

சில விஷயங்கள் புரியவே மாட்டேங்கிறது. அவங்களுக்கு ஒரு நியாயமா, நமக்கு ஒரு நியாயமாம், நல்லா இருக்கே!
அவங்க வீட்ல இருந்து உதவிக் கரம் நீட்டினால் அது சரி; இதுவே எங்க வீட்ல இருந்து என்றால் அது தவறாம். அவ சொல்கிறா, “இந்த ஒரு வருஷமா உங்க அப்பா காசலையா வாழ்ந்திருக்கோம்” என்று. ஏன் இவளுக்குப் புரியலையா, இல்ல தெரியவில்லையா! என்னோட இருபத்து நாலு வயசுல இருந்து வீட்டை விட்டு வெளியே வந்து இந்த உலகத்தில் போராடிட்டு இருக்கேன்.
ஏன், கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப நான் நல்லாத்தானே சம்பாதிச்சிட்டு இருந்தேன்? இந்தப் பதினைஞ்சு வருஷமா மாடா உழைத்துப் போட்டதெல்லாம் கண்ணுக்குத் தெரியலையா என்ன? வீட்டு மேல இருந்த கடனை யாரு அடைத்தது? அவங்க அப்பா இல்லையே. கேட்டா “ நீங்க வாங்குனீங்க, நீங்கதான் அடைக்கணும்”னு சொல்லுவா. அதான் நானே வீடு மேல இருந்த கடனை முழுமையா இந்தப் பதினைஞ்சு வருட திருமண வாழ்க்கையில் முடிச்சுட்டேன்.
என்னோட போதாத நேரம், இந்த ஒரு வருட காலமா வேலை இழந்துட்டேன். இத்தனை வருஷமா உழைச்சதற்குக் கிராஜுவிட்டி பணத்தை வைத்துதான் வாழ்க்கையை நகர்த்தினேன்.
ஆனா, இப்போ கையில் காசு இல்ல, உடனே நல்ல வேலையும் கிடைக்க மாட்டேங்கிறது. இதற்கு இடையில் வாழ்க்கையை ஓட்டணும், எந்தவிதத் இடஞ்சலும் இல்லாமல்.
பிள்ளைக் குட்டிகளைக் கஷ்டம் தெரியாம வளர்க்கணுமுன்னா காசு வேணுமில்ல. நான் என்ன பணத்தை அச்சடிக்கிறேனா, நினைத்த நேரத்திற்குப் பணத்தைக் கொடுப்பதற்கு? ஏதோ என்னைப் பெத்த கடனுக்கும், என் மேல் இருக்கும் பாசத்திற்குப் பலனா, என்னைப் பெத்தவங்க அவங்க பென்ஷன் பணத்திலிருந்து கொஞ்சம் பணத்தைக் கொடுத்து உதவுறாங்க.
என்ன நம்பி வந்துட்டா, பாவம். புலம்புறா. வேற என்னான்னு சொல்றது அவளை? நான் கோவமா இருந்தாலும், சோகமா இருந்தாலும் ஒரே ஆதரவு அவள்தானே. ஏதோ சொல்லிட்டுப்
போறா. இதனால அவ மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்குன்னா சரிதானே.
இல்ல, அவ என்ன நினைச்சுக்கிட்டா? மீதி இருக்கிற வாழ்க்கை நான் அப்படியே சோம்பேறியா, ஊதாரியா, உதவாகரையா மாறிடுவேன்னு. அதான் அவ இப்படி குத்திக் காண்பிக்கிறாளா? வேலை போனது என் குற்றமா? ஏதோ அத்தனை வருஷம் உழைச்சபிறகு சரியான அங்கீகாரம் இல்ல. அதனால வேலையை விடவேண்டிய சூழல்.
என்னோட போதாத நேரமோ என்னவோ, இன்னும் ஒரு நல்ல வேலை அமைய மாட்டேங்கிறது. ஏறாத இடமில்ல. ஒரு சில இடத்துல போனா, “சார், உங்களுக்கு ஓவர் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு, நாங்க எதிர்பார்க்கிறது மூணு, நாலு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்களைத்தான்”னு சொல்லுறாங்க.
இன்னும் சில இடங்களில், “நீங்க சீனியர் மேனேஜரா இருந்திருக்கீங்க. ஆனா, நாங்க ஜெனரல் மேனேஜர் லெவல்ல ஆட்களைத் தேடுறோம்”னுங்கிறாங்க.
ஒண்ணு மட்டும் நல்லாவே புரியுது வாழ்க்கையில். அதுவும் குறிப்பா, முப்பதிலிருந்து நாற்பதுகளில் உள்ளவங்க சர்வ ஜாக்கிரதையா இருக்கணுமுன்னு. என்னத்தான் மனக்கசப்பு இருந்தாலும், வேதனை இருந்தாலும், எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கிற வேலையைத் தக்கவெச்சுக்கிறதே சிறந்தது. இந்த ஞானோதயம் எனக்கு அடிபட்டவுடனேதான் தெரியுது.
இப்பத்தான் எனக்கு எங்க பழைய ஆபீஸுல என்னோட வேலை செஞ்ச பாஸ்கர் சார் ஞாபகம் வந்தது. ஏன் இப்ப அவரு ஞாபகம்னுத்தானே எல்லாரும் எதிர்பார்க்கிறீங்க? பொறுங்க, தெரிஞ்சுக்கத்தானே போறீங்க.
அவரு தினமும் வாங்காத வசவே கிடையாது. உண்மையில், பல நேரங்களில் அவர் சரியாகத்தான் அவருடைய வேலையைச் செய்திருப்பாரு. ஆனா அவருடைய பாஸ் வந்து அவரை கண்ணாபின்னான்னு ஏசுவாரு.
இவரு தலையைத் தொங்கப் போட்டுட்டு நின்னுகிட்டே இருப்பார். அப்பெல்லாம் தோணும், “என்னடா இந்த மனுஷன் ஜடம் மாதிரி எல்லாத்தையும் வாங்கிகிட்டே இருக்காரு, குறைந்தபட்சம் நான் தப்பு பண்ணலன்னு சொல்லலாமில்ல”ன்னு நினைச்சதுண்டு. அப்பெல்லாம் இந்த மரமண்டைக்கு உரைக்கவே இல்லை.
பாஸ்கர் சாரைக் கேட்டால், “அட விடுப்பா, அவருக்குச் சம்பளம் வாங்குறதே நம்ம மாதிரி இருக்கிறவங்களைத் திட்டுறதற்குத்தானே”
என்பாரு. பல நேரங்களில், “என்னடா இந்த ஆளு, பாஸ்கர் சரியான பைத்தியக்காரனா இருக்காரே, சுயமரியாதையை விட்டு ஒருத்தனால உழைக்க முடியுமா?” என்றெல்லாம் யோசிச்சதுண்டு.
ஆனா இப்பத்தானே உண்மை என்னான்னு புரியுது. பேச்சுலரா இருக்கிறப்போ எடுக்கிற முடிவுக்கும், கல்யாணம் காட்சியாகி எல்லாம் ஆனபோது எடுக்கிற முடிவுக்கும் பெரிய வித்தியாசமே இருக்குன்னு.
ஒண்டிக்கட்டையா, தனி ஆளாக இருந்தப்ப இருக்கிற தைரியம், வீரம், முன்கோபம், தெனாவட்டு எல்லாத்தையும் கல்யாணம் ஆனவுடனே மூட்டை கட்டி வச்சிரணுமுன்னு இப்பத்தான் இந்தப் பாழாய்ப்போன மண்டைக்குப் புரியுது.
ஏதோ சொல்லுவாங்க இல்ல, “இங்க நல்லா வாழ்ந்த குடும்பம்”னு. அந்த மாதிரி ஆயிடக்கூடாதுன்னா, நம்மோட சுயமரியாதையை கழட்டி ஹேங்கரில் மாட்டிறணும் போல. நெஞ்ச நிமிர்த்திகிட்டு, “நான் இப்படித்தான், என் இஷ்டம் போலத்தான் செய்வேன், நீ சொல்லி நான் செய்யணுமா?”ங்கிற வீரமெல்லாத்தையும் நல்லா மூட்டைக்கட்டிப் பரணியில போட வேண்டியதுதான்.
அப்படித்தான் பாருங்க, போன வாரம் கூட ஒரு நேர்காணலுக்குப் போயிருந்தேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டேன். ஆனா கடைசியா, நேர்காணல் நடத்துனவங்க, படிச்ச ஒரிஜினல் சர்டிபிகேட்ஸை எல்லாம் அவங்ககிட்டக் கொடுக்கணுமாம். அப்பதான் வேலைன்னு சொன்னாங்க.
புத்திக்கு உரைக்குது, நாம எப்படி இவங்களை நம்பி நம்ம சர்டிபிகேட்டைக் கொடுக்கிறது? ஆனா மனசு கடந்து அலைப்பாயுதே, வேலை, வேலைன்னு. அந்தச் சனம் ஜெயிச்சது என்னவோ புத்தித்தான். இந்த வேலை இல்லேனா இன்னொரு வேலை. அதுக்கோசரம் இவங்ககிட்ட எப்படி நம்மளோட சர்டிபிகேட்டைக் கொடுக்கிறதுன்னு அங்கிருந்து வெளியே வந்தாச்சு.
“ஏங்க, ரூமுக்குள்ள என்ன பண்றீங்க? இந்தாங்க, உங்க அப்பா லைன்ல இருக்காரு, அவர்கிட்ட பேசுங்க” என்ற குரல் கேட்டவுடன் சட்டுபுட்டுன்னு உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு வேகவேகமாக எழுந்து வந்து கதவைத் திறந்து, அவ கொடுத்த மொபைலை வாங்கி, “ஹலோ… அம்மா!”
“சாமி, நல்லா இருக்கியாப்பா?” என்ற அந்த ஒரு வரி எல்லா கவலையையும் மறக்கவைத்தது.
“அம்மா… உங்களால் நான் நல்லா இருக்கேன்.”
“சாமி, அப்படிச் சொல்லாதப்பா, கடவுளாலேன்னு சொல்லு” என்று அம்மாவும் அப்பாவும் சொல்ல,
“அப்பா, அம்மா, எனக்கு நீங்கதான் கடவுள்” என்று சொல்லி போன் காலைத் துண்டித்த அந்தத் தருணம் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. பார்வை மங்கலானது. பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்துக் கண்களைத் துடைத்த பிறகு ஒரு புதிய உத்வேகம் வந்தது.