

“இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்படறீங்க? பொறுமையா இருங்க.”
“என்னத்த பொறுமையா இருக்கறது? உனக்கு என் வலி புரியாது மீனாட்சி.”
“எல்லாம் புரியுதுங்க. அதுக்காக என்ன பண்ண முடியும்? கோபத்தைக் காட்ட இது சரியான நேரமில்லை. வீடு தேடி வரவங்ககிட்ட அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுடாதீங்க. என்ன காரணத்துக்காக வீட்டுக்கு வராங்களோ தெரியல. ஃபோன் பண்ணி வீட்டுக்கு வரலாமா அண்ணின்னு கேக்கற உங்க தம்பிகிட்ட, வேண்டாம்னு சொல்ல எனக்கு மனசு வரல. அதான் வரச் சொன்னேன். அவங்க வந்துட்டுப் போகற வரைக்கும் உங்க கோபத்தை மூட்டைகட்டி வைங்க.”
மனைவி மீனாட்சியின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசத் தோன்றாமல் மௌனமாகப் பழைய நினைவுகளில் மூழ்கினார் சுந்தரேசன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை, தம்பி கதிரேசன் குடும்பத்துடன் நல்ல உறவுதான் இருந்தது. அண்ணன் தம்பி பாசத்தில் யார் கண்பட்டதோ தெரியவில்லை. கதிரேசனின் பேச்சில் மாற்றம் தெரியத் துவங்கியது. வசதி வாய்ப்புகள் பெருகப் பெருக நடுத்தர குடும்பச் சூழ்நிலையில் இருக்கும் அண்ணனை ஒதுக்க ஆரம்பித்தான்.
உடன் பிறந்த ரத்தம், புது பணக்கார மிதப்பில் பேசுகிறான் என்று பெரிதுபடுத்தாமல் கடந்தார் சுந்தரேசன். ஆனால் கதிரேசனின் பேச்சும் நடவடிக்கையும் தன் மனைவியையும் குழந்தைகளையும் அவமானப்படுத்தும் வகையிலும், சீண்டும் வகையிலும் இருந்ததைப் பொறுக்க முடியவில்லை அவரால்.
வேலை விஷயமாக சென்னைக்குப் போன மூத்த மகன் விக்ரமை, வீட்டு வாசலில் நிற்க வைத்து அவமானப்படுத்தி அனுப்பியதும் கொதித்துப்போனார் சுந்தரேசன். ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார்.
“எல்லாம் பணம் பேசுது மீனாட்சி. இவ்வளவு வருஷம் அவனும் நம்மளை மாதிரி நடுத்தர வர்க்கமா, வர சம்பளத்தில் கைக்கும் வாய்க்கும் கணக்கு பார்த்துட்டுதான் இருந்தான். அப்பெல்லாம் நானும் நீயும் நம்ம பசங்களும் தேவையா இருந்தோம்.
இப்போ பணம் வந்த பவுசு, அவனை வளர்த்து ஆளாக்கின என்னையே இளக்காரமாப் பேச வைக்குது. நம்ம விக்ரம் என்ன, அவன் வீட்டுலயே நிரந்தரமா தங்கவா போனான்? இன்டர்வியூவுக்கு சென்னை போனவன், சித்தப்பா வீட்டுக்குப் போய்த் தங்கிக்கலாம்னு போனதுல என்ன குத்தம் இருக்கு?
அவனை வீட்டுக்குள்ளகூட விடாம வாசல்ல வச்சு அவமானப்படுத்தி அனுப்பியிருக்கான். இந்தக் காலத்துப் பசங்க இதையெல்லாம் சாதாரணமா விடமாட்டாங்க. ஆனா நம்ம விக்ரம் எதுவும் பேசாம அமைதியா வந்துட்டான்.
இன்டர்வியூனு வந்து தங்குவே. அப்புறம் வேலைக்குப் போகணும்னு வருவே. அப்புறம் உனக்கு செலவுக்கு, அது இதுன்னு ஏதாவது வாங்கித்தரது இப்படி என் தலையில மிளகாய் அரைக்கலாம்னு உங்க அப்பா ஐடியா கொடுத்தாரான்னு விக்ரம்கிட்ட என்னெல்லாம் பேசியிருக்கான்.
என்னால இதை ஜீரணிக்க முடியல மீனாட்சி. வேண்டாம், இனிமேல் அவன் உறவே வேண்டாம். அவன் சம்பாத்தியத்தை நம்பி நம்ம வாழ்க்கை ஓடல. இனிமே அவன்கூட நாம யாரும் பேசிக்கவேண்டாம். நம்ம பசங்ககிட்டயும் சொல்லி வை.”
சுந்தரேசன் இப்படிச் சொல்லி விளையாட்டு போல மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. கதிரேசன் அதன் பிறகு ஃபோன்கூட செய்யவில்லை. பேச்சுவார்த்தை கூட இல்லாமல் அண்ணன் தம்பி உறவே அறுந்து போயிருந்தது. இப்போது திடீரென்று ஃபோன் செய்து வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறான். என்னவாக இருக்கும், ஒன்றும் புரியவில்லை சுந்தரேசனுக்கு.
என்னவாக இருந்தாலும், கோபத்தையும், மன வருத்தத்தையும் உள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு இயல்பாக இருப்பது போல் முகமூடி அணிந்துகொண்டார் சுந்தரேசன்.
வாசலில் நிழலாடியதும் எட்டிப் பார்த்த சுந்தரேசனுக்கு, கதிரேசன் தயங்கியபடி நிற்பதைப் பார்த்ததும் ஆத்திரம் வந்தது. அன்று விக்ரம் இப்படித்தானே அங்கே நின்றிருப்பான் என்ற நினைப்பே அவர் கோபத்தை அதிகமாக்கியது. கைகளைப் பிசைந்தபடி மீனாட்சி அவரைப் பார்க்க, வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் வரவேற்றார் சுந்தரேசன்.
“வாப்பா கதிர், உள்ளே வா. நல்லா இருக்கியா?”
இயந்திரத்தனமாக வந்து விழுந்தன வார்த்தைகள். அவர் அணிந்திருக்கும் முகமூடியை கதிரேசன் புரிந்து கொண்டாலும், அதைக் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை.
“அண்ணா, அண்ணி, என்னை மன்னிச்சுருங்க. நடந்ததை எல்லாம் மறந்துருங்கன்னு சொல்லக்கூட எனக்குத் தகுதி இல்லை. பணம் என் புத்தியை மழுங்கடிச்சுருச்சு. ஆனா அதுக்கு சரியான தண்டனையை காலம் எனக்குக் கொடுத்துடுச்சு.
நம்ம ஆதித்யாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி மூணு மாசமா பார்க்காத வைத்தியம் இல்ல. இங்க ஒரு டாக்டர்கிட்ட காட்டச் சொன்னாங்க. டாக்டர் அப்பாயின்மென்ட் திடீர்னு நாளைக்கு மாத்திட்டாங்க. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் உங்க வீட்ல தங்கிக்க நீங்க அனுமதிக்கணும். ஹோட்டல்ல ரூம் போட்டுத் தங்கற அளவுக்கு வசதி இல்ல. அவனோட வைத்தியச் செலவுக்கே எல்லாம் கரைஞ்சு போச்சு. எப்படியாவது அவனைப் பழையபடி பார்க்கணும். அதுக்காக என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்யறேன்.”
உடைந்து அழுத கதிரேசனை ஓடி வந்து அணைத்துக் கொண்டார் சுந்தரேசன். அவர் அணிந்து கொண்டிருந்த முகமூடி கதிரேசனின் கண்ணீரில் நனைந்து காணாமல் போனது.