
செல்வத்தின் அப்பா சுந்தரம்.
அவருக்கு வயது 75. செல்வத்துக்கு கல்யாணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டன. குழந்தைகள் இல்லை.
செல்வத்தை நன்கு படிக்க வைத்தார். எம்.டெக் (ஐடி) முடித்ததுமே வேலை கிடைத்தது. வேலைக்கு போகும் போது அம்மா மறைந்து விட்டார்.
சுந்தரத்தை மிகவும் பாதித்தது. வீட்டில் பேசக் கூட யாரும் இல்லை. சுந்தரம், அவர் மனைவி, இருவரும் வேலைக்கு போவதால் சமையலுக்கு ஒரு பெண்ணை வைத்து கொண்டார்கள்.
11 மணிக்கு ஒரு டீ போட்டு கொடுப்பார் ஹெல்பர். அதே மாதிரி மதியம் சாப்பாடு போட்டு விட்டு ஒரு ஃப்ளாஸ்கில் காபி போட்டு வைத்து விடுவார்.
சுந்தரத்திற்கு வாழ்க்கை பிடிக்க வில்லை. பேச்சு துணை கூட இல்லாமல் இருப்பது அவருக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.
சுந்தரத்திற்கு ஏழரை வந்தது.
ஆம்.
மகன் மற்றும் மருமகளுக்கு ஜெர்மனியில் வேலை கிடைத்தது. மாத சம்பளம் ₹1 லட்சம். இருவருக்கும் அதே சம்பளம். இருவரும் அப்பாவிடம் சொன்னார்கள்.
“யார் என்னை பார்த்து கொள்வார்கள்…?“ எனக் கேட்டார். அதற்கு செல்வம்…
"நீங்கள் இங்கேயே இருக்க விரும்பினால் இங்கேயே இருக்கலாம். இல்லை என்றால்... 'ஆனந்தம்' என்ற முதியோர் இல்லம் இருக்கிறது. அவர்களே பார்த்து கொள்வார்கள். உங்களுக்கு என்று தனி ரூம் கொடுத்து விடுவார்கள். தினமும் காலை டிஃபன், 11 மணிக்கு 2 பிஸ்கட் மற்றும் டீ கொடுப்பார்கள். மதியம் 1 மணிக்கு சாப்பாடு. வீட்டு சாப்பாடு போல் இருக்கும். மாலை வடை, பஜ்ஜி, போண்டா, பக்கெளடா தருவார்கள். டீ அல்லது காபி அவரவர் பிரியம்… அப்பா… கவலையே பட வேண்டாம்…!“
“நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்…?“
“ப்பா… அது சொல்ல முடியாது... நல்ல சம்பளம்…!“
“செல்வம் நான் என்ன அனாதையா…?“
“அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம்…!“
“உங்கள் முடிவு…?“
"ஆனந்தம் காப்பகத்தில் சேர்ந்து கொள்கிறேன்… என் பார்வதியும் இல்லை. நீ தான் ஒரே பிள்ளை. நீயும் வெளிநாடு போனால் நான் அனாதை தானே…?“
செல்வம் பதில் சொல்ல வில்லை. இன்னும் அவர்கள் இருவரும் ஜெர்மனி செல்ல 4 நாட்கள் மட்டுமே இருந்தன.
சுந்தரம் தனது மூட்டை முடிச்சுகளை எடுத்து கொண்டு கிளம்பினார்.
“ஆனந்தம் இல்லம்“
இல்லத்தின் இயக்குனரை செல்வம் அப்பாவிற்கு அறிமுகம் செய்தார்.
“சார்... கொஞ்சம் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்…!“
"இங்கே 90 வயதை தாண்டியவர்கள் பலர் உள்ளனர். நாங்கள் எங்கள் அம்மா, அப்பா போல பார்த்து கொள்ளுவோம்…!“
“ரொம்ப நன்றி சார்…!“
செல்வம் கிளம்பினார்.
கீழே உள்ள தளத்தில் இருக்கும் ஒரு ரூம் கொடுத்து விட்டு பக்கத்தில் ஒரு அலாரம் வைத்தார்கள்…
“இது எதுக்கு…?“
“உங்களுக்கு அவசரமாக ஏதாவது தேவை பட்டால் இந்த அலாரமை அடியுங்கள்… உடன் ஊழியர்கள் வந்து விடுவார்கள்…!“
ஒரு வாரம் ஓடியது. அவருக்கு சில நண்பர்கள் கிடைத்தார்கள்.
ஆனால் சுந்தரம் மன வேதனையில் தான் இருந்தார்.
கஷ்டப்பட்டு படிக்க வைத்ததற்கு இது தான் பரிசா…? என யோசித்தார்.
இன்று இல்லத்தின் இயக்குனரை சந்தித்தார். அவரிடம் “நான் எழுத வேண்டும். ஒரு பெரிய நோட்டும், ஒரு ஜெல் பேனாவும் தாருங்கள்” என்றார்.
இயக்குனர் “இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் ரூமுக்கே வந்து கொடுப்போம்…!“
ஒரு மணி நேரத்தில் நோட் மற்றும் பேனா கிடைத்தது.
அவர் என்ன எழுதுவது என்று தீர்மானித்து விட்டார். ஆம். தனது சுயசரிதம் எழுதுவது என்று தீர்மானம் செய்து விட்டார்.
நோட்டை எடுத்து அங்கு இருந்த சரஸ்வதி படத்தின் கீழ் வைத்து தியானம் செய்தார்.
வந்து படுக்கையில் அமர்ந்தார்.
முதலில் தலைப்பு எழுத வேண்டும் என்று முடிவு செய்தார்.
பின்னர் அழகாக கொட்டை எழுத்துக்களில் நோட்டின் முதல் பக்கத்தில் எழுதினார்:
அனாதை அப்பா!