

கார்த்திக் உயிர் மீண்டும் வந்தது..
வாழும் வரை நாலு பேருக்கு உபயோகமாக இருங்கப்பா..! இந்த கதையை படியுங்கள் ஏன் என்று புரியும்..
கார்த்திக் இறந்து ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. பாடை எல்லாம் கட்டி முடித்து விட்டார்கள். அவனை அதில் வைத்தும் விட்டார்கள்.
எல்லோரும் பக்கத்தில் நின்று கொண்டு அவனைப் பற்றி கண்டபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவன் தான் இறந்து விட்டானே இவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. திடீரென யாரோ கார்த்திக் என்று கூப்பிடுவது போல் இவனுக்கு கேட்கிறது. இவன் "யாரு..? யாரு..?" என்று மனதிற்குள் கேட்கிறான். இவனுக்கு ஒன்றும் புரியவில்லை; "நான் தான் இறந்து விட்டேனே, பிறகு எப்படி?" என்று யோசிக்கும் போதே, மறுபடியும் ஒரு குரல், "நான் தான் கடவுள் பேசுகிறேன்" என்றார்.
"கடவுளா? சாமி!! நான் தான் இறந்துவிட்டேனே" என்றான் கார்த்திக். "ஆமாம்..! நீ இறந்து விட்டாய்; உன்னை ஒரு மணி நேரத்திற்கு உயிர் கொடுத்து எழுப்பி விடுகிறேன்; நீ சற்று எழுந்து வெளியே சென்று போய் பார். அப்போதுதான் உன்னைப் பற்றி உனக்கு தெரியும். நீ வெளியே உலவுவது யாருக்கும் தெரியாது. நீ என்ன வேண்டுமானாலும் பேசலாம். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். யாருக்கும் நீ தெரிய மாட்டாய். ஆனால், கண்டிப்பாக உன்னைப் பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்டால்தான் உனக்கு புரியும்" என்றார் கடவுள். அவனும், "சரி.." என்றான். அவனை உயிர் கொடுத்து எழுப்பி விட்டார் கடவுள்.
எழுந்த அவன், பக்கத்தில் இருப்பவர் பேசுவதை கேட்டான்; "பிசினாரி பாரு உயிரோடு இருக்கும்போது பத்து பைசா தரமாட்டான்; சேர்த்து சேர்த்து வைத்திருந்தான். இப்போ போகும் போது எடுத்துண்டு போகப் போகிறானா?" என்றான் பக்கத்து வீட்டு முனுசாமி.
"ஆமா.. ஒன்னாம் நம்பர் கஞ்சன், அறந்த கைக்கு ஒரு துளி சுண்ணாம்பு கூட தரமாட்டான்" என்றான் இன்னொருவன். இப்படியே அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்றொனாறாக கூறிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் இவனை மகா கஞ்சன், பிசினாறி என்றெல்லாம் கூறி திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் அங்கிருந்து வேக வேகமாக பூக்காரப் பாட்டி ஓடி வந்தாள்.
"அடப்பாவி, இன்னிக்கு காலையில ஒரு முழம் பூ வாங்கிண்டு போ பொண்டாட்டிக்குன்னு சொன்னேன். விலையை கேட்டுட்டு பிசினாறி வாங்காமலேயே போயிட்டா, கடைசில உன் பொண்டாட்டி இனிமேல பூ வச்சுக்க முடியாத படிக்கு ஆயிடுத்து. ஒரு முழம் பூ வாங்கி கொடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்" என்றாள் பாட்டி. இவனுக்கு தொண்டைக்குள் துக்கம் அடைத்தது. முழுங்க முடியாமல் தவித்தான்.
அதற்குப் பிறகு உள்ளே சென்றான். இறுதி சடங்கு செய்ய ஐயர் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஐயர் அவனின் மனைவியிடம், "இறுதிச் சடங்கை ஒரு குறையில்லாமல் செய்ய வேண்டும்" என்று சொன்னார். அதற்கு அவன் மனைவி, "ஐயரே.., எனக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆகிறது. இன்று வரை என் கணவர் எனக்கு என்ன செய்தார். ஒரு முழம் பூ வாங்கி கொடுத்திருப்பாரா.. இல்லையே.. இன்னும் சொல்லப்போனால் ஒரு வேளை சோற்றை கூட எனக்கு வயிறு நிறைய போடவில்லை. எதை வாங்கிக் கொண்டு வந்தாலும் எண்ணி எண்ணி தான் வாங்கி கொண்டு வந்தார். இதில் நான் அவருக்கு சடங்கை திருப்தியாக செய்ய வேண்டுமா?? வாயை மூடிக்கொண்டு செல்லுங்கள் ஐயரே. என்னால் என்ன முடியுமோ அதைத்தான் நான் செய்வேன். போதும்.. போதும்.. அவர் என்னை ரொம்ப நன்றாக வைத்திருந்தார். நான் அவருக்கு செய்வதற்கு" என்று புலம்பினாள்.
அதற்குள் பக்கத்தில் இருந்த கார்த்திக்கின் தாயான மரகதப்பாட்டியும் வந்தாள். "அந்த கஞ்ச பையனுக்கு ஒன்னும் செய்ய வேண்டாம். மூக்கு கண்ணாடி இல்லைன்னு எத்தனை நாளா கேட்டேன். 'வாங்கி தர வாங்கி தரேன்னு' சொல்லி வாங்கியே தரல, கண்ணாடி இல்லாமலே குருடியாகவே என் காலத்தை ஓட்டி ஆச்சு. போதும் போதும் அந்த பிசினாரியோட நாங்க பட்ட பாடு.
இனிமேலாவது எங்களுக்கு நல்ல காலம் பொறக்கட்டம்" என்றாள் பாட்டி. அடுத்த படியாக கார்த்திக்கின் மகனும் தன் பங்கிற்கு எதாவது சொல்ல வாயை திறந்தான். அதற்குள் கார்த்திக் அங்கு நின்று மேற்கொண்டு கேட்க முடியாமல், "கடவுளே!! கடவுளே!! போதும்...போதும்.." என்று கத்தி கொண்டு ஓடி வந்து பாடையில் படுத்து விட்டான்.
கடவுள் அவனிடம், "என்ன மகனே..தெரிந்து கொண்டாயா உன்னைப் பற்றி? போதுமா?? இல்லை, இன்னும் வேண்டுமா??" என்றார் சாமி. "போதும்.. போதும்.. தயவு செய்து என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள். இனிமேல் என்னால் ஒரு நிமிடம் கூட உயிரோடு இருக்க முடியாது. ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வி என்னை கத்தியால் குத்துவது போல் இருக்கிறது. நான் தவறு செய்து விட்டேன் சுவாமி, இனி புலம்பி என்ன பிரயோஜனம் என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி... தயவு செய்து என் உயிரை எடுத்து விடுங்கள்" என்று கெஞ்சினான்.
கடவுளும் பதிலுக்கு, "நான் உன் உயிரை எடுக்கத்தான் போகிறேன். உனக்கு புரிய வேண்டும் என்பதற்காகத்தான் சிறிது நேரத்திற்கு உயிரை கொடுத்தேன். இப்போது நீ அழுது புலம்புவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. வாழும் போதே அடுத்தவர்களுக்கு உபயோகமாக வாழ வேண்டும். பணம் பணம் என்று பணத்தை சேர்த்து வைத்தாய். ஆனால் இன்று...?" என்றார். பிறகு அவன் உயிரை நீக்கி விட்டு மறைந்து விட்டார் கடவுள்...
(இந்த கதை ஒரு கற்பனை கதையாக இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் இறந்தவுடன் உறவினர்களும் சுற்றியிருப்பவர்களும் பேசுவதை வைத்து தான் அவனுடைய உண்மையான குணமானது வெளிப்படும் என்பது உண்மைதானே?)