

காதல்..! காதல்..!! காதல்… !
இது ஒரு மென்மையான உணர்வு. காதலியை பார்த்தாலே பரவசம். மெய் சிலிர்க்க வைக்கும். அவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அவளுடன் பேச தீராத ஆசை தோன்றும்.
தன்னை பற்றி முழுவதும் சொல்ல மனம் ஏங்கும். பசி எடுக்காது. அவளை அடுத்து எங்கே பார்க்கலாம் என்று மனம் கணக்கு போடும். எனக்கு இந்த விஷயத்தில் அனுபவம் உண்டு.
ஆம்.
நான் பல்வேறு கட்டங்களில் பல பெண்களை காதலித்து உள்ளேன். காதல் என்றால் தூய, மெய்யான காதல். நான் என் அனுபவத்தை கசக்கி பிழிந்து அந்த பாடத்தை சொல்ல விரும்புகிறேன்.
முதலில் அவளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவளது குடும்ப பின்னணி பற்றி முழுதாக தெரிந்து கொள்ளுங்கள். அவளை பற்றி பகல் கனவு காண்பதை நிறுத்தி நடைமுறையில் இறங்குங்கள்.
காதல் செய்யும் ஆண்களுக்கு சில விஷயங்களை பகிர அவசியம் இருக்கிறது. எனக்கு என்ன அறுகதை உள்ளது என நீங்கள் நினைப்பது எனக்கு தெரியும்.
எனக்கு இப்போது வயது 63.
இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை. என்னிடம் பணம் இல்லை. வேலையும் இல்லை. எனக்கு என் குறை தெரியும். இருந்தாலும் உண்மையாக காதலித்தேன்.
வாழ்க்கை முழுவதும் நான் செட்டில் ஆகவில்லை. நான் ஒரு முதுகலை பட்டதாரி தான்.
வேலை கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் 3 மாதங்கள் மேல் என்னை வைத்து கொள்ளவில்லை. வேலை உங்களுக்கு இல்லை என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். வேலையில் பக்காவாக இருப்பேன. வேலையில் ஒரு குறையும் காண முடியாது.
நான் காலை சாப்பாட்டிற்கு முன் 2 முறை, மதியம் சாப்பிட்டு விட்டு 2 முறை டீ குடிக்கவும், சிகரெட் குடிக்கவும் போய் விடுவேன். இது என் மேல் அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இதை சொல்லாமல் வேறு உப்புச்சப்பற்ற காரணம் சொல்லி அனுப்பி விடுவார்கள்.
55 வயது வரை நான் பல பெண்களை காதலித்து இருக்கிறேன். எல்லாமே ஒரு தலை காதல். இல்லை அவர்கள் விரும்பி கூட இருக்கலாம். ஆனால் எனக்கு வேலை இல்லை. எந்த சொத்தும் எனக்கு இல்லை.
வங்கியில் ஒரு கணக்கு கூட இல்லை.
அதாவது… நான் காதலிக்கும் பெண்கள் இப்படி கூட யோசித்து இருக்கலாம். “பணம் இல்லாதவன் எப்படி நம்மை வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற முடியும்..? ” என நினைத்து இருக்கலாம்.
நான் எத்தனை பெண்களை காதலித்தேன் என்று எண்ணக் கூட முடியவில்லை. சுமார் 9 அல்லது 10 பேர் இருக்கலாம். நான் உண்மையில் தான் காதலித்தேன்.
நான் காதலித்த எல்லோரும் நல்ல அழகிகள். நல்ல புத்திசாலிகள். ( ஓ..! அதனால் தான் என்னை ஒதுக்கி விட்டார்களா… ? ).
ஒரு கல்லூரி மாணவி “உனக்கு என்ன தகுதி இருக்கு..?” என்று அவமானம் செய்தார்.
இன்னொரு பெண் வீட்டிற்கே சென்று பெண் கேட்டேன்.
“இல்லை. அவளுக்கு துபாய் மாப்பிள்ளை உடன் நிச்சயம் ஆகி விட்டது..! ” என்று பொய் சொன்னார் அவள் அப்பா.
என் அம்மா, அப்பா இறந்த பிறகு என் அண்ணண், அண்ணி, அக்கா என் வற்புறுத்தலால் வீட்டிற்கே சென்று பெண் கேட்டார்கள்.
பெண்ணின் தந்தை… “ஒரு தராதரம் வேண்டாமா..? ” என்று சொன்னார். "அவர் கேட்டாலும் நீங்கள் எப்படி வீட்டிற்கே வந்து பெண் கேட்பீர்கள்..?" என்று மூஞ்சியில் அடித்து வெளியே துரத்தி விட்டார்.
ஒரு பெண்ணுக்கு என்னை பிடிக்கும். ஆனால் ஒரு பணக்காரர் வந்ததும் அவரை கல்யாணம் செய்து கொண்டார்.
எனக்கு பிடித்த 2 பெண்கள்...
மதுரை மற்றும் கோவையில் இருந்தார்கள். மதுரை பெண் என்னை விரும்பியது எனக்கு தெரியும். நான் ஊட்டியில் இருந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்தேன். பதில் இல்லை.
கோவை பெண், என் நிலை அறிந்து என்னை விட்டு விலகினார்.
சென்னையில் ஒரு பெண். தினமும் பஸ்சில் அவர் அலுவலகம் வரை போய் விட்டு வருவேன். செவ்வாய், வெள்ளிக்கிழமை கோவிலில் சந்திப்பேன்.
நான் ரோட்டில் “ உங்கள் பேர் என்ன..? ” என்று கேட்டேன்.
அலட்சியமாக “ரொம்ப முக்கியம்..!” என்று சொல்லி நழுவி விட்டார்.
அய்யோ…!
வங்கியில் வேலை செய்த பெண்ணை பல வருடங்களாக காதலித்தேன். அவர் நன்கு பழகுவார். அடிக்கடி அந்த வங்கி சென்றேன். அவருக்கு நன்கு தெரியும் நான் அவரை காதலிப்பது. அவருக்கு வாராவாரம் ஏதாவது ஒரு பரிசு பொருளை வங்கி முகவரிக்கு அனுப்புவேன்.
என்னால் காதலை சொல்லாமல் இருக்க முடியவில்லை. எனவே ஒரு 4 பக்க கடிதம் எழுதினேன்.
பதில் இல்லை.
சீக்கிரமே எனக்கு ஒரு கால் வந்தது. “நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. அந்த பெண்ணின் மாமனார் தான் பேசுகிறேன் ” என சொன்னார்!
“ என்ன கல்யாணம் ஆகி விட்டதா..?”
“ ஆமாம்..!”
நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.
நான் மனம் உடைந்து விக்கி விக்கி அழுதேன்.
இப்படி காதல் தோல்வி என்னை உலுக்கியது. ஆனால் சோகம் அடுத்த காதலியை காணும் வரை மட்டுமே. புதிய காதலி பின்னால் சுற்ற ஆரம்பித்து விடுவேன் இது தொடர்கதை ஆனது. நான் என் 55 வயது வரை யாரையாவது காதலித்து கொண்டு தான் இருந்தேன். அதன் பிறகு “காதல் கசந்து விட்டது”.
நான் கடவுளை காதலிக்க ஆரம்பித்தேன். 'ஓ…! இது தான் பக்தி' என்று அறிந்து கொண்டேன்.
ஆம்.
நான் காதலித்த எந்த பெண்ணும் என்னை விரும்பவில்லை. எனக்கு அது கூட பிரச்சினை இல்லை. நான் காதலை தெரிவித்தவுடன் அவர்கள் காதலை மறுக்க உரிமை இருக்கிறது. ஆனால் காதல் செய்பவரையே தூக்கி எறிந்தார்கள. இது மிகவும் தவறு. மோசமாக பேசினார்கள். இது பெரிய தவறு மட்டும் அல்ல. மனிதாபம் அற்ற அணுகுமுறை. கடுமையான வார்த்தைகள். ஆளையே தூக்கி எறிந்தார்கள். மிகவும் மனிதாபம் இல்லாமல் மிகவும் மோசம்.
அதனால் தான் காதலன்கள் கவனிக்க என்று இக்கதையை எழுதினேன்.. தயவுசெய்து கீழே உள்ள நிபந்தனைகளை கவனிக்கவும்….
1. சொத்து இருக்கா… ?
2. பணம் இருக்கா… ?
3. வேலை இருக்கா… ?
இந்த 3 கேள்விகளுக்கும் ‘இருக்கு ‘ என்று பதில் இருந்தால் நீங்கள் தாராளமாக காதலிக்கலாம்.
3 கேள்விகளுக்கும் இல்லை என்று பதில் இருந்தால்… தயவுசெய்து யாரையும் காதல் செய்யாதீர்கள்… !
ஏன்… ? என்றால்… .
காதலுக்கு கண் உண்டு..! மனசு இல்லை !