சாமிநாதன் பக்கத்து ஊரான கீழப்பெருமழையிலிருந்து வந்து இடும்பாவனத்தில் குடியேறியவர். தென்னந்தோப்பின் நடுவே, மணற்பாங்கான சூழலில் வசிக்க வேண்டு மென்பதற்காகவே களிமண் நிறைந்த ஊரையும், கனிவான சுற்றத்தாரையும் விட்டு விட்டு வந்தவர். இடைப்பட்ட தூரம் ஒன்றும் அதிகமில்லை. அவரின் பழைய மொபட்டிலேயே 15 நிமிடப் பயணந்தான்!நில புலங்களைக் கவனிக்கத் தினசரி இல்லாவிட்டாலும் வாரத்தில் 3, 4 முறையாவது ஊர்வந்து செல்வார்.
மொபட் மக்கர் செய்யும் நாட்களில் நடராஜா பஸ்தான்! 9 ஆம் நம்பர் தொண்டியக்காட்டு பஸ் இரண்டு ஊர்களையும் இணைக்குமென்றாலும், "அதுக்கு நிக்கற நேரத்துக்குள்ளே நான் வீடு போயிடவேன்னில்ல!" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு நடந்து விடுவார்.
ஊரில் இருக்கின்ற நாட்களில் தவறாமல் சற்குண நாதர் கோயில் வந்து வணங்கி விடுவார். அவர் இடும்பாவனத்தில் வந்து வசிக்க அப்பெரும் கோயிலும் ஒரு காரணம். இடும்பனும் அவர் தங்கை இடும்பையும் அங்கு வசித்ததாகவும், பாண்டவர்கள் வன வாசத்தின்போது அங்கு வந்து தங்கியதாகவும் வரலாறு உண்டு. அரக்க உருவம் கொண்ட இடும்பை, கோயிலுக்கு எதிரேயுள்ள திருக்குளத்தில் நீராடியதும் அழகிய உருவம் பெற்றதாகவும், அவளை பீமன் மணந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
திருக்கைலாயத்தில் சிவபெருமான் பார்வதியை மணந்தபோது, பெருங்கூட்டம் வடக்கில் சேர, பூமியின் பாரத்தைச் சரி செய்ய அகத்தியரை சிவன் தெற்கே செல்லுமாறு கூறியதாகவும், உடன் அவ்வாறே செயல்பட்ட அகத்தியர் மனதிற்குள்ளாக ‘பெருமானின் மணக்கோலத்தைப் பார்க்கும் பாக்கியம் தனக்கில்லையே’ என்று ஏங்க, அதனை அறிந்த சிவபெருமான் அகத்தியருக்கு மணக்கோலக் காட்சி தந்த தலம் இது என்றும் வரலாறு பேசும்! இங்கு சிவ லிங்கத்தின் பின்னால் மணக்கோல இறைவனும் உண்டு.
‘இடும்பைக்கு அருள் செய்த இப்பதி இடும்பாவனம் என்றே அழைக்கப்படட்டும்!’ என்று வியாச முனிவர் பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் திருஞானசம்பந்தர், சேக்கிழார் போன்றோரும் இங்கு சாமி தரிசனம் செய்ததுடன், இறைவனைப் புகழ்ந்தும் ஊரைப் புகழ்ந்தும் பாடியுள்ளனர்.
இவற்றையெல்லாம் அறிந்ததாலேயே சாமிநாதனுக்கு இவ்வூரின் மீது தனிப்பாசம்!
சந்தர்ப்பம் கிடைத்ததும் ஊர் மாறி விட்டார் - நம்மூர் அரசியல்வாதிகள் சிலரைப்போல! ஊர்தான் மாறினாரேயொழிய தன் கொள்கைகளிலிருந்து அவர் என்றும் மாறியதில்லை!
சற்குண நாதர் மேல் கொண்ட பக்தியைப் போலவே வேளாங்கண்ணி மாதா மீதும் அவருக்குப் பக்தி உண்டு!தூய அன்னை தேவாலயத்தில் கொடியேற்றியபோது தன் நண்பன் ஒருவனுடன் சிறு வயதில் வேளாங்கண்ணிக்கு நடந்தே சென்ற சாமிநாதன், அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமல் வீட்டிலிருந்து நடந்தே சென்று அன்னையைத் தரிசித்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்!
காற்று, மழை என்றாலுங்கூட எதையும் பொருட்படுத்த மாட்டார்! சற்குண நாதரைத் தரிசித்து விட்டுப் பயணத்தைத் தொடங்கும் அவர் திருத்துறைப் பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரரைத் தரிசித்து விட்டு எட்டுக்குடி முருகனைச் சென்று வணங்குவார்.
அங்கிருந்து நேராக வேளாங்கண்ணியை நடந்தே சென்றடைவார்! மனங்குளிர அன்னையைத் தரிசித்த பிறகு பேரூந்தில் ஊர் திரும்பி விடுவார்!
அன்று டிவியில், பேராலயத்தில் கொடியேற்றியதைக் காட்டியபோதே மனைவி வள்ளியம்மை “என்னங்க… இந்த வருஷமும் நடந்துதான் போகப் போறீங்களா? ஒண்ணு செய்யுங்க… வேணும்னா பஸ்லயே போயிட்டு வந்திடுங்க!ஒங்க ஒடம்பு முன்ன மாதிரி இல்லீங்க! 40, 50 கி.மீ., நடக்கறது சின்ன வேலை இல்லைங்க…” என்க,
“என்ன நீயே இப்படிச் சொல்ற… நான் நல்லாத்தானே இருக்கறேன்!அதிலயும் இது எத்தனாவது வருஷந் தெரியுமா? 48 வது வருஷம். அரை செஞ்சுரி போட இன்னும் ரெண்டு வருஷம் ஆகனுமேன்னு நான் கவலைப் பட்டுக்கிட்டிருக்க, நீ இப்பவே ப்ரேக் போடறது நல்லாவா இருக்கு. நான் என்ன ரஷ்யா, உக்ரைன் பக்கமா போறேன்? இந்தால இருக்கற வேளாங்கண்ணிக்குத் தானே! ஒண்ணும் பயப்படாதே!அயல் நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயர்களுக்கே உதவி செஞ்ச அன்னை, சொந்தப் புள்ளை என்னைக் கவனிக்காம விட்டுடுவாளா என்ன?”
சொன்னவர், அடுத்த நாள் அதிகாலையே கிளம்பி விட்டார்! வழக்கம்போல் சற்குண நாதரைத் தரிசித்து விட்டுக் கிளம்பினார்.
உடல் முன்பு போல இல்லை என்பது அவருக்கும் தெரிந்திருந்தது. இருந்தாலும் வைராக்கியம் அதனை மூடி மறைத்தது! காலையிலும், மாலையிலும் நடந்து விட்டு மதிய வெயில் நேரத்தில் ஓய்வெடுத்தபடிதான் முன்னேறினார்!
இசிஆர் சாலையில் சிராவட்டம் பாலத்தில் இடது புறமாகத் திரும்பி எட்டுக்குடி செல்ல வேண்டும். ஆலங்குடி தாண்டியதிலிருந்தே அவருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவரைப் போலவே நடைப்பயணமாகச் செல்லும் சிலர் அவரைத் தாண்டி வேகமாகச் சென்று விட்டார்கள். மெல்ல நடந்த அவர் எட்டுக்குடி சாலையின் திருப்பத்தில் மயங்கி விட்டார். நல்லவேளையாக, ஓரமாகவே நடந்து சென்றதால் ஓரத்திலேயே விழுந்து விட்டார்.
அவர் கண் விழித்துப் பார்க்கையில், ஓர் ஆஸ்பத்திரியின் ஐசியூவில் இருப்பதையும், தனக்கு செலைன் ஏற்றப்பட்டுள்ளதையும் உணர்ந்தார்.
“ஒண்ணும் பயப்படாதீங்க பெரியவரே! நாந்தான் ஒங்களை இங்க கொண்டு வந்தேன்.” என்று கூறிக் கொண்டே, கழுவிய கைகளை டவலில் துடைத்தபடி வந்த பெண்ணிடம் ஓடி வந்த நர்ஸ், ”டாக்டர்! அந்த 6 ஆம் நம்பர் பேஷண்ட்க்கு உணர்வு வந்திடுச்சு!” என்க, ”அப்படியா? வெரிகுட்… என்றபடி டாக்டர் ஓடினார்!
தன்னிடம் நின்ற நர்சிடம் சாமிநாதன் “இது எந்த ஊரும்மா?” என்று கேட்க, “வேளாங்கண்ணி சார்! ஒண்ணும் பயப்படாதீங்க! ஒங்களுக்கு ஒடம்புல நீர்ச்சத்து கொறைஞ்சதால மயங்கிட்டீங்க. நானும் எங்க டாக்டரும் எட்டுக்குடி போயிட்டு வந்தப்ப டாக்டர்தான் ஒங்களைப் பார்த்து வண்டியை நிறுத்தினாங்க! கிரேஸ் டாக்டரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்களே! வண்டியை நிறுத்தாம அவங்கதான் ஓட்டிக்கிட்டு வந்து ஒங்களுக்கு செலைன் ஏற்றினாங்க!” என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே கிரேஸ் டாக்டர் வர, வேளாங்கண்ணி மாதாவே எதிரில் வருவதாக எண்ணி சாமிநாதன் புளகாங்கிதம் அடைந்தார்!