

“அனுமதி இல்லை. சம்மதிக்க மாட்டேன்." ஆத்திரமாய் கத்தினாள் பவானி.
“அம்மா எனக்கு பிடிச்சிருக்கு. என் வயது 18. உன் பெர்மிஷன் தேவையில்லை...“ நடிகை வீணா மிக சாதாரணமாய் பேசினாள்.
“திமிரா பேசறியா எல்லாம் நான் கொடுத்த செல்லம். எங்கிட்டே இப்படி பேசறோமே என்று வருத்தமே இல்லையா?“அழுதாள் பவானி.
“சும்மா சென்டிமென்ட் என்ற மிளகாய் பொடியை கண்ணிலே தூவாதே, நானென்ன உனக்கு குளிர் காயும் மெஷினா?” வீணா சீறினாள்.
“ஏய் உன்னை 13 வயசிலே கதாநாயகியா அறிமுகம் செய்து அசத்தியவள் நான்."
"இந்த ஆறு வருடமாய் எவ்வளவு பணம் சம்பாதி்ச்சிருப்பேன். அதையெல்லாம் நான் கணக்கில் வைச்சுக்கலை. ஆனா என் பேங்க் பேலன்ஸ் மட்டும் மினிமம் தொகை ஆயிரமாகவே எப்போதும் இருந்திருக்கு. என்ன காரணம்? அவ்வளவு பணம்? எங்கே போச்சு?” சீறினாள்.
“நாலு படம் எடுத்தோமே உன்ன ஹீரோயினா போட்டு, நாலும் படுத்திடிச்சு மொத்தமாய் 133 கோடி நஷ்டம்.”
“பொய் சொல்லாதீங்க. மூணு படம் வெற்றி. அந்த வெற்றி விழாக்களில் நானும் கலந்துகொண்டேன். ஒரு வெற்றி விழாவில் தான் உன் மாஜி கணவனை அறிமுகப்படுத்தினே...”
“உன் அப்பாவைனு சொல்லு.”
“தப்பு. என்னை அநாதை இல்லத்திலிருந்து எடுத்தே.”
“உன் அப்பா அவர் தான்.”
“நீ தான் சொல்றே. அவர் அதை ஒத்துக்கலை” என்று இடைமறித்தாள்.
“எல்லா பேட்டிகளிலும் இதையே சொன்னார், சொல்கிறார், சொல்வார்.”
“அதெல்லாம் மார்க்கெட் மெயின்டைன் பண்ண பேசறது.“
“எதுக்கு வளவளனு பேசிக்கிட்டு. நான் குமாரோடத்தான் வாழப்போறேன்.”
“ஏய் அவன் சின்னப்பையன். எக்ஸ்ட்ரா டான்ஸர். கையில் பத்து பைசா பெற மாட்டான். அவனைப்போயி...”
“எனக்கும் தான். பேங்கில் பத்து பைசா இல்லை.“
“சே... நீயும் அவனும் ஒன்னா?”
“அதைப்பற்றி நீ ஒன்னும் பேச வேண்டாம்.”
“சொல்லிட்டேன் கேட்டா கேளு இல்லை நாசமாய் போ. அதுக்கு முன்னாடி எங்க பிழைப்புக்கு 100 கோடி தந்துட்டு போ.“
“லூஸா நீ அவ்வளவு பணத்துக்கு நானெங்கே போவேன்?”
“அப்ப அவனை விட்டு விலகு.”
“முடியாது எனக்கு காலையில் ஷூட்டிங் இருக்கு” என்று நகர,
“இன்னைக்கு காலையில் என்ன... இந்த வாரமே ஷூட்டிங் இல்லை. கால்ஷீட் கவனிக்கிற எனக்கே அல்வாவா? அந்தப் பையனோட ஓடப்போறேனு சொல். விடுவேனா?” சட்டென வெளியேறி கதவைப் பூட்டினாள் பவானி.
“ஏய் ஏய் பூட்டாதே?” கதவை தட்டினாள் வீணா.
கோவில் வாசலில் வீனாய் காத்திருந்த மாது பொறுமையிழந்த நிலையில் தவிக்க செல்ஃபோனில் வீணா.
“வீணா என்னதிது? வரலையா? ப்ளான் பணாலா?” கோபமாய் கத்த,
“இடியட் என்னை பூட்டிவைச்சிருக்காங்கடா, எதாவது பண்ணு" அழுதாள்,
உடனே காரில் கிளம்பிய மாது வீணா வீட்டு பின்புறம் காரை நிறுத்தி, யாரோடோ செல்ஃபோனில் பேசினான்.
விடுவிடுவென அவர்கள் உள்ளே புகுந்தார்கள். அடுத்த நிமிடம் பவானி வெளியே வந்து மாதுவின் காரில் ஏற, பாஸ்புக்களை எடுத்திட்டியா எங்கே காட்டு...” என்றான் மாது.
“என்னை சந்தேகப்படறியா?”
“ஆமாம் முதலில் வீணாவை காதலிப்பது போல நடிச்சேன் அவள் கணக்கில் பணம் இல்லை தெரிஞ்சதும் ரகசியமாய் உன்னை பிடித்தேன். பணம் யாரிடம் இருக்கிறதோ அவள் தான் என் நாயகி“ என்றான்.
மாது ஹைவேஸில் ஹைஸ்பீடில் விரைந்தான் ஏர்போர்ட்டுக்கு.