

சந்திரன் ஒரு பெரிய பணக்காரர். ஆனால் அவர் அண்ணன் எல்லா சொத்துக்களையும் தனது பேரில் எழுதி கொண்டார். சந்திரனுக்கு கல்யாணம் ஆகவில்லை. அவர் அண்ணன் கல் மனது காரர். தம்பி என்று கூட பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டார்.
சந்திரனுக்கு அதிர்ச்சி. அவர் தனது சுய நினைவை இழந்தார்.
ஆம்… அவருக்கு…
பைத்தியம் பிடித்தது… !
அவர் ஊர் எது என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் கதையை என்னிடம் சொன்னார்.
அவர் கிழிந்த, அழுக்கு படிந்த லுங்கி மற்றும் கிழிந்த சட்டை போட்டுக் கொண்டு இருந்தார்.
தோளில் ஒரு பை. அதில் ஒரு டம்ளர் மற்றும் ஒரு அலுமினிய தட்டு இருந்தது. பிறகு 2 கிழிந்த சட்டைகள்.
அப்போது மெயின் ஆற்காடு ரோட்டில் ஒரு டீ கடை இருந்தது.
சந்திரன் வருவார். அவருக்கு பன்னும், டீயும் வாங்கி கொடுப்பேன். அவரிடம் ஒருமுறை விசாரித்தேன். உங்கள் வியாதி மனநோய். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும். எல்லாம் சரியாக போய் விடும் என்று சொன்னேன்.
“ எங்கு..? ” எனக் கேட்டார்.
“அயனாவரம் மனநல மருத்துவமனை… நான் ஒரு கடிதம் எழுதி தருகிறேன். நீங்கள் அங்கே சென்று லெட்டரை டாக்டரிடம் கொடுங்கள்… !“ என்றேன்.
மறுநாள். காலை சந்திரன் வந்தார். இரண்டு பிஸ்கட் மற்றும் டீ வாங்கி கொடுத்து விட்டு… அவரிடம் நான் வைத்து இருந்த கடிதத்தை கொடுத்து பயண செலவுக்கு ₹20 தந்தேன். "இன்றே போங்கள்" என்று சொன்னேன்.
“ சரி… ! ” என்று புறப்பட்டு போனார்.
மனநல மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்தது.
யாராவது சொந்தகாரர் வர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
இதை கேட்டதும் எனக்கு மிகவும் கோபம் வந்தது. "சரி… சந்திரன் நாளை காலை வாருங்கள்" என்று சொன்னேன்.
மறுநாள் காலை.
பேருந்தில் சந்திரனை ஏற்ற மறுத்தார் நடத்துனர். நான் சந்திரன் என் அண்ணன் தான் என்று சொல்லி சந்திரனை பஸ்சில் ஏற்றினேன்.
எனக்கு மிகவும் கோபமாக இருந்தது.
மனநல மருத்துவமனையில் டாக்டரிடம் “ ஏன் இவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தீர்கள்… ?“ என காட்டமாக கேட்டேன்.
“இங்கு வரும் நோயாளிகள் யாரவது துணையுடனே வர வேண்டும்… இது கண்டிஷன்… ! ”
“உறவினர்கள் யாரும் இல்லை என்றால் சிகிச்சை தர மாட்டீர்களா… ? இது என்ன நியாயம்… ? ”
“ ஆம்… நிச்சயமாக… ! ”
“ சரி சார்… இவர் என் அண்ணன் தான்… . சிகிச்சை அளியுங்கள்… தயவுசெய்து..!”
“ முடியாது… நீங்கள் பொய் பேசுகிறீர்கள்… ! ”
“ சரி… அனாதை என்றால் சிகிச்சை தர முடியாதா…? ”
“ ஆம். தர மாட்டோம்… இது உறுதி… ! ”
“ உங்கள் இதயம் என்னக் கல்லா… .? ஈவு இரக்கம் இன்றி பேசுகிறீர்கள்… ? சார்… நான் டாக்டர்களை கடவுளாக நினைப்பவன்… தயவுசெய்து இவருக்கு சிகிச்சை தாருங்கள்… ! ”
“ முடியாது… அவருடன் ஒருவர் எப்போதும் இருக்க வேண்டும்.!”
“ சார்.. நான் இருக்கிறேன்… ! ”
“ முடியாது… ! ”
“ உறவினர்கள் மட்டுமே இருக்கலாம்… . ! ”
“ சார்.. கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. அவர் இப்படி ஆனதற்கு காரணமே அவர் உறவினர்கள் தான். முக்கியமாக அண்ணன்… ! ”
“ நீங்கள் போகலாம்… முடியாது என்றால் முடியாது தான்… ! ”
"நான் முதலமைச்சருக்கு கடிதம் போடுவேன். புகார் கொடுப்பேன்…! ”
“ தாரளமாக… கொடுங்கள்… ! ” என்று துண்டித்தார்.
சந்திரன் பக்கத்தில் தான் இருந்தார்.
ஒன்றும் செய்ய முடியவில்லை.
நான் சந்திரனோடு திரும்பினேன்.
ஒரு டீ கடையில் 2 இட்லியும் ஒரு காபியும் வாங்கி கொடுத்தேன்.
“ உங்களுக்கு யாரவது தெரிந்த உறவினர்கள் இருக்கிறார்களா… ?”
“ இல்லை… ! ”
“ சரி. போய் நல்ல குளியுங்கள் … உடையை கசக்கி மாற்றுங்கள்.!”.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பினேன்.
ஒரு மாதம் கழித்து அரசிடம் இருந்து பதில் வந்தது. “நீங்கள் மனநல மருத்துவமனை சென்று இந்த கடிதத்தை கொடுங்கள். சிகிச்சை அளிக்கப்படும்…”
எனக்கு சந்தோஷம்.
ஆனால் சந்திரன் எங்கே என்று தெரியவில்லை. இடத்தை மாற்றி விட்டார் போல. ஒரு மாதமாக காணவில்லை.
கைக்கு எட்டியது வாய்க்கு கிடைக்காமல் போனது போல இப்போது சந்திரன் எங்கே என்று தெரியவில்லை.
நான் சந்திரன் பற்றி சிந்திப்பதை நிறுத்தினேன்.
இல்லை என்றால்…
எனக்கு பிடித்து விடும்…
பைத்தியம்… !