
ஒரு பிரபல சாப்ட் வேர் நிறுவனத்தின் சென்னை கிளைக்குப்போக வேண்டிய அவசியம் சமீபத்தில் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சென்னை கிளை மீது எனக்கு தனிப்பட்ட மனக்கசப்பு உண்டு. இக்கிளையின் நவ நாகரிக அலுவலகம் இருக்கும் இடம் எனக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே பரிச்சயம். அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்ட படுவதற்கு முன்பு அழகான மாமரங்களும் பனை மரங்களும் கலந்த தோப்பு இருந்தது.
அப்போது நான் படூரில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன். வேலைக்கு போகும் போதும் வரும் போதும் அந்த தோப்பிற்கு முன்பு நின்று விட்டு தான் செல்வேன். தோப்பில் குயில் கூவுவதை கேட்டவாறு காலாற நடப்பேன். தோப்பின் காவல்காரரோடு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து பேசுவேன். சீசனில் மாம்பழங்கள் மற்றும் நுங்குகள் வாங்கி சாப்பிடுவேன். தோப்பின் அழகையும் அற்புத சூழ்நிலையும் அடிக்கடி காவல் காரரிடம் பாராட்டிப்பேசுவேன். அப்போதெல்லாம் காவல்காரர் விரக்தியோடு சொல்லுவார். "இது எவ்வளவு நாளைக்கு சார். இன்னும் ஆறு மாதம் இந்த தோப்பு இருந்தா அதிசயம்."
அவர் சொல்லியபடி ஒரு நாள் திடீர் என்று தோப்பினைச்சுற்றி மறைப்பு எழுப்பபட்டது. மறைவு வைத்த ஒரு வாரத்திற்குள் மரங்கள் காணாமல் போய் விட்டன. அவை இருந்த இடத்தில் கட்டிடங்கள் எழ ஆரம்பித்தன. ஆறே மாதத்தில் அசுர வேகத்தில் கட்டுமான பணிகள் முடிந்து கிளை திறக்கப்பட்டு விட்டது. என்னால், நடந்த மர படுகொலைகளை ஜீரணிக்கவே முடியவில்லை. இவர்கள் ஏன் எவ்வளவோ பொட்டல் காடுகள் இருக்க இந்த ரம்யமான தோப்பினை அழிக்க வேண்டும் என்று மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தேன். அவ்வழியே போகும்போதெல்லாம் எனக்கு மாண்டு போன மரங்களையும் பனை மரங்களையும் நினைத்து நெஞ்சின் மூலையில் வலிக்கும்.
பிறகு சென்னைக்கு மாற்றலாகி வந்து விட்டேன். பல வருடங்களுக்கு பின் அந்த சாப்ட் வேர் நிறுவனத்தில் ஒரு அதிகாரியை சந்திக்க வேண்டி தோப்பு இருந்த இடத்திற்கு போகும் வாய்ப்பு ஏற்பட்டது.
ஒ எம் ஆர் சாலை ஓஹோ எம் ஆர் சாலை ஆகிவிட்டிருந்தது. எந்த பக்கம் திரும்பினாலும் கண்ணாடி பதித்த ராட்ஷச கட்டிடங்கள். மூச்சு முட்டியது. பசுமை எல்லாம் பாலைவனமாய் மாறிவிட்டிருந்தது. சோழிங்கநல்லூரில் டிராபிக் சிக்னல்! ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு அருமையான மணம் பரப்பி வந்த பிஸ்கட் கம்பெனி காணாமல் போய்விட்டிருந்தது.
அப்போதெல்லாம் சைதாபேட்டையில் 19B பஸ்ஸில் காலை ஏழு மணிக்கு ஏறி உட்கார்ந்த உடன் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்து விடுவேன். பஸ் பிஸ்கட் கம்பெனி அருகில் வந்தவுடன் பிஸ்கட் மணம் என்னை எழுப்பி விடும். தாமரைகளோடும் அல்லிகளோடும் தாம்பாளம் போல் காட்சியளித்த சிவன் கோவில் குளம் வெறும் குழியாக மாறி இருந்தது. மருந்துக்குக் கூட ஒரு மா மரமோ பனை மரமோ கண்ணில் படவில்லை. தரையில் பதித்த பிரமாண்ட கண்ணாடி போல் வானத்தைப் பிரதிபலித்து கொண்டிருந்த சோழிங்கநல்லூர் ஏரி வறண்டு புல்லும் புதருமாக காட்சியளித்தது.
'கோல்ட் மாமரம் ரோடு' என்று ஒரு காலத்தில் பெயர் பெற்ற 'வோல்ட் மகாபலிபுரம் ரோடு' இன்று 'பால்ட் மகாபலிபுரம் ரோடாக' மாறி கண்களை கூச வைத்து கொப்பளிக்க செய்தது. துரைபாக்கத்தில், பள்ளி மைதானத்தில் NCC மாணவர்கள் போல் வரிசை வரிசையாக தென்னை மரங்கள் ஏனோ இதுவரை தொடப்படவில்லை. ஆனால் அன்றிருந்த பாளை சிரிப்பு எங்கு போயிற்று? ஒரு ரூபாய்க்கு இட்லியும் வடையும் ஐந்து ரூபாய்க்கு தோசையும் விற்ற காரபாக்க தொரைசாமி கடையை காணவில்லை. நான்கு ரூபாய்க்கு முகச் சவரமும் எட்டு ரூபாய்க்கு முடிவெட்டுதலும் செய்த ஈகாட்டூர் சண்முகத்தின் கள்ளிப்பெட்டி சலூனுக்கு என்ன ஆயிற்று? எல்லாவற்றிற்கும் மேலாக கழிபட்டுரில் சாலையோரமாக தன் கிளைகளில் நூற்றுக்கணக்கான பறவைகளின் கூடுகளை தாங்கியவாறு கடல் அலை போல் எப்போதும் ஓசை ஏற்படுத்திக்கொண்டு காலம் காலமாய் நின்றுகொண்டிருந்த கம்பீரமான அந்த அரச மரம் எங்கே? கவிதை போல் இருந்த வோல்ட் மகாபலிபுரம் சாலை வெறும் கட்டிட சுடுகாடாக மாறிவிட்டதே!
ஆயிரத்தெட்டு கெடுபிடிகளை கடந்து ரிசெப்ஷனை அடைந்தேன். ஆனால் நான் பார்க்க வந்த குறிப்பிட்ட அதிகாரி வர ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறிவிட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சரி கேப்டேரியாவுக்கு போய் காபி குடிக்கலாம் என்று நிறுவனத்தின் மைய்யப்பகுதிக்கு சென்றேன். அங்கு நான்கு புறமும் வண்ண வண்ண கட்டிடங்களால் சூழ பட்டு செயற்கையாக உருவாக்கப் பட்ட புல்வெளியின் நடுவே சோகமே வடிவாக நின்றிருந்தது ஒரு ஒற்றை பனை மரம்!
மரம் செடி கொடிகளுக்கும் உயிரும் உணர்ச்சியும் இருக்கிறது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. எனது தாத்தா தான் வளர்த்த செடிகளோடு பேசுவதை மற்றவர்கள் கேலி செய்த போதும் நான் செய்ததில்லை. என்னவோ தெரியவில்லை எனக்கு இப்பனை மரத்தை பார்த்தபோது ஒரு பழைய நண்பனை பார்ப்பது போல தோன்றியது. தொட வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டது . சுற்றும் முற்றும் பார்த்து யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டபின் புல்வெளியின் குறுக்காக நடந்து மரத்தை அடைந்து மெதுவாக அதைத் தொட்டேன். எனக்குள் ஒரு சிலிர்ப்பு. மரத்தை அண்ணாந்து பார்த்தவாறு இருந்தேன். மனதில் யாரோ பேசுவது ஒலித்தது.
"நீங்கள் என்னை மறக்கவில்லை. நானும் உங்களை மறக்கவில்லை. என் இப்போதைய நிலையை பாருங்கள். என்னுடைய நண்பர்களையெல்லாம் அந்த நண்பகலில் வெட்டி சாய்த்து விட்டார்கள் . எங்கள் கிளைகளில் இருந்த பறவை கூடுகளை எல்லாம் குஞ்சுகளோடு பிய்த்து தூர எறிந்து விட்டார்கள். இவர்களின் கட்டிட கான்கிரீட் காட்டுக்குள் ஒற்றை மரமாக வெறும் அலங்காரத்திற்காக என்னை உயிரோடு விட்டு இங்கே நிறுத்தி இருக்கிறார்கள். என்னால் இங்கு மூச்சு கூட விட முடியவில்லை. இங்கு யாரோடு நான் பேசுவேன்? பழைய நினைவுகள் அலை அலையாக வந்து மோதி என்னை சோகத்தில் முழு கடிக்கின்றன. என் உடன்பிறப்புகளான பனை மரங்களும் மா மரங்களும் அன்று எழுப்பிய மரண ஓலங்கள் என் காதுகளை விட்டு நீங்கவே மாட்டேன் என்கிறது . வெட்டி அடுக்கி விட்டார்கள் விறகுகளாக என் கண் முன்னே. நாங்கள் ஒன்றாக மழையில் நனைந்தது, வெயிலில் காய்ந்தது, புயலுக்கு நடுங்கி கூச்சலிட்டது, பூத்துக் குலுங்கியது ,காய்த்து பெருமை அடைந்தது எப்படி மறப்பது? இத்தனை வருடங்களாக என் மனக் குமறல்களை கொட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இங்கு வேலை செய்பவர்கள் யாரும் எனக்கு மனிதர்களாகத் தெரியவில்லை இயந்திரங்கள் வெறும் இயந்திரங்கள். என்னை ஒரு தடவையேனும் இவர்களில் எவரும் ஏறெடுத்துக்கூட பார்த்ததில்லை. நல்ல வேளை நீங்கள் வந்தீர்கள். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா ? எப்படியாவது இந்நிறுவனத்தாரோடு பேசி என்னையும் வெட்ட சொல்வீர்களா?"
"சார் புல்வெளியில் நிற்கவோ நடக்கவோ கூடாது. போர்டை பார்க்கவில்லையா நீங்கள்?" செக்யூரிட்டியின் குரல் என்னை தரைக்குக் கொண்டு வந்தது . மரம் என்னிடம் பேசியதை என்னால் ஒரு கனவாகவோ பிரமையாகவோ எடுத்துக் கொள்ள முடியவில்லை. நடந்தது நிஜம். எனக்குத் தெரியும் உணர்ச்சிகளையும் சொல்ல வேண்டியவைகளையும் ஸ்பரிசத்தின் மூலமாகவும் வெளிப்படுத்தவும் உணரவும் முடியும் என்ற உண்மை.
இந்நிறுவனத்தின் தலைவருக்கு இவ்வொற்றைப்பனை மரத்தை வெட்டி கருணைக்கொலை செய்ய சொல்லி ஒரு கடிதம் எழுத முடிவு செய்துவிட்டேன்.