

ஷைத்தானின் கிசுகிசுப்பிலிருந்து தப்பிக்க வலதுபுறம் ஒருக்களித்து படுத்திருந்தார் மானசீகன். மானசீகனின் இயற்பெயர் முகமது பாட்சா. வயது 65. உயரம் 160 செமீ. டை அடித்த கோரை முடி தலைகேசம், யானைக்கண்கள், முந்திரிப்பழ மூக்கு, வட்ட முகம், இலக்கியம் படைத்து படைத்து ரேகை தொலைத்த வலதுகை.
மானசீகன் மணிமேகலை பல்கலைக்கழத்தில் ஆய்வக தொழில் நுட்ப வல்லுநராக பணிபுரிந்து 2018ல் பணி ஓய்வு பெற்றவர்.
மானசீகன் ஒரு நாடறிந்த எழுத்தாளரும் கூட. துப்பறியும் கதைகள், பாவனை விஞ்ஞானக் கதைகள், காதல் கதைகள், அரசியல் நையாண்டிக் கதைகள், இஸ்லாமிய நீதிக்கதைகள், திகில் கதைகள் என அனைத்து ஜேனர்களிலும் எழுதி குவித்தவர்.
தனது மூடியிருக்கும் இமைகளின் அருகில் யாரோ கண் பதித்து தனது தூக்கத்தை வேவு பார்ப்பதாக உணர்ந்தார் மானசீகன்.
அத்துடன் போன்சாய் ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, ஜக்ளிங் தன் மூக்கு நுனியில் வெம்மை கூட்டியதை அவதானித்தார் மானசீகன்.
சட்டென்று கண்விழித்தார்.
தாத்தா முகத்தருகே டைட் குளோசப்பில் பேரன் அர்ஹான் அவனது முகத்தை பதித்திருந்தான்.