திருவாரூரின் புற நகர்க் கிராமம் அது! முருகையனின் பாரம்பரிய ஊர்! மேற்குப் புறத்தில் அவர் வீடு! மூத்தவர் அவர் என்பதால் மேற்கில் இடம் ஒதுக்கினார்கள்.
அதற்கடுத்தாற்போல் அவர் கடைசித் தம்பியின் வீடு. அதையும் தாண்டி நடுத் தம்பியின் வீடு. அண்ணன், தம்பிகள் ஒற்றுமையாக அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.
திடீரென்று சின்னவரின் மாமியாருக்கு அதிரையில் உடம்பு சரியில்லாமல் போக, குடும்பத்துடன் அங்கு சென்றவர், கூடவே இருந்து அவர்களைக் கவனிக்க வேண்டிப் போனதால் அங்கேயே தொடர்ந்து தங்க வேண்டியதாயிற்று!
அந்தச் சமயத்தில்தான் புதுக்கோட்டையிலிருந்து முபாரக் அந்த ஊருக்கு வந்து ஒரு மளிகைக் கடையை ஆரம்பித்தார்! ஊரில் சில பெரியவர்களை அழைத்து மளிகைக் கடையைத் திறந்தார் அவர்! அப்படி அழைக்கப்பட்டவர்களில் முருகையனும் ஒருவர்.
முபாரக் தன் குடும்பத்தை அழைத்து வர ஏதுவாக வீடு ஒன்றைத் தேட, முருகையனோ, தன் தம்பி வீடு சில மாதங்களாகப் பூட்டித்தான் கிடக்கிறது என்றும், வந்து பார்த்து, பிடித்திருந்தால் அந்த வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவரான முருகையனின் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருப்பது தனக்கும் தன் குடும்பத்திற்கும் சிறந்த பாதுகாப்பாகவே அமையும் என்று எண்ணிய முபாரக், ஒன்றும் யோசிக்காமல் அந்த வீட்டிற்குக் குடி வந்து விட்டார். அந்தச் சிற்றூரில் முபாரக் குடும்பம் மட்டுமே இஸ்லாமியக் குடும்பம்.
எப்படி அந்த ஊரில் காலந்தள்ளப் போகிறோமோவென்று எண்ணிப் பயந்துகொண்டே வந்த நூர்ஜஹானுக்கு, முருகையனின் மனைவியும், மகள் வசந்தாவும் அந்தப் பயத்தைப் போக்கும் விதமாகவே நடந்து கொண்டார்கள். மேலும் சில மாதங்களில் அந்த உறவு இறுக, ஒரே குடும்பமாகிப் போனார்கள்! அந்த உறவு இறுக முபாரக்கும் ஒரு காரணம்.
தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்து விடக் கூடாது என்பதில் எப்பொழுதுமே உறுதியாக இருப்பவர் அவர். ஆஸ்துமாவினால் அவதிப் பட்டாலும், அவர் மனைவி நூர்ஜஹான் பக்கத்து வீட்டுப் பையன் டவுனுக்குச் செல்லும்போது முடிந்து விட்ட மாத்திரைகளை வாங்கி வரச் சொன்னால், அது கூட வேண்டாமென்று மறுக்கும் உயர்ந்த குணம் கொண்டவர் அவர். அந்தத் தம்பிக்கு எதுக்கு வீண்அலைச்சலைக் கொடுக்கிறே!’ என்று மனைவியைக் கடிந்து கொள்வார்.
வசந்தாவும் நூர்ஜஹானைத் தன் சகோதரியாகவே பாவிக்க அவர்கள் நட்பு மேலும் ஆழமானது!
ஒரு வாரத்தில் திரும்புவதாகச் சொல்லி விட்டுப்போன நூர்ஜஹான் பத்து நாட்களாகியும் திரும்பாததால் வசந்தாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. இரவில் இரண்டொரு முறை செல்லில் அழைத்தும் பயனில்லை!
அன்று காலை தன் மகன் சேகருடன் அவள் நாகூருக்குப் புறப்பட்டுச் சென்றாள் வசந்தா.
சேகர் வெளிநாட்டிற்குக் கிளம்ப விசாவுக்கு அப்ளை செய்தவுடனேயே, ’நல்லபடியாக அவனுக்கு விசா கிடைத்து வெளிநாடு சென்று வர நீதான் உதவி செய்ய வேண்டும்!’ என்று நாகூர் ஆண்டவரிடம் அவள் வேண்டியிருந்தாள்! அந்த நேர்த்திக் கடனைச் செலுத்தவே அவள் மகனுடன் நாகூர் சென்றாள்!
நாகூர் தர்ஹாவில் பாத்தியா ஓதி முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்த போது அழைப்பு வந்தது. கையிலிருந்த பாத்தியா ஓதிய தட்டை மகனிடம் கொடுத்து விட்டு, கைப்பையிலிருந்த செல்லை எடுத்துப் பேசினாள் வசந்தா!
“அக்கா! நூர்ஜஹாந்தான் பேசறேன்! நாங்க இப்ப பழனியில முருகன் சன்னதிக்குப் பக்கத்திலதான் இருக்கோம். ரெண்டு நாள் முன்னாடி முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்த வந்தோம். ஒங்கவூர்ல தொடங்கற மளிகைக்கடை நல்லாப் போகணுங்கற வேண்டுதல்தான்! இங்க அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கறதால இங்கயே தங்கிட்டோம்! ராத்திரி மாநாட்டுக்கு வந்ததால செல்லை ரூம்லயே வெச்சிட்டு வந்துட்டேன்! அதான் நீங்க ரெண்டு தடவை கூப்பிட்டும் பேச முடியல! எல்லாரும் நல்லா இருக்கீங்கல்ல… அம்மாவைக் கேட்டதாச் சொல்லுங்க!”
“பரவாயில்லம்மா! ஒரு வாரத்தில வர்றேன்னு சொல்லிட்டுப் போன நீங்க பத்து நாளாகியும் வரலையேன்னுதான்… என்னமோ ஏதோன்னு பயந்துபோயி கூப்பிட்டேன்! பழனி விசிட்டா? மாநாடு வேறயா! நல்லாப் பார்த்துட்டு வாங்க! நானும் சேகரும் இப்ப நாகூர்லதான் இருக்கோம். நீங்க முருகனுக்கு நேர்ந்துக்கிட்ட மாதிரி நாங்களும் நாகூர் ஆண்டவருக்கிட்ட அவன் வெளிநாட்டுப் பயணம் நல்லா அமைய வேண்டிக்கிட்டோம்! அது நல்லா அமைச்சிடுச்சில்ல. அதான் மறுபடி கெளம்பறதுக்கு முன்னாடி இங்க வந்தோம்! சரிம்மா! சீக்கிரமே வந்திடுங்க!”
பேசி முடித்துவிட்டு ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள் வசந்தா. நட்புக்கும், நம்பிக்கைக்கும் சாதி, மத பேதங்கள் இல்லைதானே!