

"வாடா! இப்பதான் வர்ற நேரமா?"
பாட்டி முகத்தில் இடிக்காத குறையாக பாபுவைக் கேட்டாள்.
"சாரி பாட்டி! ஆபிஸ்ல திடீர்னு அவுட் ஸ்டேஷன் போக வேண்டியதாகிவிட்டது..."
"டிரெயின் கரெக்டான டைம்க்கு வந்திடுச்சா?" பொக்கைவாய் தெரியக் கேட்டாள்.
"அய்யோ.. பாட்டி! இது ரயில்வே ஸ்டேஷன் இல்லை… அவுட் ஸ்டேஷன். அதாவது வெளியூர் போகறது..."
"முண்டம்! நானும் அதைத்தானே சொன்னேன்… வெளியூருக்கு டிரெயின்ல போனியான்னு…"
"அய்யோ பாட்டி ஆள விடு!" புகுந்து அடித்து ஓடினான்.
"அவங்க பாட்டன மிஞ்சிடுவான்..." பாட்டி சொல்லிக்கொண்டு பாக்கு இடித்து வெற்றிலையை சுண்ணாம்பு தடவி, மடித்து வாயில் போட்டுக்கொண்டது.
பாபு தாத்தா, பாட்டி சதாபிஷேகம் விழாவிற்கு ஓடோடி வந்திருந்தான்.
பாபுவின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே வந்துவிட்டிருந்தனர்.
வீடு களைக்கட்டி இருந்தது.
பழைய நினைவுகளை அசைப் போட்டுக்கொண்டு இருந்தனர்.
அந்த இடமே கூச்சலால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் சத்தம் போல் பலவிதமான ஏற்ற இறக்கத்துடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
நாளைய பொழுது முழுவதும் உறவினர்களால் வீடே அல்லோகலப்படப் போகிறது என பாபு மனதில் சொல்லிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டான்.