சிறுகதை: சென்சஸ்!

Tamil Short Story Census!
Census Officer
Published on

கொளுத்தும் வெயிலில் சென்சஸ் புள்ளி விவரம் சேகரிக்க, வீடு வீடாக போய்க் கொண்டிருந்த அந்த அரசாங்க ஊழியர், அந்த பெரிய வீட்டின் கதவைத் தட்டினார். இரண்டு மூன்று முறை தட்டியும் கதவு திறக்காததால் “வீட்டிலே யாராவது இருக்கீங்களா, இல்லியா?” என்று கேட்டார்.

அறுபது வயது மதிக்கத்தக்க நபர் டவலில் கையைத் துடைத்துக் கொண்டு, “வீட்டுலே யாரும் இல்லைன்னா எப்படி பதில் எதிர்பார்க்கறீங்க?“ என எதிர்கேள்வி கேட்டுக் கொண்டு வந்தார். சரியான வில்லங்கமான பேர்வழியாக இருப்பார் போல.

“கவர்ன்மென்ட்லேந்து வந்திருக்கேன். சென்சஸ் விவரம் எடுக்கணும்” என்றார்.

“எடுத்துக்கிட்டு போங்க” என்றார் பெரியவர். மீண்டும் நக்கல்.

“அதுக்கு நீங்க முதல்லே கதவைத் தொறக்கணும் “

“சரி, வாங்க” கதவைத் திறந்தார். உள்ளே ஹாலில் உட்கார்ந்ததும் ஃபேன் போட்டார். ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் குடிக்க கொடுத்தார். அவ்வளவு மோசமான பேர்வழி இல்லையோ?

“வீட்டு டோர் நம்பர் என்னங்க” என்றார். 

“டோர்ல ஒண்ணும் நம்பர் இல்லீங்க. போன வாரம் பெயிண்ட்டு பண்ணதுல எல்லாம் அழிஞ்சு போச்சுங்க”

திரும்பவும் முருங்கமரம் ஏறிவிட்டார். “அதில்லை சார். இந்த வீட்டுக்குண்டான கார்பரேஷன் நம்பர் என்ன?”

“அதான் காம்பவுண்ட் சுவத்திலே கொட்ட எழுத்துலே போட்டிருக்கே 28/2 ன்னு. பாக்கலையா?”

“உங்க பேர் என்னங்க?”

“கம்பம் கிருஷ்ண கிரி”

“என்னங்க, பேரைக் கேட்டா ஊரைச் சொல்றீங்க?”

“பேரைத்தாங்க சொன்னேன். கம்பம் நான் பொறந்த ஊரு. கிருஷ்ணன் என் பேரு. கிரி எங்க குடும்பப் பேரு. அதான் கம்பம் கிருஷ்ண கிரி.

“வயசு?”

“ஒரு 62, 63 ன்னு போட்டுக்கங்க”

“கரெக்டா சொல்லுங்க சார்”

“ஸ்கூல்லே சேர்க்கும் போது முன்னே பின்னே குடுத்துட்டாங்க. 62 ன்னே போட்டுக்குங்க. என்ன ஆயிடப் போகுது”

“படிப்பு”?

“பி.இ, எம்.பி.பி.எஸ்……..”

“என்னது பி.இ, எம்.பி.பி.எஸ்ஸா?”

“இல்லைங்க. பி.இ, எம்.பி.பி.எஸ் ஏதாவது படிக்கணும்னு நெனச்சேன். ஆனா படிப்பு வராததாலே ஸ்கூல் பைனல்லோட நிறுத்திக்கிட்டேன்”.

“நீங்க என்ன படிச்சிருக்கீங்கன்றதை மட்டும் சொன்னா போதும். என்ன படிக்க ஆசைப்பட்டீங்க எல்லாம் தேவையில்லை”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அன்பும்… அவசரச் சிகிச்சையும்!
Tamil Short Story Census!

“உங்க உத்தியோகம்?”

“சொந்த பிஸினஸுன்னு போட்டுக்கங்க”

“உங்க குடும்பத்துல எத்தன பேரு இருக்கீங்க?”

“நான், என் சம்சாரம், ஒரு பையன், ஒரு பொண்ணு. நாலு பேர்”

“குடும்ப ஆண்டு வருமானம்?  நாலு ஸ்லாப் இருக்கு. 1 - 3 லட்சம், 3 - 5 லட்சம் , 5 - 10 லட்சம், 10 லட்சத்திற்கு மேல்”. மனதிற்குள் 10 லட்சத்திற்கு மேல் என்ற காலத்தை டிக் செய்ய தயாரானார்.

“சார், இன்கம் டாக்ஸ் ப்ரசினை ஏதாவது வருமா?“ என்று மெல்லிய குரலில் கேட்டார் பெரியவர். 

“அதெல்லாம் ஒண்ணும் வராது சார். இது சும்மா ஒரு புள்ளி விவரத்துக்குத்தான்” 

“அது பாருங்க. நாங்க ரேஷனில் அரிசி, சர்க்கரை, அரசாங்க உதவித் தொகைன்னு எல்லா சலுகைகளும் வாங்கிக்கிட்டு இருக்கோம். ஜாஸ்தி வருமானம் காமிச்சா நிறுத்திடக் கூடாது பாருங்க. ஆண்டு வருமானம் 1 - 3 லட்சம்னே போட்டுக்கங்க”

அடப்பாவி. இவ்வளவு பெரிய வீட்டிலிருந்து கொண்டு இவ்வளவு குறைவாக ஆண்டு வருமானம் காட்டுவதா?

“சரி, சார். அப்படியே போட்டுக்கறேன். ஒரு வாட்டி எல்லாம் செக் பண்ணிடறேன்” என்று சரி பார்த்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை -அழகாக ஓர் அத்தியாயம்!
Tamil Short Story Census!

“சார், ஒரு கேள்வி விட்டுப் போய்விட்டது. இந்த வீடு சொந்த வீடா இல்லே வாடகை வீடா?”

“சொந்த வீடாத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.”

“என்னது, நினைக்கறீங்களா? குடும்பத் தலைவர். உங்களுக்கே தெரியாதா?”

“அட, நீங்க ஒண்ணு. நான் ஒண்ணும் இந்த வீட்டுக்காரர் இல்லை. அவரு வெளியே போயிக்காரு. நான் இந்த வீட்டு சமையல்காரன். ஒரு மாசமாத்தான் இங்கே இருக்கேன்.”

“அப்ப நீங்க இதுவரைக்கும் சொன்னதெல்லாம்?”

“என் குடும்பத்தைப் பத்தி தானே கேட்டீங்க. அதைத்தான் நானும் சொன்னேன்”

இனிமேல் என்ன ஆனாலும் சென்சஸ் டீயூட்டிக்கு வரக்கூடாது என்று தீர்மானித்தார் அந்த  ஊழியர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com