

பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
நுழைவாயிலின் அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்ட், காத்து நின்ற ஆட்டோக்களால், நிறை மாத கர்ப்பிணியாய்த் தத்தளிக்க, அதை ஒட்டி இருந்த மரங்களின் நிழல்களில் போடப்பட்டு இருந்த சிமெண்ட் மேடைகளில் எல்லாம் நோயாளிகளைக் காணவந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூட்டம்.
மருத்துவமனையின் வலப்புறத்தில் சிவப்பு நிறப் பின்னணியில் கூட்டல் குறியோடு எழுதப்பட்ட போர்டுடன் அவசரப் பிரிவு அல்லோகலப் பட்டுக்கொண்டிருந்தது.
நடைபாதை எல்லாம் கவலை தோய்ந்து, கண்ணீர் வற்றிப் போய் நடைப்பிணங்களாய் மனிதர்கள்.
இந்தச் சூழலில் தனது கழுத்தில் சுற்றி இருந்த ஸ்டெதாஸ்கோப்பை எடுத்துக் கையில் உருட்டிய வண்ணம் பலவிதமான சிந்தனைகளில் வெளிவந்த டாக்டர் மோகன்,
எதிரே வரும் தனது நண்பன் சந்திரசேகரைக் கண்டவுடன்,
“டேய் சேகர்.. என்னடா எப்படி இருக்கே?” என்றவரை,
“பெரம்பூர்ல கொஞ்சம் வேலையிருந்தது. அதான் அப்படியே உன்னையும் பார்க்கலாமேன்னு..."
“என்னடா, என்ன! ரொம்பவும் டல் அடிக்கிற. எங்க டாக்டர் தொழிலை விடவா உனக்கு ரொம்ப கஷ்டம்?”
“அது, தொழில்ல பணப்பிரச்சினை. சரி, உனக்கு என்னாச்சு? ரொம்ப வெறுத்துப் பேசற?”
“அட, ஆமாடா. சரி, சரி... வா, கேண்டீனுக்குப் போய்ப் பேசலாம்.“ என்று சேகரின் தோளில் கை போட்டவாறு நடந்து கேன்டீனை அடைந்து, இரண்டு காபிக்கு ஆர்டர் கொடுத்தார் டாக்டர் மோகன்.
“என்ன விஷயம்?“ என்ற சேகருக்கு,
“ஒரே மெஷின் லைஃப்டா. அதுவும் தினமும் எங்க பொழுது விடியறது ஒரு நோயாளி முகத்தில தான். யார்கிட்ட பேசினாலும் ஒரே புலம்பல். ஊசி, மருந்து, செக்கிங்... இதான் வாழ்க்கைடா. இது செம போர்.”
“மோகன், எல்லார் வாழ்க்கையும் இப்படித்தான். நானும், இப்படிதான் நினைப்பேன். ஆனா, எதில தான் பிரச்சனை இல்லை, வெறுப்பில்லை?”
“இங்கே பாரு, மத்தவங்க தொழில் வேற. எங்க தொழில் வேற. எங்ககிட்ட வர்றபோது எல்லாருமே பேஷண்ட்டா, நோயாளியா வர்றாங்க. கவலையோட வர்றாங்க. அதேயிது, நோய் குணமாயிட்டதுக்கப்புறம் சந்தோசமா வெளியில போயிடுவாங்க. ஆனா, நாங்க மட்டும் திரும்பத் திரும்ப நோயாளிகளையே, பார்த்துக்கிட்டு.... ம்..."
“அப்படிச் சொல்லாதேடா. இது ஒரு பொது சேவை. டாக்டர்ஸ் எல்லாம் கண் கண்ட தெய்வம். உனக்கெல்லாம் ஒரு பாக்கியம் இருக்கணும்.“
“எதையுமே வெளியிலிருந்து பார்த்தால் சுகமாத்தான் தெரியும். உள்ளே வந்தாத்தான் அதோட அருமை புரியும். அதைவிடு. காப்பி எடுத்துக்கோ” என்றவாறு சர்வர் கொண்டு வந்த காபியைச் சேகர் பக்கம் நகர்த்தி விட்டு, தன்னுடைய காபியை எடுத்து வாய் வரைக் கொண்டு போன டாக்டர்,
"ஐயையோ... அம்மா, இங்கே டாக்டர் மோகன் யாரு?“ எனப் பதறியவாறு ஓடிவரும் இளைஞனைக் கண்டு,
வேகமாய் எழுந்தார்.
“என்ன.. என்ன? நான்தான் டாக்டர் மோகன்” எனச் சேரைத் தள்ளிக் கொண்டு வெளிவர,
“டாக்டர்... ப்ளீஸ், என் மனைவி உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கா. நீங்க தான் தெய்வம் மாதிரி காப்பாத்தணும்” என்று கண்ணீர் விட்டுக் கதறினான் இளைஞன்.
ஆர்டர் செய்த காபியைச் சிறிது கூட குடிக்காது, அப்படியே வைத்துவிட்டு, ஆஸ்பத்திரி நோக்கி ஓடும் மோகனைப் பார்த்து...
“இவ்வளவு நேரம் புலம்பித் தீர்த்தான். இப்ப என்னடான்னா! ம்...ரொம்ப பெரீய்ய மனசு இவனுக்கு. மோகன் ஒரு நல்ல நண்பன் மட்டுமில்ல சிறந்த டாக்டரும் கூட“ என, மனதுக்குள் பெருமைப்பட்டுக்கொண்டான் சேகர்.