
தினமும் காலை வேளையில் ஏரியை சுற்றி ஒரு மணி நேரம் நடப்பதை வழக்கமாய் கொண்டிருந்தேன். நடந்து முடிந்தவுடன் அங்கிருக்கும் கல் நாற்காலியில் அமர்ந்து இயற்கை அழகை ரசிப்பேன். ஜில்லென்ற காற்று, மேகத்துடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் சூரியன்... எங்கோ தூரத்தில் குயிலின் ஓசை மனதை கொள்ளை கொண்டது. இங்கே அமரலாமா என்று ஒரு குரல் கேட்டது, அது கல்யாணி ராகமா அல்லது கவுண்டமணி கூறியது போல் காற்றினிலே வரும் கீதமா என்று பார்த்தேன், தாராளமாக என்றவுடன் அவள் தனது தாயை எனது பக்கத்தில் அமர வைத்து அவள் எதிரில் இருக்கும் சுவரின் மீது அமர்ந்து கொண்டாள்.
நான் அவளை சில முறை பார்த்திருக்கிறேன். இப்பொழுதுதான் அவளை அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கருத்த கூந்தல் மிக மிக அடர்த்தியாக இருந்தது. அதை பார்த்தவுடன் விஜய் சேதுபதி படத்தின் கதாநாயகி போல் கார்மேகக் குழலி என்ற பெயர் இருக்குமோ என்று நினைத்தேன், அந்த கணம் அவளது அம்மா அவளை 'வசந்தி இதோ பார்' என்று அழைத்தாள். ஒரு கணம் யோசித்தேன் வசந்தத்துக்கு வசந்தி என்ற பெயர் மிகவும் பொருத்தமான காரணப்பெயர் தான் என்று. ஜில்லா பட பாணியில் விஜய் போல் என்ன மாடர்ன் நேம் என்று தோன்றியது.
கணநேரம் எங்கள் கண்கள் சந்தித்தபோது என்னை அப்படியே கரைத்தது. தெறி படத்தில் சமந்தா கூறியதைப் போல் அந்த ஒரு கணத்தில் என்ன தோன்றியதோ அதுதான் நூறு வருஷத்துக்கு பிறகும் தோன்றும் என்று தோன்றியது. அவள் லேசாக புன்னகைத்தாள், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் பட்டப் பகலிலே பங்குனி வெயிலிலே என்னை பார்த்து சிரிக்கும் நிலா சிவகார்த்திகேயன் கவிதை ஞாபகம் வந்தது! மதி மயங்கினேன்.
அதன் பிறகு அடிக்கடி அவளை கடந்து செல்லும் போது கவனித்திருக்கிறேன். அவள் முகத்தில் ஒரு சிறு புன்னகை மலர என்னை நோக்குவதை பார்த்திருக்கிறேன். வசீகரா படம் விஜய் சொன்னது போல இந்த புன்னகையில் என்ன வில்லங்கம் இருக்கிறதோ என்று நினைத்தேன்.
நான் மாலை வேளையில் சில சமயம் ஏரியை சுற்றி வேடிக்கை பார்த்து அங்கே அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருப்பேன். நான் வரும்போது மாலை வேளையில் அவளும் வருவதை கவனித்தேன் ஆச்சரியமாக இருந்தது.
அவள் என்னை பார்ப்பது போல் எனக்கு தோன்றும். காதலில் சொதப்புவது எப்படி சித்தார்த் சொன்னதைப் போல ஒரு ஓவியத்தை எங்கிருந்து பார்த்தாலும் அது நம்மை பார்ப்பது போலவே இருக்கும் என்றும் அதே போல் தான் நமக்கு பிடித்த பெண்ணும் நம்மை பார்ப்பது போலவே தோன்றும் என்றும் எனக்குத் தோன்றியது.
இப்படியாக சில நாள் கடந்தது ஒரு நாள் நான் அமர்ந்திருக்கும் போது, அந்த பெஞ்சில் வந்து அவளும் அமர்ந்தாள். என்னை பார்த்து புன்னகைத்தாள்; நானும் புன்னகைத்தேன். சிறிது நேரம் இயற்கையைப் பற்றி பேசினோம். அவள், 'ஓகே நேரம் ஆகிவிட்டது... நாளை பேசலாமா?' என்று சொன்னாள்.
நானும் 'சரி' என்றேன். அவள் விடைபெற்று சென்றாள். அவள் சென்றவுடன் எனக்கு தெறி பட ஞாபகம் வந்தது. சமந்தா ஓகே சொன்னது போல், விஜய் பாணியில் இந்த ஓகே என்ன அர்த்தம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
மறுநாள் அவள் அதே இடத்திற்கு வந்தாள். நாங்கள் இருவரும் பேசத் தொடங்கினோம். அவள் 'எனக்கு உங்களை பிடித்திருக்கிறது' என்றாள். நான் அவன் வேற மாதிரி பட கதாநாயகன் போல், 'என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்?' என்று கேட்டேன். அவள் எனது முழு வரலாற்றை கூறினாள் அதிர்ந்து போனேன். இதுவும் அவன் வேற மாதிரி படத்தில் வரும் காட்சி போல் இருந்தது.
அப்புறம் அவளே சொன்னாள்... எனது நண்பன் அவளுக்கு தூரத்து உறவு அவனிடத்தில் கேட்டு தெரிந்து கொண்டாள் என்று. எங்கள் வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் போல் அன்கண்டிஷனல் லவ் என்று கூறினாள்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களுடைய அம்மா அந்த இடத்துக்கு வந்தார்கள், 'உங்க அம்மா..?' என்றேன். அவள் சண்டைக்கோழி கதாநாயகி போல் 'அம்மாவுக்கு எல்லாம் தெரியும்' என்று சிரித்தாள்.
திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது... அவள் அப்பா அலைபாயுதே மாதவன் அப்பா போல் பேசுவாரா? அல்லது ராஜா ராணி படத்தில் சத்யராஜ் கூறியது போல் 'நிறைய டிவி சீரியல் பார்ப்பார் போல் இருக்கிறது அதே வசனம் பேசுகிறான்' என்பாரா? அல்லது அதே சத்யராஜ் லவ் டுடேயில் சொன்னது போல் 'தெரிஞ்சுக்கணுமா இல்லையோ?' என்று கேள்வி கேட்பாரா என்று வியந்தேன் அவளிடம் அதை கூறினேன், அவள் சுறா கதாநாயகி போல், 'எங்க அப்பா ஒரு டம்மி பீஸ்; எனக்கு எதிராக எதுவும் சொல்ல மாட்டார்,' என்றாள்.
அபியும் நானும் பிரகாஷ்ராஜ் போல பெஞ்சில் என்னுடன் அமர்ந்திருந்த அண்ணாச்சியிடம் என் கதையை கூறினேன்.
விஜய் சேதுபதி கூறியது போல 'அண்ணாச்சி குமுதா (வசந்தி) ஹாப்பி அண்ணாச்சி' என்றேன்.
அண்ணாச்சி 'அட போயா!' என்று எழுந்து போனார்.