

"ஏங்க சாப்பாடு ரெடி. வந்தால் போடுவேன். இல்லை நான் அடுத்த வேலை பார்க்க போயிடுவேன்" என்றாள் வசந்தி.
"இதே என் அம்மா என்ன சொல்லுவாங்க தெரியுமா. ராமு சாப்பிட வாடா. நீங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்ச அப்புறம் தான்டா நான் சாப்பிடனும்னு சொல்லி அழைப்பாங்க" என்றவன் அமைதியுடன் சாப்பிட உட்கார்ந்தான்.
வசந்தி பரிமாறினாள். அன்றைய விசேடம் அவியல்.
அதை ஒரு வாய் சாப்பிட்டவன், "வசந்தி சூப்பர்! வர வர நீயும் என் அம்மா ரேஞ்சுக்கு வந்துட்டே. அம்மா இன்னும் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டிருப்பாங்க. அவியலும் கமகமன்னு இருக்கும். பரவாயில்லை. அடுத்த முறை நீயும் சரியாயிடுவே," என்றவன் சாப்பிட்டு முடித்தான்.
திடீரென்று விக்கல்.
"வசந்தி கொஞ்சம் தண்ணீ தர்றியா" என்றான்.
"ஏங்க சாப்பிட உட்கார்ரச்சயே தண்ணீர் வெச்சிட்டு உட்காரனும்னுட்டு தெரியாது" என்றவள் உடன் சென்று ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டு வைத்தாள்.
"சாரி வசந்தி. என் அம்மா சாப்பாடு போடும் முன்னாலயே முதலில் தண்ணீர் வெச்சுட்டுதான் பரிமாறவே செய்வாங்க. நானும் அந்ந ஞாபகத்தில் இருந்துட்டேன்."
வசந்தி துர்க்கையானாள்.
"அது என்னங்க எதுக்கெடுத்தாலும் அம்மா, அம்மா, அம்மான்னுகிட்டு. உங்களை மாதிரி அம்மா பைத்தியங்களுக்கெல்லாம் கல்யாணமே செஞ்சு வெச்சிருக்கக்கூடாது. ஒரு வாட்டியாவது என்னை புகழ்ந்து பேசி இருப்பீங்களா. ஏதாச்சும் ஒண்ணு நல்லா இருந்துச்சுன்னா அதிலயும் உங்க அம்மா வந்து நுழைஞ்சுப்பாங்க." அவள் கடுகடுத்த முகத்தை வைத்துக்கொண்டு ஒரு வழியாக அவன் சாப்பாட்டை முடிக்கும் போது செல்போன் பாடியது.
வசந்திதான் எடுத்தாள்.