சிறுகதை: எழுத்துக்குறிகளின் எக்காளம்!

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் நிறுத்தற்குறிகளின் சுவாரசியமான கதை இதோ!
எழுத்து குறிகள் | punctuations
எழுத்து குறிகள் | punctuationsImage credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

தெருவெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டன… ஒரு சிறிய திருமண மண்டபம் வாடகைக்குத் தயாராகின… ஒலி-ஒளி பெருக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.

நிகழ்ச்சி தலைமை அழைப்பாளராகப் பத்தி… வாக்கிய அமைப்புகளின் தலைவர் ஏற்பாடு செய்யப்பட்டார். நிகழ்ச்சி ஆரவாராமாகத் துவங்கப்பட்டது.

எழுத்து குறிகள் ஆரவாரம் செய்து மேடையை அதிரவைத்தன. தலைவர் எல்லோரையும் அமைதி காக்க செய்துவிட்டு… ஒவ்வொருவராய் பேச அழைத்தார்.

முதலில் ஆச்சரியக் குறி முந்திகொண்டது. அடுத்து கேள்விக் குறி தலையைச் சாய்த்தபடி, "நான்தான் சாதனையாளன்" என மார் தட்டிக்கொண்டது. மேற்கோள் குறி… வானத்தை மேல்நோக்கி பார்த்தபடி யோசனையில் இருக்க… "என்னாப்பா நீ பேசலையா?" என கேட்க அவசரஅவசரமாக மேடையேறி ஏதோ உளறியது.

அடுத்து… கால் புள்ளி காலை சாய்த்தவாறே நடந்து மேடையேறி “நான் சாதிப்பேன்டா.. ஒருக்-கால் சாதிக்கலைன்னா என்னை நீக்குங்கடா“ என சவால் விட்டது.

பெரிய எழுத்து மேடையேறி... கெத்துக் காட்டியது.

அடுத்து மேடையேறிய அடைப்புக் குறி… "இரு… இரு... என்னிடம் சிக்காமலாப் போவீங்க“ என கிண்டலாகச் சிரித்துவிட்டு இறங்கியது.

கடைசியாக மேடையேறிய முற்றுப்புள்ளி மௌனத்தில் ஆழந்திருக்கும் துறவியைப்போல அமைதியாகச் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, “நான் பேசலை… செயலைக் காட்டுறேன்” என இறங்கிக்கொண்டது.

பத்தி வாக்கிய தலைவர்… “உங்கள் அனைவருக்கும் ஒரு போட்டி. யார் எல்லாவற்றையும் அடக்கி ஆள்கிறீர்களோ அவர்கள்தான் இந்தப் போட்டியின் வெற்றியாளர். இந்தக் கூட்டம் முடிந்தது” என முடித்துக்கொண்டது.

எழுத்துக் குறிகள் போட்டிக்குத் தயாராகின. அவை அழகிய மலர்களும், மரங்களும் உள்ள பூங்காவிற்குள் நுழைந்தன.

அங்கு பல காதல் ஜோடிகளைக் கண்டன. அதில் ஒரு காதல் ஜோடியை ஒரு ‘எழுத்துக் குறி’ தேர்விட... அதையே மற்றவைகளும் பின்பற்றத் துவங்கின.

ஒரு இளைஞன் தன் காதலிக்குக் காதல் கடிதத்தைக் கொடுத்தான். அந்த கடிதம்… கவிதை நடையில் காதல் கடிதமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: புது உறவு!
எழுத்து குறிகள் | punctuations

அந்தக் கடிதத்தைக் காதலி பார்த்தபொழுது இதுதான் தக்க தருணமென ‘ஆச்சரியக் குறி’ உள்ளே நுழைந்து விட்டது. கடிதத்தைப் படித்தாள் காதலி… கவிதையில் லயித்தாள். "இப்படியெல்லாம் கூட உங்களுக்கு கவிதை எழுத வருமா!" என ஆச்சர்யத்தோடு காதலனை நோக்கினாள். அப்பொழுது இருவரின் காதுகளில் ஒலித்தது ஒரு குரல் ”உங்கக் காதலுக்கு நான்தான் உதவி” என அலட்டிக்கொண்டது ‘ஆச்சர்யக் குறி’.

அதே இளைஞன்… சிறிது நாட்களில் காதலித்தப் பெண்ணையே திருமணம் செய்துகொண்டான். குடும்பம் குதூகலமாகப் போய்க்கொண்டிருந்த்து. "இப்படிவிடக்கூடாதே கும்மியடிக்க வேண்டியதான்" என உள்ளே நுழைந்தது அந்த எழுத்துக் குறி.

ஒரு நாள் கணவனின் பாக்கெட்டில் ஒரு தாள். அதில் ஒரு கவிதை... இப்பொழுது அவளின் கண்களில் காதல் கடிதமாகப்பட்டது. அதில் காதல் ரசம் வழிந்துகொண்டிருந்தது. கணவனை நோக்கி, “என்ன இது? யாருக்கு இது? எந்தச் சிறுக்கி அவ?” இப்படி கேள்விக்கணைகளாகத் தாக்கினாள்.

அவன் மிரண்டான்… “இது உனக்காக எழுதப்பட்ட கவிதைதான். அதில் சற்று காதல் ரசம் அதிகமாக உள்ளது. வேறு யாருக்கும் அல்ல” என சத்தியமிட்டுப் போராடினான்.

எழுத்து குறிகள் | role of punctuation in life
எழுத்து குறிகள் | punctuationsImage credit: AI Image

அவள் முகம் வெகுநேரம் செவ்வண்ணமாய் காட்சியளித்தது அது வெட்கத்தால் அல்ல... கோபத்தால். ‘கேள்விக் குறி’ “அப்பாடா... நம்ம நாரதர் வேலை வெற்றிதான்“ என தலைக்கனத்தால் துள்ளியது.

சிறிது நேரம் சமாதானத்திற்குப்பின் ஒரு வருடம் நிறைவடைந்தது. அந்தத் தம்பதிக்கு ஒரு தேவதை பிறந்தது. அவளது மனைவி அவளைப் பார்த்து, ”மவனே, உன் கிருஷ்ண லீலை எல்லாம் கட்டுப்படுத்த மகள் வந்துவிட்டாள்” என்ற பொழுதுதான்…. “இரு தேவதைகளின் அன்புப் பிடியில் சிக்க வைத்துவிட்டேன் பார்த்தியா?... யூ அர் அன்டர் அரெஸ்ட்... இதோ வாரண்ட்...” எனக் கூவியது ‘மேற்கோள் குறி.’

தேவதை வளர்ந்தது. அதன் சிரிப்பில்... அழகில்… விளையாடுவதில்... அந்தத் தம்பதியர் லயித்து தங்கள் துயரங்களை மறந்தார்கள். அந்தச் சமயத்தில் “பார்த்தீர்களா? நீங்கள் இளைப்பாற என் உதவி அவசியம்” என ‘கால் புள்ளி’ தரையில் கால் பாடாமல் அந்தரத்தில் பறந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மாயப் போர்வைக்குள்...
எழுத்து குறிகள் | punctuations

ஒரு வருடம் ஆனதும் அந்தத் தேவதைக்கு பிறப்புச் சான்று வாங்க அரசு அலுவலகம் சென்றான் அந்த இளைஞன். பிறப்பு சான்றில் தலைப்பெழுத்து கேட்டார். அதுவும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும் என்றார்கள். ”டேய் நான்தான்டா ராஜா” என ‘பெரிய எழுத்து’ அரசாட்சி செய்தது.

தேவதை வளர்ந்தாள்; பருவமெய்தினாள்… அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணமாகி வாழ்க்கை என்ற பந்தத்தில் மகிழ்ச்சியோடு அடியெடுத்து வைக்கும் வேளையில்… “தேவதையே… வாழ்க்கை எனும் பந்தத்தில் நுழைந்துவிட்டாய் இனி (என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?) என்று சத்தமாகப் பாடல் பாடியது அடைப்பு குறி.

அந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்பொழுதே… “டேய் யார்ரா நீங்களெல்லாம்… இதோ வர்றேன்டா?” என்ற கர்ஜனைக் குரல் கேட்டதும் வகுப்பிற்குள் நுழையும் ஆசிரியரைக் கண்ட மாணவ மாணவிகளைப்போல அனைத்து எழுத்து குறிகளும் எக்காளத்தை மூட்டைக் கட்டிவிட்டு அமைதி பிள்ளைகளாக மாறிவிட்டது. மாற்றியது ‘முற்றுப்புள்ளி’தானே!

logo
Kalki Online
kalkionline.com