சிறுகதை: அப்பாவின் ஈரம் - அத்தியாயம் - 1

School boys
Appavin Eram
Published on

தியாகு ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டரின் கடைசி மகன். இப்போது கூடப் படிக்கும் இசக்கியுடன் அந்த ஊர் குளத்தின் நடுவே உள்ள மணல்மேட்டில் இருக்கும் மரத்தடியில்,

"இது என்னடா. ஐயே?" இசக்கி கொடுக்கை கிள்ளி தன் கால்சட்டை பையில் வைத்திருந்த தேளை எடுத்து காட்டினான். இசக்கியை பயத்துடன் பார்த்தான் தியாகு.

தியாகுவின் ஆதர்சன் இசக்கி. அவனுக்குத் தோன்றாத பல இசக்கிக்கு தோன்றும். அது பெரும்பாலும் ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். இசக்கி அழகாக வரைவான். அதுவும் மனிதர்களையல்ல, இயற்கைக் காட்சிகளை. ஓவியனின் கைநேர்த்தி இல்லாவிட்டாலும் அவன் வரைய நினைத்ததை பார்ப்பவர் புரிந்துக்கொள்ளும் அளவு தெளிவாக இருக்கும். ஏழாவது படிக்கும் பள்ளிச் சிறுவனுக்கு அது அதிகமான திறமையாகவே இருந்தது தியாகுவிற்கு. தனக்கு வெறும் ஸ்லோகங்கள் மட்டுமே தெரியும் என்ற எண்ணம் தியாகுவிற்கு சற்று ஏக்கமாகவே இருந்தது. இசக்கிக்கு பூச்சிகளோ இல்லை யாருமில்லா தோட்டமோ, மண்டபமோ பயமே இல்லை, ஒரு நாள் தண்ணீர் பாம்பை அப்படியே கையில் பிடித்துவிட்டான்.

தியாகுவிற்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது. பின்னொரு நாள் ஓடும் ரயிலைத் துரத்தி, அதன் கடைசி பெட்டியில் தன் பெயரை எழுதி வெற்றிச் சிரிப்பு முச்சு இரைக்க இரைக்க சிரித்ததை தியாகு மறக்கவே இல்லை. சரியாக புரியாததால் போரடிக்கும் கணக்கு பீரியடில் தமிழ் புத்தக ஆரம்பத்திலிருக்கும் செய்யுள்களை சமகால வார்த்தைகளைப் போட்டு ‘கானா பாடல்’ போல மாற்றிக்கொண்டிருப்பான். படிக்கும்போது சற்று பிரமிப்பாக இருக்கும். சந்தம் சில இடங்களில் பிசகினாலும் (சந்தம் பந்தம் எல்லாம் இன்றைய தேதியில் லேசாக புரியும் விஷயம். அப்போது எங்கே அதெல்லாம் புரிந்தது) அவன் எழுதியதைப் படிக்கும்போது செய்யுள் போலவே சப்தமிக்கும். இதெல்லாம் திறமைகள் என்று புரியாத வயதில் அவன் மேல் மரியாதையை வரவழைத்தது.

"ஏன்டா உனக்குப் பயமாயில்ல?"

"ஏன்? அதுவும் ஒரு உயிர்தானே? ஏன் பயப்படனும்?"

"அந்த உயிர் கொட்டிச்சின்னா இந்த உயிர் போயிடும் தெரியுமில்லே?"

"அதான் அதோட கொடுக்க கிள்ளிட்டேன்லே."

"வேறென்ன வெச்சிருக்க? எடுக்காத..." அவன் கையைப் பிடித்துக்கொண்டு "சொல்லு போதும்" - தியாகு.

"அழகான குட்டி ஆமை ஒண்ணு கெடச்சுது. அத விடத்தான் நாம் இப்ப இந்தத் திட்டுக்கு வந்திருக்கோம்."

"ஆமை கடிக்குமா?"

"நீ என்ன ரேங்க்டா பரிட்சைல?"

"3வது. இரண்டு மார்க்ல இரண்டாவது ரேங்க் செல்விகிட்ட போயிடிச்சு."

''ஆமை கடிக்குமான்னு கேக்ற... நீ எந்த ரேங்க் வந்தா என்ன?''

"ஏன்டா அப்படி சொல்ற?" அப்பாவியாய் கேட்டான் தியாகு.

''இப்படித்தான் ஒரு கதை" இசக்கி. ஆர்வத்துடன் தியாகு "சொல்றா" மாலை நேரத்துக் குளக்கரை, கதை சொல்லப்போகும் இசக்கி, ரம்மியமாக இருந்தது அவனுக்கு.

"கேளு. ஒரு ஊர்ல ஒரு ஆறு. அதுல பரிசல் ஓட்டிட்டிருந்தான் ஒருத்தன். ஒரு நாள் அக்கரைக்கு போகணும்னு ஒரு ஐயரு வந்து பரிசல்ல உக்காந்திருந்தார். அந்த ஐயருக்கு எல்லா மந்திரமும் தெரியும். இக்கரையிலிருந்து அக்கரைக்கு போகும்போது பாதி வழியில் நடுஆத்துல பரிசல்ல ஓட்ட உளுந்திருச்சி. அப்ப படகோட்டி கேட்டான் ஏய்யா உங்களுக்கு என்னென்ன தெரியும்னு. அதுக்கவுரு நான் வேதம் படிச்சிருக்கேன்னு பெருமையா சொன்னாராம். அதுக்கு படகோட்டி அது சரி நீச்சல் தெரியுமான்னு கேட்டானாம். தெரியாதேன்னாராம். ஐயையோ இப்போ எப்படி உங்கள காப்பாத்திக்கப் போறீங்கன்னு கேட்டுக்கிட்டே ஆத்துல குதிச்சிட்டானாம்."

"ஏன் அந்தப் படகோட்டி அந்த ஐயர காப்பாத்தல?"

"படகோட்டி எப்படி ஐயமார தொடுவான்?"

"ஏன் தொட்டா என்ன?"

இதற்கு இசக்கி பதில் சொல்லுமுன் குளக்கரையோர ரோட்டில் சைக்கிளில் சென்ற தன் தந்தையைப் பார்த்துவிட்டான் தியாகு. இசக்கியுடன் தான் உட்கார்ந்திருப்பதை அவர் வெறுப்புடன் பார்த்துக்கொண்டு செல்வதை மாலை வெய்யிலில் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. இந்த நேரத்தில் அவர் அந்தப் பக்கம் வருவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவன். ஏற்கனவே பலமுறை அவர் இசக்கியுடன் சேரக்கூடாது என்று கண்டித்திருக்கிறார். பலமுறை அடித்துமிருக்கிறார். இன்று அவர் முகத்தில் தெரிந்த ரௌத்திரம் தியாகுவிற்கு தொண்டையடைத்தது மட்டுமில்லாமல் வயிற்றில் பட்டாம்பூச்சி துடிதுடித்தது. வியர்த்துக் கொட்டியது. அவன் நிலைக்குக் காரணமான அந்தக் காட்சியை படம் பிடித்த இசக்கி.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நட்புக்கும், நம்பிக்கைக்கும் சாதியாவது? மதமாவது?
School boys

"டேய்... உங்கப்பா நம்மளைப் பாத்துட்டாருடா? திட்டுவாரா?"

"என்னை இன்னைக்குக் கொல்லப்போறார்" கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவனுக்கு.

"சரி... சரி... நீ கிளம்பு. நாளைக்குப் பாக்கலாம்" - சாதாரணமாக சொன்னான் பயமறியா இசக்கி.

"எனக்கு நாளைக்கே இல்லலைடா" இருண்ட முகத்தில் தியாகு பொங்கினான்.

"டேய் நாளைய இன்னிலிருந்து பிரிக்கமுடியாதுடா. சாவு மட்டுந்தான் நாளைய பல்லி வால் மாதிரி நம்மக்கிட்டேமிருந்து பிச்சி எடுக்க முடியும். வேற எதுவும் அத செய்யாது" இசக்கி.

இசக்கி சொல்வதை முழுமையாக காது கொடுக்காமல் கால் சட்டை பாதி நனைந்தும் நனையாமலுமாக சரசர வென்று குளத்திலிறங்கி ஓட ஆரம்பித்தான் தியாகு. வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தான். இசக்கி ஆமை குட்டியுடன் பேச ஆரம்பித்தான்.

தன் வீடு இருக்கும் தெரு வந்ததும் ஓட்டத்தை நடையாக்கினான் தியாகு. சில வீடுகளில் விளக்கு வைத்துவிட்டார்கள். மெள்ள அடிமேல் அடிவைத்து வீட்டுக்குள் நுழைந்தான். அப்பாவைக் காணவில்லை. கிணற்றடிக்குச் சென்றிருக்கலாம். மெள்ள தன் அறைக்கு (பசங்க அறை) சென்று பள்ளிப்பையை வைத்துவிட்டு வெளியேறும்போது பெரியண்ணா (ஒரே அண்ணாதான் ஆனாலும் வயதில் முத்தவரென்பதால்பெரியண்ணா தியாகுவிற்கும் அவருக்கும் 14 வயது வித்யாசம்) பார்த்தார். ஆனால் சந்தேகப்படவில்லை. தியாகு உயிர் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறினான். தெருமுனை திரும்பும்போது ஊரைவிட்டு தப்பி போகத் தோன்றியது. ரெயிலேறி தனக்கு தெரிந்த பெரிய அக்கா ஊரான கடலூருக்கு செல்ல தெளிவு வந்தது. மீண்டும் தன் வீட்டுக்கு வந்தான். திருடன்போல விட்டுக்குள் சென்றவன் பெரியண்ணாவின் சட்டை தொங்குமிடம் சென்றான். பையில் கைவிட்டதில் முன்று பத்து ரூபாய்கள் சிக்கின. எடுத்துக்கொண்டு திரும்பும்போது சின்னக்கா பார்த்துவிட்டாள்

இதையும் படியுங்கள்:
சிறுகதை; ருக்குமணி வண்டி வருது!
School boys

"ஏய் தியாகு என்ன பண்ற?"

"ஒண்ணுமில்லே" என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தவனை பிடித்துக்கொண்டாள் அக்கா. திமிறிக்கொண்டு ஓடியவனை சத்தமில்லாமல் துரத்தினாள். ஆனால், பிடிக்க முடியவில்லை. தெருமுனை வரை விரட்டியவள் பின் நின்றுவிட்டாள். இந்த நேரத்தில் பெண் பிள்ளைகள் தெருவிலே வருவது அப்பாவிற்குப் பிடிக்காது. பயந்துகொண்டே வீட்டையடைந்தாள். நேரம் கூடியது. முனுசிபல் ஆபிஸ் ரேடியோவில் சிவராமன் செய்தி வாசிக்க தொடங்கி விட்டார். வீட்டில் மெள்ள எல்லோரும் பரபரக்கத் தொடங்கிவிட்டனர்.

"ஸ்கூல் விட்டு 2 மணி நேரமாறது... இன்னும் இந்தப் பயல காணம். அந்தப் பையனோடு சேர்ந்துகொண்டு குளத்துக்கு நடுவுல உட்கார்ந்துண்டு சே... நாம என்ன? அவாள்ளாம் யாரு? சரிசமமா... ச்சே... வரட்டும் கழுதை" கறுவிக்கொண்டே புளியம் விளாரை தயார் பண்ணிக்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com