

ஏழு படிகள் ஏறி, கதவை வெளிப் பக்கமாகத் திறந்து கொண்டுதான் அந்த மருந்துக் கடைக்குள் போக வேண்டும். படிகளின் இடது புறம், சுவர் அமைப்பு இருந்தது. அதை ஆதாரத்துக்காகத் தொட்டுத் தடவியபடியே படிகளில் ஏறலாம். வலது புறம் அந்த வசதி இல்லை. படிகளின் நடுவேயோ, அல்லது கடைக் கதவின் கீழ்வாகாகவோ, இரும்புக் குழாய் பிடிமான அமைப்பும் இல்லை.
வேட்டி அணிந்திருந்ததால், பண்பாடு கருதி, அதை டப்பா கட்டாக மடித்துக் கொள்ளாமல், பாதம் மறைக்கத் தொங்க விட்டிருந்தேன். அதுவேறு இடரிற்று. இடது கையில் ஒரு பையை வைத்திருந்ததால், வலது கையால் சற்றே வேட்டியைத் தூக்கிக் கொண்டு படிகளில் ஏற முனைந்தேன். 70+ உடம்பு, சர்க்கரை, ரத்த அழுத்தம் காரணமாக பாலன்ஸ் இல்லாமல் தடுமாறியது.
ரிஸ்க் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கருதி, இடது புறச் சுவரைப் பற்றிக் கொள்ள முனைந்தேன். ஆனால் அங்கோ படிகளில் தண்டச் சோற்றுத் தடியன்கள் நாலைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் பீடி வேறே பிடித்துக் கொண்டிருந்தான். நான் படியேற முயற்சிப்பதையும், சுவரில் கைத் தாங்கி அவ்வாறு செய்ய முனைவதையும் கண்டும் கூட ஒருத்தன்கூட அசைந்து கொடுக்கவே இல்லை.
வேறே வழியில்லாமல் நடுவாந்திரமாகப் படிகளில் தோராய பாலன்ஸில் ஏறி, ஒருமாதிரியாக கடைக்குள் போனேன். என் கோபமெல்லாம் கடைக்காரர் மீது தாவியது. ‘‘ஏம்ப்பா, என்ன கடை நடத்தறீங்க? படிகளில் உட்கார்ந்து கொண்டு அழிசாட்டியம் பண்றானுங்க. நீங்க ஏன்னு கேட்க மாட்டீங்களா? மேலே ஏறி வர்றதுக்குள்ள நான் தடுமாறிப் போயிட்டேன்,‘‘ என்று உஷ்ணமாகச் சொன்னேன்.
‘‘அவனுங்களை எதுவும் கேட்க முடியாது சார், கேட்டா நான் தொடர்ந்து இந்தக் கடையையே நடத்த முடியாது,‘‘ என்று பரிதாபமாகச் சொன்னார் கடைக்காரர்.
மருந்துகள் வாங்கிக் கொண்டு. இறங்குமுகமாக மறுபடி படிகள்! மேல் படியில் நின்றபடி, சுவர்ப் பக்கமாகப் போக முனைந்தேன். அப்படியாவது அந்த படிக்காரன் விலகுவான் என்று எதிர்பார்த்தேன். அவனோ வெகு அலட்சியமாக மூஞ்சியைத் தூக்கிப் பார்த்து விட்டு, பிறகு குனிந்து கொண்டான்.
படிகளின் நடுவழியே, பிடிமானம் ஏதுமின்றி, தடுமாறிதான் இறங்க வேண்டும்!
‘‘ஏண்டா, கடைக்குப் போய் வர்றவங்களுக்கு தடையா இப்படி உட்கார்ந்திருக்கீங்களே, உங்களுக்கு வேலை வெட்டி எதுவும் கிடையாதா?‘‘ என் கோபம் வெடித்தது.
‘‘யோவ், பெர்சு, என்னா உதார் வுடறே? அதான், அவ்ளோ இடம் இருக்கில்லே, இறங்கிப் போயேன்,‘‘ என்று என் நிலைமையை உணராமல் சோம்பேறி சுயநலத்துடன் பதிலளித்தான் அவன்.
‘‘உங்களையெல்லாம் உண்டு, இல்லேன்னு பண்ணணும்டா! நீங்க நாசமாகத்தான் போவீங்க,‘‘ என்று சபித்துவிட்டு மெல்லப் படியிறங்கி வீடு போய்ச் சேர்ந்தேன்.
மிகுந்த சோர்வுடனும், எரிச்சலுடனும், நான் ஏதோ பேசிக்கொண்டே வந்ததைப் பார்த்த என் மனைவி, ‘‘என்னங்க, யாரைத் திட்டிகிட்டே வர்றீங்க?‘‘ என்று கேட்டாள்.
‘‘அந்த ரௌடிப் பசங்களைத்தான்,‘‘ என்று ஆரம்பித்து மருந்துக் கடை அனுபவத்தைச் சொன்னேன்.
‘‘சண்டை போட்டீங்களா?‘‘
‘‘இல்லை, சும்மா வந்திட்டேன். ஆனா அவனை எப்படியெல்லாம் ஏசியிருக்கலாம்னு யோசிச்சுகிட்டே வந்தேன்…‘‘
‘‘இது என்ன, முட்டாள்தனம்?‘‘ வெடுக்கென்று கேட்டாள் மனைவி. ‘‘ஒண்ணு அங்கேயே அவன்கிட்டேயே சண்டை போட்டிருக்கணும்; கோபமும் அடங்கியிருக்கும்; ஏதேனும் வழியும் பிறந்திருக்கும். ஆனா, பின்விளைவு எப்படி இருக்குமோங்கற பயத்திலே அப்படிச் செய்யாம, திரும்ப வர்ற வழிபூரா அவன்கூட அப்படி சண்டை போட்டிருக்கணும், இப்படி திட்டியிருக்கணும் என்று கற்பனை பண்ணிகிட்டு உங்க BPயைத்தான் ஏத்திகிட்டிருக்கீங்க… ஹும்…‘‘
நான் அமைதியாக இருந்தேன்.
‘‘ஒரு டம்ளர் தண்ணி குடிச்சுட்டு, அரை மணி கழிச்சு மானிடர்ல BP செக் பண்ணிக்கோங்க,‘‘ என்று அறிவுறுத்தினாள் மனைவி.
அப்படியே செய்தேன். வழக்கமாக 140-82 என்று இருக்கும் BP இப்போது 160-90 என்று காட்டியது.
மனைவி சொன்னது சரிதானோ?