சிறுகதை: உடைத் தகுதி!

two friends and a young man
Tamil short story: two friends and a young manImg credit: AI Image
பிரபு சங்கர்

About 55 years of experience in journalism, writing and taking photographs. Contributed to all the Tamil magazines of all periodicities. Developed skill through the guidance of Sri Savi, Editor, Dinamani Kadir. Have written hundreds of articles on various subjects; nearly 300 short stories; 12 novels and published hundreds of photographs. Have brought out 30 books, Worked as 1. Sub Editor in Ambalam, Net magazine under Sri Sujatha and Sri Thiruppur Krishnan; 2. Sub Editor in Kumudam Bhakthi Special and 3.Editor-in-Charge for Dinakaran Aanmigam magazines.

Updated on
Kalki Strip
Kalki Strip

நண்பரின் சிபாரிசு கடிதத்துடன் வந்த அந்த இருபத்திரண்டு வயது பையனைப் பார்த்ததும், சுகவனத்துக்கு சந்தேகம். நண்பர் கடிதத்தில் எழுதியிருந்ததற்கும், பையனின் தோற்றத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லையே! போனில் பேசும்போதும் இவன் நிலைமையை அவர் வர்ணித்த விதத்துக்கும், நேரில் பார்ப்பதற்கும்தான் எத்தனை வித்தியாசம்!

ஆமாம், ஜீன்ஸ் பேண்ட், ரேமாண்ட் முழுக்கைச் சட்டை, அட… பவர் ஷூ….

அவனைப் பார்க்கப் பார்க்க சுகவனத்துக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. நேரடியாக இந்தப் பையனிடமே கேட்பது நாகரிகமாக இருக்காது; இந்த அம்பை விட்டுவிடுவோம், எய்தவனையே கேட்போம் என்று தீர்மானித்துக் கொண்டார். அதனால், ‘‘தம்பி, இப்போதைக்கு உன்னை அமர்த்திக் கொள்ள தோதான வேலை எதுவும் என்னிடம் இல்லை. கொஞ்ச நாள் போகட்டும், உனக்காகவே ஏதேனும் வேலையை உருவாக்கித் தர முடியுமா என்று பார்க்கிறேன்,‘‘ என்று அவனிடம் சொல்லி அனுப்பி விட்டார்.

நண்பர் தேவசகாயம், நல்ல மனிதர். பிறருக்கு உதவுவதில் எப்போதுமே முன்னிற்பார். அவரால் பயனடைந்த சில இளைஞர்களை சுகவனத்துக்கும் தெரியும். ஆனால் அப்படி உதவி பெற்றவர்கள் எல்லோரும் அதற்குத் தகுதியானவர்களாகவே இருந்தார்கள். அதாவது வசதி குறைவானவர்களாக, குடும்ப பாரத்தை சுமக்க வேண்டியவர்களாக, போதிய குடும்ப வருமானம் இல்லாதவர்களாக. அத்தகையவர்களாகப் பார்த்துப் பார்த்துதான் தேவசகாயம், தன் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் உரிமையுடன் அனுப்பி வைப்பார். அவர்களும் மனமுவந்து உதவி செய்வார்கள்.

ஆனால், இந்தப் பையன் அப்படி ஒன்றும் வசதிக் குறைவானவாகவே தெரியவில்லையே!

தேவசகாயத்திடம் போனில் விளக்கம் கேட்கலாமா? வேண்டாம். நேருக்கு நேர் பேசி புரிந்து கொள்வதுதான் சரியானது. அதோடு அடுத்தடுத்த வேலைகளாலும், பையனைப் பார்த்த கோப உளைச்சலாலும் அவரிடம் தொலைபேசியில் சரியாகப் பேச முடியாமல் போகலாம். நேரேயே சந்திப்போம்…

அதேபோல சந்தர்ப்பம் வந்தது. தேவசகாயம் தானே போன் செய்தார். ‘‘நான் சிபாரிசு செய்த பையனைத் திருப்பி அனுப்பி விட்டீர்களாமே, உங்களிடம் ஒரு வேலை காலியாக இருப்பதாகவும், சரியான இளைஞனை சிபாரிசு செய்யவும் நீங்கள்தானே கேட்டீர்கள்?‘‘ என்று சற்றே கவலையுடன் விசாரித்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: முகமூடி!
two friends and a young man

‘‘நானும் அதைப் பற்றிதான் உங்களிடம் பேச வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது உங்கள் வீட்டுப் பக்கமாகத்தான் வந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா, சந்திக்கலாமா?‘‘ என்று சுகவனம் கேட்டார்.

‘‘வாருங்கள், வாருங்கள், நான் வீட்டில்தான் இருக்கிறேன். அதோடு அந்தப் பையனும் இங்கே என்னுடன்தான் இருக்கிறான்…‘‘ என்றார் தேவசகாயம்

‘நல்லதாகப் போயிற்று,‘ சுகவனம் நினைத்துக் கொண்டார். இருவரிடமுமே பேசிவிடுவது ரொம்பவும் வெளிப்படையாக இருக்குமல்லவா!

காலிங் பெல் விசையை அழுத்தியதும் கதவைத் திறந்தவன் அந்தப் பையன்தான்! இப்போதும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான விலையுயர்ந்த பனியனையும், அரைக்கால் சட்டையையும் அணிந்திருந்தான். உடனே சுகவனம் முகத்தில் வெறுப்பு படர்ந்தது.

‘‘வாங்க, வாங்க,‘‘ என்று தன்னை வரவேற்ற தேவசகாயத்தின் கைகளை நட்பாகப் பற்றிக் கொண்டார் சுகவனம். இருவரும் வரவேற்பறை நாற்காலிகளில் அமர்ந்து கொண்டார்கள். குறிப்பறிந்து தேவசகாயத்தின் மனைவி இரண்டு கண்ணாடி தம்ளர்களில் பழரசம் கொண்டு வந்து வைத்தாள். ‘‘எப்படி இருக்கீங்க? வீட்ல மேடம் சௌக்கியமா?‘‘ என்று சம்பிரதாயமாக விசாரித்தாள்.

அந்த நல விசாரிப்புக்கு நன்றியாக இதமான பதிலைச் சொன்னார் சுகவனம். பிறகு உடனே விஷயத்துக்கு வந்தார். ‘‘ஏன் தேவசகாயம், நீங்கள் பொதுவாக அவசியத் தேவை இருப்பவர்களுக்குதான் உதவுவீர்கள். ஆனால் இந்தப் பையனைப் பார்த்தால் பொருளாதாரக் குறை உள்ளவனாகத் தெரியவில்லையே! அவனுடைய சட்டை, பேண்டி, ஷூ… ஏன் இதோ இப்போதுகூட விலையுயர்ந்த உடைகளைத்தான் அணிந்திருக்கிறான்…‘‘

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இறுகப்பற்று!
two friends and a young man

அதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தார் தேவசகாயம். ‘‘ஓ, அதுதான் உங்கள் பிரச்னையா? சுகவனம், இந்தப் பையன் போட்டிருக்கிறதெல்லாம் என் பிள்ளைகளோட உடைகள்தான். இவங்கள்லாம் நல்ல ஃப்ரண்ட்ஸ். இப்பகூட என் பையனோட சேர்ந்து கூகுள்ல ஏதோ வேலை வாய்ப்பைத் தேடத்தான் வந்திருக்கான்….‘‘ என்றார்.

அதைக் கேட்டு ரொம்பவும் வெட்கப்பட்டார், சுகவனம். ‘‘அடடா, அப்படியா விஷயம்? சாரி. நான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். அவனைக் கூப்பிடுங்கள், நானே அவனை நாளைக்கு என்னை என் அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.‘‘

உடனே, ‘‘ரவி…‘‘ என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தார் தேவசகாயம்.

logo
Kalki Online
kalkionline.com