. இது நமக்கு பல மாதங்களுக்கு வரும் என்று மகிழ்ந்தான் இவான்.

“மரத்திடம் மந்திர சக்தியிருக்கிறது. மரக்கிளைகளுக்குப் பதிலாக விறகுகளைக் கேள்” என்றாள் மாஷா. மனைவி சொன்னபடி மரத்திடம் சென்று விறகுகள் கேட்டான் இவான். வீட்டிற்குச் சென்று பார் என்றது மரம். தற்போது வீட்டின் பின்புறம், விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“இந்த விறகுகள் மட்டும் வைத்துக் கொண்டு நமக்கு என்ன பயன்? ரொட்டி செய்வதற்குத் தேவையான சோளம் இல்லை. ஆகவே, சோளம் தரும்படி மரத்தைக் கேள்” என்றாள் மாஷா.

இதையும் படியுங்கள்:
'திகில்' கதை : 13 ஆம் நம்பர் வீடு!
Ivan and the Wonder Tree

“என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளாதே. ரொட்டி செய்வதற்குத் தேவையான சோளம் சிறிது கூட இல்லை. ஆகவே, என் மனைவி சோளம் வேண்டுமென்று கேட்கிறாள்” என்று மரத்தை வேண்டிக் கொண்டான் இவான். அவன் கேட்டது வீட்டில் இருக்கும் என்றது மரம். வீட்டிற்கு வந்து பார்த்தால் தானியக் களஞ்சியம் முழுவதும் சோளத்தால் நிரம்பியிருந்தது.

மாஷா சொன்னாள், “மந்திர சக்தியிருக்கின்ற மரத்திடம் நாம் சின்னப் பொருட்களைக் கேட்கிறோம். நம்மிடம் இரண்டு பெட்டி நிறைய தங்கம் இருந்தால், நாம் வசதியாக வாழலாம். நீயும் வேலை செய்ய வேண்டி இருக்காது,” என்றாள்.

மனைவி சொல்வது சரி என்று தோன்றியது இவானுக்கு. மரத்திடம் சென்ற இவான், “எங்களுக்கு இரண்டு பெட்டிகள் நிறைய தங்கம் வேண்டும்” என்று கேட்டான். மரம் சரியென்று சொல்ல வீட்டிற்கு வந்தான்.

வீட்டில் இரண்டு பெட்டிகள் நிறைய தங்கம் குவிந்திருந்தது. இதுவரை பொருள் மீது ஆசையில்லாமலிருந்த இவானுக்கு தங்கத்தைப் பார்த்தவுடன் பேராசை தோன்றியது. கூடவே மனதில் பயம் தோன்றியது. மனைவியிடம் சொன்னான், “நம்மிடம் நிறைய தங்கம் இருப்பது தெரிந்தால் திருடர்கள் கொள்ளையடிக்க வருவார்கள். இந்த தங்கத்தை எப்படி பாதுகாப்பது. நம் இருவரால் திருடர்களை எதிர்த்து நிற்க முடியாது” என்று கவலையைச் சொன்னான்.

Two Bears
தமிழ் சிறுகதை | Two BearsImage credit: AI Image

சிறிது நேரம் யோசித்த மாஷா, “நாம் பார்ப்பதற்கு சாதுவாக இருப்பதால், பயம் எதுவுமில்லாமல் திருடர்கள் வருவார்கள். நம்முடைய உருவத்தைக் கொடூரமாக மாற்றிக் கொண்டால், எல்லோரும் நம்மைப் பார்த்துப் பயந்து ஓடுவார்கள். ஆகவே, நம்முடைய உருவத்தை பயங்கரமாக மாற்றும் படி மரத்தைக் கேள்” என்று பதிலளித்தாள். தங்கத்தைக் காப்பதற்கு இது தான் நல்ல வழி என்று தோன்றியது இவானுக்கு.

மறுபடியும் மந்திர மரத்தை அடைந்த இவான், “என்னையும், என் மனைவியையும், மற்றவர்கள் பயப்படும்படி கொடூரமாக மாற்று” என்று கேட்டான்.

“நன்றாக யோசித்துச் சொல். உங்கள் உருவத்தையா மாற்றச் சொல்கிறாய்” என்றது மரம். “ஆமாம், எங்கள் உருவத்தை மாற்ற வேண்டும்” என்றான் இவான். “வீட்டிற்குச் செல். உங்கள் உருவங்கள் மாறிவிடும்” என்றது மரம்.

இவான் வீட்டில் நுழைந்த வினாடி, அவனும் அவன் மனைவி மாஷாவும் பார்ப்பதற்கு அச்சப்படும் கரடிகளாக மாறினார்கள்.

logo
Kalki Online
kalkionline.com