

அந்த வீட்டின் வாசலில் பைக்கை நிறுத்தினான் விவேக்.
‘நம்பர் 13, சக்தி நகர்... இந்த வீடுதானே?’
தன்னிடமிருந்த விலாசத்தை சரிபார்த்துக் கொண்டான். “வீடு வாடகைக்கு” என்ற அட்டை அழுக்கடைந்து தொங்கிக்கொண்டிருந்தது. தனி வீடு. பழைய வீடுதான் என்றாலும், புதிதுபோல் தோற்றமளித்தது. சுற்றிலும் சிறிதும் பெரியதுமாக வீடுகள் ஆழ்ந்த அமைதியில் இருந்தன.
‘இப்படி ஒரு வீட்டை எங்கேயிருந்து புடிச்சாரு அப்பா? அடுத்த வாரம் இங்கே வந்து பால் காய்ச்சணும்னு அம்மா வேற பரபரன்னு இருக்காங்க. ஆனா வீட்டைச் சுத்தி இன்னும் சுத்தம் பண்ணாம இருக்கு. இதுல வீட்டுக்குள்ள பெயிண்டிங் வேலை முடிஞ்சுதான்னு என்னை வந்து பார்க்கச் சொல்லி காலைல இருந்து பத்து ஃபோன் பண்ணிட்டாங்க...?’
மனதுக்குள் பலவாறு சிந்தித்தபடியே வீட்டை நோட்டம் விட்டான் விவேக். மங்கலான தெரு விளக்குகள் சோம்பலாக மின்னிக்கொண்டிருந்தன. நீண்டு விரிந்திருந்த அந்தச் சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை.
வரிசையாக இருந்த வீடுகளும் மௌன விரதம் இருப்பதுபோல் அமைதி காத்தன. பரபரப்பான சென்னையில் இப்படி ஒரு தெருவா என்று ஆச்சரியத்துடன் பைக்கைச் செலுத்தி, இந்த வீட்டின் முன் வந்து நிற்கிறான். அவர்கள் இப்போது குடியிருக்கும் வீட்டைக் காலி செய்யச் சொன்னதால், அலைந்து திரிந்து இந்த வீட்டைப் பார்த்திருக்கிறார்கள்.
வாசல் இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே வந்தான் விவேக். கேட்டிலிருந்து சிமெண்ட் நடைபாதை வீட்டை நோக்கி நீண்டது. இருபுறமும் இடுப்பளவு குப்பைச் செடிகள் மண்டிக்கிடந்தன. வாசலில் சிறிய மஞ்சள் நிற பல்ப் உயிரோட்டம் இல்லாமல் மெல்லிய வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. கண்களைச் சுழலவிட்டபடியே நடந்து, கதவருகே வந்து கையில் இருந்த சாவியைத் துவாரத்தில் சொருகினான். ஆனால் சாவியைத் திருகும் முன்னே கதவு ஒருவித சத்தத்துடன் திறந்துகொண்டது.
யோசனையுடன் காலை உள்ளே எடுத்துவைத்தான். காலில் பிசுபிசுவென்று ஏதோ ஒட்டியது. குனிந்து என்னவென்று பார்த்தான். பெயின்ட் சிந்தியிருக்கிறதா என்று சந்தேகம். கையை மூக்கருகே கொண்டுபோனான். ஒருவித கெட்ட வாடை மூக்கைத் துளைத்தது. சுடச்சுட ரத்தம். திக்கென்றது அவனுக்கு. வெளியே வந்துவிடலாம் எனத் திரும்பிய போதுதான் கதவு சாத்திக்கொண்டதை கவனித்தான். எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் வயிற்றில் உருண்டு நெஞ்சை அடைத்து தொண்டையில் வந்து நின்றது.
கும்மென்று உட்கார்ந்திருந்த இருட்டில் ஏதோ ஒரு உருவம் முக்காடு போட்டு நிற்பதுபோல் அவன் நிழலே அவனை பயமுறுத்தியது. கையிலிருந்த மொபைலில் வெளிச்சத்தை உயிர்ப்பித்து, சுவிட்சைத் தேடிப் போட்டான். ஆனால் லைட் எரியவில்லை.
இரண்டு மூன்று முறை ஆஃப் செய்து ஆன் செய்துபார்த்தான். பலனில்லை. மொபைல் வெளிச்சத்திலேயே பயத்துடன் ஒவ்வொரு அடியாக வைத்து முன்னேறினான். நான்கடி எடுத்து வைத்திருப்பான்; மொபைல் மொத்தமாக அணைந்துபோனது.
என்னவென்று விவரிக்க முடியாத ஒரு உணர்வு அடிவயிற்றில் இம்சை செய்தது. திடீரென அவன் கழுத்தருகே யாரோ மூச்சு விடுவதுபோல் ஒரு உணர்வு. தலையைத் திருப்பாமல் அடிக் கண்ணால் பார்த்தான். அருகே யாரும் இல்லை. கையிலிருந்த கைபேசியை உயிர்ப்பிக்க முயன்றான். ஆனால் அதுவும் பயத்தில் இருண்டுபோனது. கைகளால் அருகே துழாவிப் பார்த்தான். அருகே யாரும் இல்லை.
அடுத்த இரண்டு அடி எடுத்து வைத்தபோது, அவனுடன் கூடவே யாரோ நடந்து வருவது தெரிந்தது. முதுகுத் தண்டு சில்லிட்டது அவனுக்கு. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு வார்த்தைகள் வெளிவர மறுத்தன. உடல் முழுவதும் சில்லென்ற ஒரு உணர்வு. ஆனால் அதையும் மீறி உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும் பயத்தில் வியர்த்துக்கொட்டின. வித்தியாசமான இந்த உணர்வு விவேக்கை ஏதோ செய்தது. வயிற்றில் எக்கச்சக்க அமிலம் சுரந்தது.
அதற்குமேல் உள்ளே செல்ல அவன் கால்கள் தயங்கின. அப்படியே திரும்பி வாசல் கதவை நோக்கி நடந்தான். இரண்டடி வைப்பதற்குள் அவன் முகத்தில் பளிச்சென்று ஏதோ தெறித்தது. கைகளால் துடைத்தான். ரத்தவாடைக் குடலைப் பிரட்டியது. அவசரமாகக் கையை பேண்ட்டில் துடைத்தான். இதயம் தொம் தொம் என அசுர வேகத்தில் அடித்துக்கொண்டது. இருக்கும் தைரியத்தை எல்லாம் திரட்டி கதவருகே வந்தான்.
காலில் ஏதோ இடறியது. ஒல்லியாகக் குச்சி போல் நீண்டு...
‘எலும்புக் கூடா! உள்ளே வரும்போது இருக்கலியே. இப்போ எப்படி? 13 ஆம் நம்பர் வீடு வேண்டாம்னு சொன்னா அம்மா கேட்கவே இல்ல. ஒண்ணும் மூணும் கூட்டினா நாலுடா, உனக்கு ராசியான நம்பர்னு வேற சொன்னாங்க. ஆனா இங்க வந்தா...’
பயமும் கோபமும் அவனைப் பாடாய்ப்படுத்தின. காலில் தட்டுப்பட்ட குச்சி போன்றது இப்போது நீண்டு அவன் காலைப் பிராண்டியது. இதற்குமேல் அங்கே ஒரு நிமிடம்கூட நிற்கக்கூடாதென்ற முடிவுடன் கதவை பலம்கொண்ட மட்டும் தள்ளினான். மீண்டும் முகத்தில் புளிச்சென்று ஏதோ தெறித்தது...
சட்டென்று கண் விழித்தான் விவேக்.
“டேய் விவேக், சக்தி நகர்ல இருக்கற அந்த 13 ஆம் நம்பர் வீட்டைப் பேசி முடிக்கப் போகணும்னு சொல்லியிருந்தேனே. மணி எட்டாச்சு, இன்னும் தூங்கிட்டிருக்கே. எவ்வளவு நேரம் கூப்பிடறது? தண்ணியக் கொட்டினாத்தான் எந்திரிப்பியா? பேயடிச்ச மாதிரி முழிக்காதே, சீக்கிரம் எந்திரி. ராத்திரி தூங்காம மொபைலை நோண்டாதேன்னா கேட்டாத்தானே. பாரு, பக்கத்துல வச்சிருந்த தலைகாணியை எப்படித் தள்ளிவிட்டிருக்கே. மூஞ்சில தண்ணி தெளிச்சா அதை மோந்து பாக்கறே. தூக்கத்துல இதெல்லாம் எப்படிடா. இல்ல, தூங்கற மாதிரி நடிக்கறியா? வாசல்ல இருந்த ஓட்டடையைத் தட்டிவிட்டுட்டு குச்சியை இங்க வச்சிருந்தேன். அதைக் கால்ல தள்ளிவிட்டு உதைச்சுட்டிருக்கே. ஏதாவது சொன்னாக் கேட்டாத்தானே. சரி, சரி சீக்கிரம் வா. எனக்கு வேலை கெடக்கு...”
கண்களைத் தேய்த்தபடி எழுந்த விவேக், 13 ஆம் நம்பர் வீட்டைப் பார்க்கக் கிளம்பினான். மனதின் ஓரத்தில் அவன் கண்ட கனவு உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.