
நேற்று (22-01-25) காலமான ஓவியர் மாயா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உயிரூட்டும் ஓவியத்துடன் 1988 கல்கி தீபாவளி மலரில் வெளியான சிவசங்கரி எழுதிய கதையை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து இங்கு பிரசுரம் செய்கிறோம்.
*****************************************************
-சிவசங்கரி
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமா என்று குட்டியாய்த் தலை தூக்கிய சபலத்தை உடனடியாய் நசுக்கிவிட்டுப் படுக்கையிலிருந்து முரளி எழுந்தபோது மணி ஆறரை. பிரித்துவிட்ட 'ஸ்ப்ரிங்' மாதிரி துள்ளி எழுந்தவன், பாயில் தலையணையை வைத்து ஒரே சுருட்டாய் சுருட்டி, அறையின் மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற படுக்கைகளின்மேல் போட்டான்.
கூடத்துச் சுவரை ஒட்டி அமைத்திருந்த நடையில், வாஷ்பேசின் முன்னால் நின்று அழுத்த பல் தேய்த்துக் கொப்பளித்தான். மேலே இருந்த கண்ணாடியில், முகத்தை அஷ்டகோணலாக்கி பல்லின் வெளுப்பை ஆராய்ந்து, டூத் பேஸ்ட் விளம்பரம் மாதிரி ஸ்டைலாய்ப் பல்லிளித்துத் தன்னைத்தானே பார்வையிட்டுக் கொண்டான்...
சற்றுத் தள்ளி இருந்த ஜன்னலுக்கு எதிராய் நின்று, குனிந்தும், நிமிர்ந்தும், குதித்தும், உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்தும் சுமார் பத்து நிமிஷங்கள்போல உடற்பயிற்சி செய்தான்
முகத்திலும் கழுத்திலும் மார்பிலும் வழிந்த வியர்வையைத் துண்டால் துடைத்துக்கொண்டே சமையலறையில் நுழைந்தபோது, அங்கே ஈ. காக்காயைக் காணவில்லை.
ஓர் அடுப்பில் குக்கர் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க, மற்றதில் வால் பாத்திரம் சும்மா உட்கார்ந்திருந்தது.
மேடையில் இருந்த பாத்திரத்திலிருந்து இரண்டு கரண்டி பாலை வால் பாத்திரத்தில் விட்டு, அடுப்பைப் பற்ற வைக்கையில், தஸ்ஸு புஸ்ஸென்று சுற்றிய புடவையுடன் குளியலறையிலிருந்து அவசரமாக வெளியே வந்தாள் அம்மா. இரண்டு சுரண்டி பாலை வால் பாத்திரத்தில்
''என்னடா காப்பியா கலக்கறே? இரு, நா வந்து தாறேன்..."
அம்மா சொன்னது காதில் விழாதமாதிரி, பில்ட்ரின் அடிப்பாகத்திலிருந்து நீர்த்த பழுப்பு திரவத்தையும் சர்க்கரையையும் பாலில் கொட்டினான்.
''அடேய்... அது டிகாஷன் இல்லேடா. ரெண்டாந்தரம் விட்ட தண்ணி! டிகாஷன் ஜாடில இருக்கு. நாந்தான் வர்றேன்னு சொல்றேனில்லே?''
அடுப்பை அணைத்து பாத்திரத்தை ஒரு சுழற்று சுழற்றி டம்ளரில் ஊற்றி, மடக்மடக்கென்று குடித்தான் முரளி,
"ஆ... ஹ்ஹா... இந்தத் தண்ணிக் காப்பியே இவ்வளவு நல்லாயிருக்கே. அப்ப நீங்கள்லாம் ஸ்பெஷல் டிகாஷன் போட்டு குடிக்கறது எப்பிடியிருக்கும்! அனாவசியமா காசு வேஸ்ட் பண்றீங்க, உங்களுக்குச் சிக்கனமே போதாது மதர்' என்று டம்பளரை அம்மா முகத்தருகில் நீட்டி நீட்டிப் பேசினவன். காலி டம்ளரைக் குழாவில் கழுவி மேடையில் கவிழ்த்தான்.
அருகே வந்து அம்மாவின் புடவையைத் தொட்டுப் பார்த்தான்.
"என்னம்மா இது, கலரே தெரியாம இவ்வளவு பழசா போயிட்டதயா உடுத்தப் போறீங்க? இந்த மாசம் சம்பளத்துல உங்களுக்கு நல்லதா ரெண்டு நூல் புடவை எடுத்துடலாமா?"
உதட்டைச் சுளித்துக் கேலியாய்ச் சிரித்தாள்.
''ஆமாண்டா... கழுத்துல தாலிக்கயிறு இல்லே. ஆனா குழந்தைக்கு இடுப்பு அரை ஞான்கொடி வாங்கணும்னு ஒருத்தி சொன்னாளாம்! உனக்கு வேலைக்கே வழியைக் காணும், இதுல ஆசைக்கு மட்டும் கொறைச்சல் இல்ல... நீ எப்ப வேலைக்குப் போறியோ - சம்பாரிச்சு, எனக்கு நூல் புடவை வாங்கித் தரப் போறியோ? ஹும்...."
புருவத்தை உயர்த்தி ஆச்சர்யப் பார்வை பார்த்தான்.
"அட, அடல்ட்ஸ் ஒன்லி உதாரணமெல்லாம் சொல்றீங்களே, நான் எவ்வளவு சின்னப் பையன், பாருங்க இன்னும் பால்வாசனையே மாறலே... என்கிட்ட நீங்க இப்பிடி சலிச்சுக்கலாமா? இருந்திருந்து எனக்கு இப்பத்தான் இருவத்திரண்டு வயசாவுது, இனிமே மீசை முளைச்சு அது நரைக்கறதுக்குள்ளாற ஒரே சம்பளம் கூடவா வாங்கமாட்டேன்! அப்ப உங்களுக்குப் புடவை என்ன, பெரிய மில்லே வாங்கிடலாம்! இப்போதைக்கு, இருக்கறதைப் புதுசா பண்ணிக் கொடுக்கறேன்... அதான் இஸ்திரி செய்யப்போறேன், உங்க புடவை ஏதாச்சும் இருந்தா குடுக்கறீங்களாம்மா?"
''எம் புடவைக்கு இஸ்திரிதான் ஒரு கேடு...ப்ச்...''
சலிப்போடு அம்மா சமையலைத் தொடர, முரளி வெளியே வந்தான்.
கூடத்து மேஜைமேல் ஒரு ஜமக்காளத்தை விரித்து, அதன்மீது இஸ்திரிப் பெட்டியை நிமிர்த்தி, ப்ளக்கைச் செருகி வாசலுக்கு வந்தான்.
''காலை வணக்கம் தந்தையே... பேப்பருக்குள்ள உங்க முகம் எந்தப்பக்கம் இருக்குதூன்னு சொன்னீங்கன்னா அங்க வந்து நின்னுகிட்டு பேசுவேன்..."
பேப்பரைத் தழைத்து அப்பா, சிடுசிடுப்போடு சுத்தினார்.
''காலவேளைல ஸினிமா டயலாகாட்டம் பேச்சு என்ன வேண்டிக் கிடக்குது! ஒழுங்கா ஒரு 'குட்மார்னிங்' சொல்லத் தெரியுதா உனக்கு' 'காலை வணக்கம்' சொல்ல வந்திட்டாரு பெரீசா...''
'குட்மார்னிங்தான் உங்களுக்குத் தெரியுமே அப்பா... அதையே சொல்லிட்டா அப்புறம் திரில்லே இருக்காதே! கோவிச்சுக்காம உங்க சர்ட்டு, பேண்டெல்லாம் குடுத்தீங்கன்னா. இஸ்திரி பண்ணித் தந்துடுவேன்..."
பவ்யமாய் யாசகம் கேட்டுறமாதிரி முரளி கையேந்தி நிற்க, சிடுசிடுப்பு குறைந்து, ஆனால் விறைப்பு குறையாத குரலில் அப்பா பேசினார்.
''இப்ப எதுக்கு இஸ்திரி பண்ணிக்கிட்டிருக்கே? இன்னிக்கு அந்த மருந்துக் கம்பெனி இண்டர்வியூ இருக்குதில்லே? நேரத்தோட குளிச்சிட்டு போகக்கூடாது? கடைசி நிமிலத்துல வேர்க்க விறுவிறுக்க போய் எதையாச்சம் உளறிட்டு வர்ற ஒரு தரமாச்சும் செய்யாம இருக்கலாம் இல்ல?''
நின்ற போஸ் மாறாமலே முரளி தலையை ஆட்டினான்.
''நேர்முகம் தேர்வு இன்றில்லை தந்தையே, நாளை வெள்ளிக்கிழமை காலை பத்து மணி சுபவேளை...''
"அடச்சே... இன்னொரு தரம் இப்பிடி எங்கிட்ட பேசினே, உனக்கு வேலையே குடுக்க வேணாம்னு நானே எல்லார்கிட்டவும் சொல்லிடுவேன். போ. போயி அந்த கோட் ஸ்டாண்டுல என் துணிங்க இருக்கு. எடுத்து இஸ்திரி போட்டு வை... கண்ணை மூடிக்கிட்டு குருட்டாம்போக்குல பெட்டித் தேய்க்காதே. நீல கலர் சாட்டு பாக்கெட்டுல இருபது ரூபா. நேத்து அப்ளிகேஷன் அனுப்பப் பணம் வேணும்னு கேட்டியே... எடுத்துக்க... இந்தச் செலவுக்கு எப்ப விடிவு வருமோ!"
"மிக்க நன்றி தந்தையே...."
கையிலிருந்த பேப்பராலேயே அவர் அடிக்க வர, உள்ளே ஓடினான் முரளி.
படுக்கை அறை வாசலில் நின்று கதவில் இரண்டு தரம் தட்டி, “அண்ணி... உள்ளே வரலாமா? டிரஸ்ஸு கிஸ்ஸு பண்ணிக்கிட்டிருக்கிங்களா? ரெண்டாவது வார்த்தை சும்மா ஒரு எதுகை மோனைக்காகச் சொன்னதுதான், வேற ஒண்ணும் தப்பா நா சொல்லலை...' என,
கையில் துணி மூட்டையோடும் முகத்தில் வெட்கத்தோடும் வெளிப்பட்ட அண்ணி, முட்டையைப் பொத்தென்று இவன் கையில் போட்டாள்.
"இஸ்திரிக் கடைதானே ஒழுங்கா உள்ள வந்து எடுத்திட்டுப் போகாம, தினம் இப்பிடி கிண்டல் வேற! எல்லாம் எங்கிட்டதான் வாய், வெளில பெசிய சமர்த்துப் பையன் மாதிரி வேஷம்!"
"வேஷமா? நான் யாருகிட்ட போட்டேன்? நான் உண்டு, என் 'வேலையில்லாத் திண்டாட்ட' கவிதைகள் உண்டுனு ஒழுங்கால்ல இருக்கேன்? என்னைப்பத்தி உங்ககிட்ட யாரு வத்தி வெச்சது?"
''ம்? யாரும் வத்தியும் வெக்கலை, கத்தியும் வெக்கலை! நேத்து உங்க இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் உங்க டைப் ஹையர் பரீட்சைக் காசுப் பணம் கட்டிட்டு வந்தேன். அப்ப பிரின்ஸிபால்தான் சொன்னாரு, 'நல்ல பையன் முரளி! ஹையரும் பாஸ் பண்ணிட்டா நிச்சயமா வேலை கிடைச்சிடும்!'னு ஒரே ஐஸ். வீட்டுல வந்து பார்த்தால்ல தெரியும்!"
சரக்கென்று பரவின சந்தோஷத்தை மறைக்கத் தெரியாமல். "பணம் கட்டிட்டீங்களா? ரொம்ப தேங்க்ஸ் அண்ணி... இதுக்குத்தான் வேலைக்குப் போற அண்ணி வேணுன்றது! சரி. உங்களுக்கு ரெண்டு நாளைக்கு இலவசமாக இஸ்திரி செய்து தரப்படும்!" என்று குதூகலத்தோடு முட்டையைத் தூக்கிக்கொண்டு கிளம்பினவளை, அண்ணி 'கொஞ்சம் இருங்க முரளி" என்று நிறுத்தினாள்.
அலமாரியிலிருந்த வெளிர் ரோஸ் நிற சர்ட் ஒன்றை எடுத்து நீட்டினாள்.
"பாத்தீங்களா முரளி. இந்த சர்ட்டைப் போன மாசம்தானே உங்க அண்ணனுக்காக வாங்கினேன்! அப்ப பிடிச்சுது.... இப்ப! பொம்பளை மாதிரி ரோஸ் கலர்ல சர்ட் போட்டா ஆபீஸ்ல எல்லாரும் சிரிக்கறாங்க. முரளி சின்னப்பையன், அவனே இனிமே போட்டுக்கட்டும்'னு சொல்லிட்டாரு! உங்களுக்கு சைஸ் சரியா இருக்கும் இல்லே?"
"எல்லாம் சரியா இருக்கும். இல்லாட்டி சரி பண்ணிட்டா போவுது! கொண்டாங்க அத, டெரிகாட்டன் சர்ட்டுதானே? நாளைக்கு இண்டர்வியூவுக்குப் போட்டுட்டுப் போய்த் திறப்பு விழா செஞ்சிடலாம்!" திரும்பிய முரளி நினைத்துக்கொண்ட மாதிரி நின்று, இடுப்பை வளைத்து வணங்கினான். "அண்ணன் குளிக்கறாரோ வந்ததும் என்னுடைய வந்தனத்தைத் தெரிவிக்கவும்!''
பேசிக்கொண்டே எல்லாருடைய துணி மூட்டையையும் சேகரித்து மேஜையடியில் போட்டுவிட்டு, இஸ்திரி பெட்டி சூடு ஏறி விட்டதா என்று அறிய டபரா தண்ணீரில் கையை நனைத்துப் பெட்டியில் தெறித்துப் பார்த்தான்.
'சொய்ஸ்' என்று சப்தம் வர சூடேறிய பெட்டியால் துணிகளைத் தேய்க்க ஆரம்பித்தான்
பின்புறமாக வந்து எட்டிப் பார்த்த தங்கை புவனா, “சீக்கிரமா முடிச்சிட்டுப்போ... நா என் பிளவுஸ், தாவணிய அயர்ன் பண்ணிக்கணும்...'' என, செய்துகொண்டிருந்த வேலையிலிருந்து கவனத்தைத் திருப்பாமல், "ஏன்? என்கிட்டவே குடேன்! ஒருவழியா! நானே செய்துடுவேன் இல்லே?' என்றான் முரளி.
''நீயா? அப்பறம், நாலணாலக் கொண்டா. எட்டணாலக் கொண்டானு கூலி கேட்டியே! அதுக்குக் கடையிலயே குடுத்து வாங்கிக்கலாம்!"
"ஏன், எனக்குன்னா காசு குடுக்கமாட்டியா? கடையைவிட நம்ம சார்ஜ் ரொம்பக் குறைச்சலாத்தான் இருக்கும்... அப்புறம். அவன் நீளமாய் பட்டியல் போட ஆரம்பிக்க "அய்யோ - உன்னோட பேச எனக்கு நேரம் இல்லப்பா....'' என்றவாறு உள்ளே ஓடினாள்.
ஒரு வழியாய் வேலையை முடித்து, குளித்துவிட்டு முரளி வெளியே வருகையில், அம்மா தயாராய் கையில் பையும் ரேஷன் கார்டுமாய் நின்றிருந்தாள்.
''இப்பவே போயிட்டா அதிகமாக கூட்டம் இருக்காது முரளி. வெயிலுக்கு முன்னே எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு நடந்துவர உனக்கும் வசதியா இருக்கும்..."
முரளி தலையாட்டிக்கொண்டே அன்றைய பேப்பரை எடுத்து ஒரு நோட்டம் விட்டான்.
"போகலாம்.... போகலாம்... இன்னிக்கு ஏதாச்சும் அப்பாயிண்ட்மெண்ட்ஸ் இருக்கானு பார்த்துட்டுப் போறேன்..."
அம்மா சலிப்போடு சூள் கொட்டினாள்.
என்ன முரளி, வேலை இருக்கும்போது ஜோக்கடிச்சுக்கிட்டு! எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பாத்துக்கிட்டு வெளியே போயிட்டாங்க... இப்ப இருக்கிறது நானும் நீயும்தான்... ரேஷன் கடைக்கு நீ சீக்கிரமாய்ப் போயிட்டு வந்திட்டா, ரெண்டு பேருமா சாப்பிட்டு முடிச்சு நான் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம் இல்லே? திரும்பிப் பார்க்கறதுக்குள்ளாற எல்லாம் ஆபீஸ்லேருந்தும், ஸ்கூல்லேருந்தும் திரும்பிடுவாங்க... பாப்பா இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சிருக்கு... அது எந்திரிக்கறதுக்குள்ளாற நா படுத்தத்தான் உண்டு... இல்லாட்டி 'பாட்டி... பாட்டி'னு ஏதாச்சும் பேசி தொணப்பிடும்!"
'அட, கொஞ்சம் மூச்சு விட்டுக்கங்கம்மா! என்னமோ நீளமா பேசிக்கிட்டே போறீங்களே! பேப்பர்ல் எனக்கு ஏத்த மாதிரி ஏதாச்சும் வேலைக்கு விளம்பரம் வந்திருக்கானு பாக்கறேன்னு சொன்னேன். சில நேரத்துல, பாக்ஸ் நம்பர் குடுக்காம நேரா அட்ரஸ் போட்டுக் குடுத்திருப்பான். அப்ப, சடார்னு முந்திக்கிட்டு நேரப்போய்ப் பார்த்தம்னா, நல்லதுதானே? அதான்.. இருங்க, மம்..ம்ஹீம்.. இன்னிக்கு எல்லாமே பாக்ஸ் நம்பர் போட்டுத்தான் வந்திருக்கு... சரி பையைக் குடுங்க...''
பையையும், எண்ணெய் தூக்கையும் தூக்கிக்கொண்டு செருப்பை மாட்டிக்கொண்டவன். ஒரு நிமிஷம் நின்றான்.
''ஏம்மா பக்கத்து வீட்டு ரேஷன் கூட முதல் வியாழன்தானே? வாங்கிட்டு வந்திடட்டுமா...?
அம்மா, லேசாய்த் தலையில் தட்டிக்கொண்டாள்.
"நீ அவளுக்கு வேலைக்காரன்... ரேஷனும் அதுவும் வாங்கி வந்து சாய்க்கறத்துக்கு... போடா போக்கத்தவனே! நமக்கு மட்டும் வாங்கிட்டு வா போதும். ஊருக்கு உபகாரியா நீ இல்லேனு யாரும் அழல.... போயிட்டு வா...''
எதுவும் பதில் பேசாமல் முரளி படி இறங்கினான், அம்மா கதவைத் தாள் போட்டுக்கொண்டதும் பக்கத்து வீட்டு வாசலில் நின்று, சாத்தியிருந்த கதவின் நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த, சப்தம் கேட்டு வெளியே வந்த அம்மாள் இவன் கையில் இருந்தவைகளைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.
"வாப்பா.... ரேஷனுக்கா போறே? எண்ணெய் துளிக்கூட இல்லே. என்ன செய்யிறதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன், நல்லவேளை.. கொஞ்சம் இரு, கார்டு எடுத்திட்டு வர்றேன்...''
கார்டு, பை, தூக்கு எல்லாவற்றையும் எடுத்து வந்து கொடுத்தவள், "இதென்னப்பா சர்ட்டு? நல்லாருக்கே... எங்கே வாங்கினே சொல்லு, இவருகிட்ட வாங்கிக்கச் சொல்லலாம்...'' என, முரளி பெருமிதமாய்ச் சிரித்தான்.
"இதெல்லாம் அவரு வாங்க முடியாதுங்க. ரொம்ப காஸ்ட்லி துணி... நா மட்டும்தான் இதைப் போடணும்!"
"அதென்னப்பா அது! என்னதான் விலை, சொல்வேன்...""
''மயக்கம் போட்டுறாதீங்க... இது பிளாட்பாரத்துல எடுத்தது. அஞ்சு ரூபா! நல்லால்லே? இப்ப இந்த மாதிரி லூஸா காட்டன் சர்ட் போடறதுதான் பேஷன்!"
காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு நடந்தவனை அந்த அம்மாள் அவசரமாய்க் கூப்பிட்டாள்.
கொஞ்சம் இரு முரளி... காப்பி கலந்து தரேன்; சாப்பிட்டுட்டுப் போயேன்!"
"காப்பியா... வேணாங்க... இப்பத்தான் சாப்பிட்டு வந்திருக்கேன்... ஆனா, எனக்கு ஏதாச்சும் பண்ணித்தான் ஆவேன்னு நீங்க பிடிவாதமா இருந்திங்கன்வா ஒண்ணு செய்யலாம். நாளைக்கு எனக்குக் காலைல ஒரு இண்டர்வியூ இருக்கு... பஸ்ஸில போனா ரொம்ப நேரமாயிடும்...அதனால. உங்க வீட்டுக்காரரோட சைக்கிளை ஒரு அரை நாளுக்கு, போனாப் போறதுனு உங்க திருப்திக்காகவேணா நா 'யூஸ்' பண்ணிக்கறேன்..
பக்கத்து வீட்டம்மாள் பக்கென்று சிரித்தாள்.
"தாராளமா எடுத்துக்கயேன்... அவரு ஸ்கூட்டர் வாங்கிட்ட பிற்பாடு, சைக்கிள எங்க தொடறாரு! அது சும்மாத்தான் இருக்கு... நீ நாளு முழுக்க வேணாலும் எடுத்துக்க!''
ரேஷனில் சாமான்கள் வாங்கி வந்தபிறகு, அம்மாவோடு ஒன்றாய் உட்கார்ந்து
சாப்பிட்டு, அம்மா மதியத் தூக்கத்தை ஆரம்பிக்கையில் இவன் வழக்கம்போல் லைப்ரரிக்குப் போனான்.
தினசரி பேப்பர் முதல், வாரப் பத்திரிகைகள். வேலை வாய்ப்பு செய்தி வரை கரைத்துக் குடித்துவிட்டுத் திரும்பியபோது, அம்மா மாலை டிபன் செய்வதில் ஈடுபட்டிருந்தாள்.
அவள் தடுத்தும் கேட்காமல், கோணல் மாணலாகச் சப்பாத்தி இட்டுக் கொடுத்து, அதிலேயே இரண்டைப் பிய்த்து நின்றபடியே வாயில் திணித்துக்கொண்டு டைப் கிளாஸுக்குப் போய்விட்டு திரும்புகையில் இருட்டத் தொடங்கியிருந்தது
வீட்டு வாசவில் அண்ணன், அண்ணி... கையில் குழந்தை. பையுடன்.
"எங்க போறீங்...."என்று ஆரம்பித்தவன், சட்டென்று நிறுத்திவிட்டு அசட்டு சிரிப்பு சிரித்தான்.
"ஸாரி.. போகும்போது எங்கே போறீங்கன்னு கேக்கக்கூடாதில்லே? சரி. எங்கயிருந்து திரும்பி வருவீங்க? குழந்தைய வேற வேற தூக்கிட்டுப் போறீங்க, கோவிலுக்கா?"
அண்ணி கேலியாய்ச் சிரிக்க, அண்ணன் முறைத்தான்.
"உனக்கெதுக்கு இந்த வேண்டாத விவரமெல்லாம்? ஒழுங்கா ஒரு வேலையத் தேடிக்க....வழிய விடு, எங்களுக்கு சினிமாவுக்கு நேரமாச்சு!''
"அட சினிமாவுக்கா போறீங்க. என்ன படம்? 'அக்னி நட்சத்திரம்'தானே? நீங்க மட்டும் போக வேண்டிய படமாச்சே! காதல் காட்சி நடக்கறது புரியாம பசில பாப்பா அழ ஆரம்பிச்சா என்ன பண்ணுவிங்களாம்? பேசாம் பாப்பாவ எங்கிட்ட விட்டுட்டு நிம்மதியா நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க... என்ன நா சொல்றது?"
இவன் முடிப்பதற்குள் உள்ளேயிருந்து அம்மா வெளியே வந்து கடுகடுத்தாள்.
"அவங்களே எடுத்திட்டுப் போகட்டும் பாப்பாவ... எனக்கு வெளிய போக வேண்டிய வேலை இருக்கு... நீ நடுவுல புகுந்து குட்டையைக் குழப்பாதே முரளி...''
முரளி தலையைச் சாய்ந்து மெதுவாய்ப் புன்னகை புரிந்தான்.
"நீங்க பாட்டுக்கு உங்க வேலையப் பாருங்கம்மா... பாப்பாவ நா கவனிச்சிக்கறேன். எனக்கும் பொழுதுபோகணுமில்லே?" பேசிக்கொண்டே குழந்தையைத் தூக்கிக்கொண்டு அண்ணியிடமிருந்து பையை வாங்கித் தோளில் மாட்டிக்கொண்டான்.
"பாப்பா குட்டி..... நீயும் நானுமா 'ஓ' போயிட்டு வரலாமா?" குழந்தையிடம் பேசியவன் அம்மா பக்கம் திரும்பியவன், "ஏதாச்சும் மாளிகைச் சாமான் வாங்கணும்னா சொல்லுங்கம்மா. இப்பிடியே பொடிநடையா போய் நானும் பாப்பாவுமா வாங்கிட்டு வந்திடறோம்..."
அம்மா சொன்னவைகளை மனசில் குறித்துக்கொண்டு,பாப்பாவைக் கொஞ்சியவாறே நடந்தான்.
வழக்கமாக மாலை அரட்டை நடக்கும் இடத்தில், பார்க்கின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்திருந்த நாலைந்து பேர்களும் இவனைப் பார்த்ததும் மெலிதாக விசிலடித்தார்கள்.
"மச்சி குழந்தையோட வருதும்மா! என்னப்பா, நேத்து கல்யாணம், இன்னிக்குக் குழந்தையா? என்னப்பா.... ஜிபூம்பா வேலையா!''
முரளி உற்சாகமாய்ப் பாப்பாவை ஒரு தரம் தலைக்குமேல் தூக்கிப் போட்டு பிடித்தான்
"எங்கண்ணன் பெத்த குலக்கொழுந்துப்பா இது! தினம் இங்க சும்மா உக்காத்து உக்காந்து வெறுத்துப் போச்சா, அதான் நமக்கெல்லாம் பொழுதுபோக, பாப்பாவத் தூக்கிட்டு வந்திட்டேன்! எப்பிடி பாப்பா மூக்கும் முழியுமா நல்லால்லே? அப்பிடியே சித்தப்பா ஜாடை!''
ஆளுக்காள் குழந்தையைத் தொட்டுப் பார்த்து சீண்ட, அது அழும்போது மறுபடி ஆளாளுக்கு சேஷ்டைகள் செய்து சமாதானப்படுத்த, அன்று வழக்கத்தை விடவும் அதிக சுவாரஸ்யத்தோடு பொழுதைக் கழித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, அப்பாவும். புவனாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்...
"என்னண்ணா, உன் தோஸ்து கும்பல் முழுக்க பாப்பாவைப் பார்த்துச் சிரிச்சிருக்குமே? 'நா பார்த்துக்கறேன்'னு வரிஞ்சுகட்டிகிட்டு. வேண்டாத வம்பை விலைக்கு வாங்கினியா?"
முரளி குழந்தையின் வயிற்றில் வாயை வைத்து பார் என்று சத்தம் எழுப்ப, அது களகளவென்று சிரித்தது.
"ஏன் சிரிக்கறாங்க! இப்ப பாப்பாவும் எங்க கும்பல்ல சேர்ந்துக்கிச்சு தெரியுமா? நாளைக்குப் பாப்பா இல்லாம நா மட்டும் தனியா போனா, பயலுங்க என்னைச் சேர்க்கவே மாட்டாங்க!''
ஆமாமா.... முன்ன சும்மா 'சுலர்' பார்த்துக்கிட்டு இருந்தீங்க... இப்ப கையில் குழந்தை இருந்தா, இன்னும் தைரியமா பார்க்கலாம் இல்ல?" என்று புவனாவின் முணுமுணுப்பை "ரொம்ப பேசினீன்னா, நீ யாருக்கும் தெரியாம உன் ப்ரெண்டோட பியூட்டி பார்லருக்குப் போய் புருவத்தைச் சீர் செஞ்சிகிட்டு வந்ததை அம்மாகிட்ட ஓதிவிட்டுடுவேன்!" என்று புன்னகை மாறாமல் பயமுறுத்தி அடக்கினவன், அம்மாவுக்கு வேலை வைக்காமல் பராக்கு காட்டிக்கொண்டே பாப்பாவுக்குச் சாதத்தைத் தானே ஊட்டினான். பின் தானும் சாப்பிட்டு, கூடத்திலேயே பாயை விரித்து, பக்கத்தில் பாப்பாவையும் விட்டுக்கொண்டு அணைத்தவாறே தூக்கிப் போனான்.
மறுநாள் காலையில், இண்டர்வியூக்குக் கிளம்பித் தயாராய் நிற்கையில் அப்பா, ''ஒரு நிமிஷம் முரளி...." என்றார்.
"அவங்க கேக்கற கேள்விக்கெல்லாம் பார்த்து நிதானமா பதில் சொல்லு.... பணம் ஏதாச்சும் வேணுமா?"
"வேண்டாம்பா, நேத்து குடுத்ததிலேயே பாக்கி இருக்குது! சைக்கிளில்தான போயிட்டு வரப் போறேன்! அதனால பஸ் சார்ஜ்கூட கிடையாது!
அண்ணன் "ஆல் தி பெஸ்ட் முரளி...." என்றவன். ஒரு தரம் அவன் அலங்காரத்தை அழுந்தப் பார்த்துவிட்டு, "பார்த்தியா... உன்னமாதிரி சின்னப் பசங்க போட்டாதான் இந்த ரோஸ் கலர் எடுப்பா இருக்கு...." என்று தோளில் தட்டிவிட்டுப் போனான்.
அந்த குறுகிய வராந்தாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் எல்லாமே நிரம்பியிருக்க, கையில் இருந்த பைலை மார்புடன் அணைத்தபடி ஒரு ஓரமாய் நின்ற முரளியின் தோளை யாரோ தொட்டார்கள்.
"யா... யாரு... அட, சுந்தர்! என்னடா உனக்கும் இன்னும் வேலை கிடைக்கலியா? ''
எதிரே சோர்வாய் நின்றிருந்த சுந்தர், விரக்தியுடன் 'ப்ச்' என்றான்.
"கிடைச்சிருந்தா இங்க ஏம்பா இந்த கூட்டத்துல லோல் படப் போறேன்! இனிமே கிடைக்கும்னு நம்பிக்கைகூட விட்டுப் போச்சுடா முரளி - நாம பி.காம். முடிச்சு ரெண்டு வருஷமாயாச்சு! ஹும்... இனிமயா கிடைக்கப் போவுது?""
முரளி ஆதரவாய் அவன் கையைப் பிடித்து "ஹேய்... கமான்... என்னடா ரெண்டு வருஷத்துக்கே இவ்வளவு அலுத்துக்கறே.... படிப்பு முடிஞ்சதும் மதுரைக்குப் போனியே, அங்க ஒண்ணும் ட்ரை பண்ணலியா?" என, யாராவது என் கதையைக் கேட்கமாட்டார்களா என்ற ஏக்கத்துக்கு ஒரு விடிவுக் காலம் பிறந்த மாதிரி சுந்தர் மடமடவென்று பேச ஆரம்பித்தான்.
'அங்கதாண்டா போனேன்! போயி மதுரை வீதில கால் தேயத் தேய ஆபீஸ் ஆபீஸா ஏறி இறங்கினதுதான் மிச்சம். இப்ப ஆறு மாசமா மெட்ராஸ்ல வேலை கிடைக்கறது சுலபம்னு இங்கதான் எங்க அத்தை வீட்டுல தங்கியிருக்கேன்... ஊர்ல, பெத்தவங்கதான் 'தண்டச்சோறு'னு திட்றாங்கன்னா, இங்க அத்தையும் அதையே பூடகமா பேசறாங்க! ஏண்டா, நீயே சொல்லு, வேலை கிடைக்காதது என் குத்தமா? என்னமோ வேலைக்குப் போகமாட்டேன்னு நா சத்தியம் செஞ்சிட்டு, அடம் பண்றாப்பல வாய்க்கு வந்தபடி ஏசறாங்களே? இவங்க வாயை அடைக்கிற மாதிரி ஒரு நல்ல வேலை கிடைச்சு, நாலு காச விட்டெறிஞ்சிட்டோம்னா நல்லது... எங்கே? எத்தனை இண்டர்வியூவுக்குப் போனாலும் வேற எவனாது சிபாரிசோட வந்திடறான்! இல்லே, வெறும் முந்நூறு தரேன் நானூறு தரேன், டெம்பாரியா வேலை செய்யறியா?'னு கூசாம கேக்கறான்? இதுக்காடா மூணு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சோம்? இப்பக்கூட பாகு, இந்த இடத்திலேயும் முன்னேற்பாடா வேற எவனாவது அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரே வாங்கி வெச்சிருப்பான்.... சும்மா நம்பளக் கூப்பிட்டு பொழுதப் போக்கறாங்க... ராஸ்கல்ஸ்...''
குறுக்கே எதுவும் பேசாமல் சுந்தரின் புலம்பலைக் கேட்டவன். பேச்சை மாற்ற எண்ணி. "யாரும் வேணும்னே நம்பளை ஏசணும்னு ஏசலைடா சுந்தர்... ஊர் உலகத்துல எல்லார் வீட்டு பிள்ளைங்களும் அமர்க்களமா வெள்ளைச் சட்டை, டைனு வேலைக்குப் போயிட்டு வர்றப்போ நம்ம விட்டுப் பிள்ளை மட்டும் இப்படி சும்மா இருக்கறானேன்ற ஏக்கம்தான்... சரி... அந்தப் பேச்சை விடு... ஆமா. காலேஜ்ல படிக்கறப்போ பிரமாதமா டிராமா, கதை எல்லாம் எழுதுவியே. அதெல்லாம் இன்னமும் வச்சுகிட்டுதானே இருக்கே! வேலை கிடைக்காட்டி என்னடா, கதை எழுதியே பெரிய எழுத்தாளராயிடலாமே!'' என. பிடித்துக்கொண்டு தொடர்வதற்கு மறுபடி ஒரு நூலிழை கிடைத்தமாதிரி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான் சுந்தர்,
''கதையாவது, டிராமாவாவது, அதுக்கெல்லாம் மனசுல நிம்மதி வேணாமா? அது இல்லாதப்ப என்னத்த எழுதறது!''
"நிம்மதிய நாமதான் வரவழிச்சுக்கணும்... மனசு புழுக்கமா இருந்தா நாமதான் கதவுகளைத் திறந்து வச்சுகிட்டு, காத்தும் வெளிச்சமும் மனசு பூரா பரவி, நிம்மதி உண்டாகப் பண்ணணும்...."
சுந்தர் தலையை நொடித்து, மறுபடி சூள் கொட்டினான்.
அசிரத்தையுடன் பாக்கெட்டிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து, ஒன்றை வாயில் பொருத்திப் பற்ற வைக்க முனைய. முரளி அதைப் பிடுங்கி அணைத்தான்.
"இது இண்டர்வியூ நடக்கற எடம்டா.... இப்பிடி ஹாலுக்குள்ள சிகரெட் பிடிக்கறது தப்பு...''
"ப்ச்... எல்லாம் தப்பு! எதுதான் சரி? மாசம் மாசம் அப்பா ஊர்லேருந்து அனுப்புற காசுல பாதிக்கு மேல அத்தைகிட்டதான் குடுக்கறேன்... அப்பிடியும் அதுக்கு திருப்தியில்ல. இதச் செய் அதச் செய்னு ஏதாச்சும் ஏவிக்கிட்டே இருக்கும்! படிச்ச பையன்னு ஒரு மரியாதை வேணாம்? காப்பிப் பொடி வாங்கிட்டு வா, பையனை ஸ்கூல்ல விட்டுட்டுவான்னு சகட்டுமேனிக்கு விரட்டலாமா? இப்ப நீ கூடத்தான் இருக்கே....இத்தனை கேவலமா, எடுபிடி பையனாட்டம்...
அவன் முடிக்கும் முன், பியூன் வந்து, "யாரு சார் சுந்தர்? உள்ளே கூப்பிடறாங்க..." என முகச்சுளிப்பு மாறாமலே சுந்தர் உள்ளே போனாள்.
இரண்டாம் நிமிஷம் திரும்பி வந்தபோது, சுந்தரின் முகத்தில் கோபம் கூடியிருந்தது.
"என்ன கேட்டாங்க சுந்தர்? பாஸிட்டிவா ஏதாச்சும் சொன்னாங்களா?"
"சட்... நா உள்ள போனவரைக்கும் போதுண்டா... நீ வேற போக வேணாம்! நா ஏற்கெனவே சொன்னமாதிரி யாருக்கோ வேலை குடுக்க நிச்சயம் தீர்மானிச்சிருப்பாங்க... அதான், என்னை உக்காரக்கூட சொல்லல. ஏனோதானோன்னு இரண்டு கேள்வி கேட்டுட்டு, கடைசியா உங்க ஷூ என்ன விலை மிஸ்டர்'னு கேட்டாங்க... போடான்னு கத்திட்டு வந்திட்டேன்..."
முரளி சிரித்தான்.
"எதாச்சும் காரணத்தோடதான் இதுமாதிரி கேள்வியெல்லாம் கேப்பாங்க... நீ வெளிய போய் வெயிட் பண்ணு. என்னை என்ன கேக்கறாங்கன்னு பார்க்கலாம்!"
இரண்டு மூன்று நபர்களுக்குப் பிறகு முரளி அழைக்கப்பட, உள்ளே இவனை எதிர்நோக்கி மேஜையைச் சுற்றி வியூகம் அமைத்த நாற்காலிகளில் மூன்று பளபளப்பான அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள்.
சிரித்த முகத்தோடு 'வணக்கம்' சொன்ன முரளியை ஏறிட்ட முதலாமவர் சின்னக் குரலில் உட்காரச் சொல்ல, உட்கார்ந்தான்.
மாமுல் கேள்விகள்
அத்தனைக்கும் புன்னகை மாறாமல் முரளி பதில் கூற, கடைசியாய் அமர்ந்திருந்த நபர் கேட்டார். "நாங்க வேறு ஒரு ஆள் ஏற்கெனவே செலக்ட் பண்ணிட்டம். வீணா உங்கள அலைகழிச்சதுக்கு ஸாரினு சொன்னா, உங்க ரியாக்ஷகன் எப்படி இருக்கும்?"
முரளி தோளைக் குலுக்கி, உதட்டைப் பிதுக்கினான்.
"வருத்தமாதான் இருக்கும் சார்... நா மறைக்க விரும்பல... ஆனா, பொறுப்புள்ள இந்த கம்பெனியச் சார்ந்த நீங்கல்லாம் கண்டிப்பா என்னைவிட தகுதி வாய்ந்த. ஒருத்தரைதான் கட்டாயம் தேர்ந்தெடுத்திருப்பிங்கனு. என்னை நானே சமாதானம் செய்துப்பேன்.
இவனது வெளிப்படையான பதில் திருப்தியை தந்ததுபோல, எதிரில் இருந்தவர்களில் ஒருவர் 'குட்' என்றார். மற்றவர் தலை அசைத்து அதை ஆமோதித்தனர்.
"ஓகே மிஸ்டர் முரளி...சொல்லி அனுப்ப றோம்... நீங்க போகலாம்"
"தாங்க்ஸ் சார்...."
எழுந்தான். கொஞ்சம் தயங்கினான். "சின்னச் சந்தேகம் சார்... முன்னால போன சுந்தர்ன்ற ஒருத்தர்கிட்ட உங்க ஷூ என்ன விலை?'னு கேட்டீங்களாம்... ஏன் அப்படி கேட்டீங்கன்னு... தப்பா எடுத்துக்காதீங்க சார்....ஒரு ஆர்வம் காரணமாகத்தான்..."
மூவரும் ஒருசேரச் சிரித்தார்கள்.
அந்த ஆளா? அவருக்கு யாருமே எப்பவுமே வேலை குடுக்க மாட்டாங்க... நாசூக்கே இல்லாம் படார்னு கதவை அறைஞ்சி சாத்திட்டு உள்ளே வந்து தானா உட்கார்ந்திட்டார். இப்ப உங்ககிட்ட கேட்ட மாதிரி அவருகிட்டயும் கேட்ட உடனே கோவமா கத்தினாரு! பொறுமையே இல்லே... அதோட, ஒரு அக்கவுண்டண்ட் வேலைக்குத் தேவையான பொறுப்புணர்ச்சியும். இருக்கிறதா தெரியல... எந்தவித வருமானமும் இல்லாத ஒருத்தர், நானூறு ரூபாயில் முதலைத் தோல் காலணி வாங்கிப் போட்டுக்கிட்டா. ஒண்ணு அவர் ஏகப்பட்ட சொத்துக்காரரா இருக்கணும்... இல்ல, பணத்தோட அருமை தெரியாதவரா இருக்கணும்... அந்த ரெண்டு குணங்களுமே எங்க கம்பெனிக்கு தேவையில்லை.
அறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த முரளியை கேள்விக்குறியுடன் பார்த்தான் சுந்தர்.
"வேலையே கிடைச்சிட்ட மாதிரி ஏண்டா சிரிக்கறே?"
"கிடைச்சாத்தான் சிரிக்கணுமா? கிடைச்சிடும்ன்ற நம்பிக்கைல சிரிக்கக் கூடாதா? ஏண்டா, சிரிக்கக்கூட யோசனை பண்ணணுமா என்ன? உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? சிரிக்கறப்போ நாம் உபயோகிக்கற தசை மாதிரி இரண்டு பங்கு முகதசைகள் கோபப்பட தேவைபடுதாம்... இன்னும்...'
சுந்தர் கோபத்தோடு கீழ கிடந்த கல்லை எட்டி உதைக்க, முரளி உற்சாகமாய் அவன் கையைப் பிடித்து இழுத்தான்.
"நா சைக்கிள்லதான் வந்திருக்கேன்...என். பின்னாடி உக்காந்துகிட்டு வா... உங்க அத்தை வீட்டு வாசல்ல எறக்கி விடறேன்... வலுக்கட்டாயமாய் சுந்தரை இழுத்து பில்லியனில் உட்காரச் செய்து, "மனசை புழுக்கமா வச்சிகிட்டா நாமும் புழுங்கி, அடுத்தவங்களையும் வீணா காயப்படுத்திடுவோம்டா... ஒட்டடைபடிஞ்ச மனசு, பாழடைஞ்ச வீட்டுக்குச் சமம்னு சொல்லுவாங்க... அடுத்தவங்க சுமைல பங்கெடுக்க பழகிக்கடா... தன்னால உனக்கும் சிரிக்கத் தெரிஞ்சிடும்" என்று சொல்ல வாயைத் திறந்தவன் மனசு இருக்கும் நிலையில் "உன் அட்வைஸ் எனக்குத் தேவை இல்லடா... எனக்கும் ரூபாய்க்கு நூறு அட்வைஸ் கொடுக்கத் தெரியும்" என்று நண்பன் கத்தலாம் என்பது புரிய, நினைப்பை மாற்றிக்கொண்டு தலைக்கு மேல் காய்ந்த மதிய வெயிலை அலட்சியப்படுத்தி, 'வாழ நினைத்தால் வாழலாம்' பாட்டை விசிலடித்தபடி பெடலை மிதித்தபோது, எந்த தினத்தையும்விட அதிகமான அளவில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் உள்ளுக்குள் கொப்பளித்துக்கொண்டு எழுவதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.