
இன்று முதன் முதலாய் புருஷன் வீட்டில் சமையல் செய்கிறாள் உமா.
கணவன் மதியும் நாத்தனார் விஜியும் “அப்ப நாமெல்லாம் இன்னைக்கு சாயங்காலம் ஆஸ்பத்திரியில் ஃபேமிலி ரூமில் அட்மிட் ஆக வேண்டியது தான்” என்று கேலி செய்தனர்.
உமா “அவ்வளவு மோசமாய் சமைக்க மாட்டேன்” என்று சொல்ல,
“அப்ப அவுட் பேஷன்ட் ஆகிறா மாதிரி சமைப்பீங்கனு சொல்லுங்க” விஜி மறுபடியும் கேலி செய்ய,
“பாருங்க அத்தை...” என்று உமா மாமியாரிடம் புகார் செய்ய,
“என்ன எல்லோரும் கேலி செய்யறீங்க. துணிந்து இந்த வீட்டில் இன்று சாப்பிடப்போறவங்க மட்டும் கேலி பண்ணுங்க” என்றாள்.
“உங்களிடம் சொன்னேன் பாருங்க, அவங்களே தேவலாம்” என்ற உமா,
“சமையலறைக்குள் இன்று நீங்க மட்டும் தான் அலெளட். மத்தவங்க டைனிங் டேபிள் தாண்டி வரப்படாது,” என்றாள்.
"எனக்கு டைனிங் டேபிளை பாத்தா பலி ஆடு வெட்டற மேடை மாதிரி தெரியுது" என கணவன் மதி சொல்ல,
“கலகலப்பா இருக்கிற வீடு சாப்பாட்டுக்கு அப்புறம் கை கலப்பாயிடக்கூடாது” விஜி கமென்ட் அடித்தாள்.
“இரு இரு நீயும் ஒரு வீட்டில் சமைப்பே அப்ப கவனிச்சுக்கறேன்” என்றாள் உமா.
“சரி என்ன மெனு?”
“ஒவ்வொரு ஐட்டமும் நம்மை தாக்கும் ஆயுதங்கள்” விஜி எச்சரித்தாள்.
“பி சீரியஸ்... “
“அது உங்க சமையலை சாப்பிட்ட பின் நாங்க ஆறது” மதி விட் அடித்தான்.
“நான் சமைக்கனுமா வேணாமா? இப்படியே பேசிக்கிட்டிருந்தா?” உமா அழு குரலில் உத்தரவு கேட்டாள்.
“சிம்பிளா பண்ணு போதும்...”
“உமாவுக்கு எல்லாமே டிஃபிகல்ட் தான்” மதி இரக்கப்பட,
“அவளை சமைக்க விடுங்கடா” மாமியார் அடக்கினாள்.
“பாயசம், பூசனி சாம்பார், உருளைக்கிழங்கு கறி, லெமன் ரசம்” மாமியார் சொல்ல,
“ஐய்ய்யோ! சாதம் கிடையாதா?“ உமாவின் அலறல்.
“சபாஷ்! எவ்வளவு பெரிசா கண்டு பிடிச்சிருக்கா தெரியுமா? அவார்ட் வின்னிங் கேள்வி? எந்த காலேஜில் படிச்சே? வெளியே சொல்லாதே? கண் படும்” மதி சொல்லி சிரிக்க,
“சாப்பிட உங்கம்மா அப்பா வராங்களா? வரேன்னு நேத்து சொன்னாங்களே?”
“வரலையாம். வேலை வந்திடுச்சாம்.”
“ஜஸ்ட் எஸ்கேப்டுடா” என்று கவுண்டமணி ஸ்டைலில் வருத்தப்பட்டார்!
“ஏம்மா இன்னைக்கு உன் சமையல்னு சொன்னியா?” மாமியார் கேட்க
“இல்லையே அம்மா”
“அப்புறம் ஏன் வரலைங்கறாங்க?”
“அம்மா நீங்க அப்பாவி போல இருந்தாலும் சந்து கிடைச்சால் சிந்து பாடிடறீங்க”
“ரொம்ப புகழாதே...” நெளிந்தாள்.
“சரி எல்லாரும் வெய்ட் பண்ணுங்க. அரை மணி நேரத்தில் முடிஞ்சுடும்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றாள் உமா.
சற்று நேரத்தில் “நாலு பேருக்கு எவ்வளவு அரிசி வைக்கணும்?” என்று மாமியாரை கேட்டாள்.
“மூனு டம்ளர் வைச்சு தண்ணி ஊத்து.”
“தண்ணி வேற ஊத்தணுமா? நல்லவேளை சொன்னீங்க” உமா பாராட்ட,
“எனக்கு மனசு கிடந்து பதறுது. இவ சமைப்பாளா?” மதி பயந்தான்.
“ஒரு ட்ரையல் தானே”
“ட்ரையலா? இல்லை. விஷப்பரிட்சை” விஜி பதறினாள்.
“புடலங்காய் கூட்டுக்கு இவ்வளவு தண்ணி போதுமா?” என்று அண்டாத் தண்ணீரை காமிக்க,
“ஐயே! மூணு டம்ளர் தண்ணி ஊத்து போதும்.”
“சரி அத்தை பாயசத்துக்கு எத்தனை பச்சை மிளகாய் போடனும்?”
“ஏன்டி எதுக்கடி பச்சை மிளகா?” மாமியார் உடம்பே உதறலடித்தது.
“சரி, எல்லாத்தையும் நான் யூ டியூபில் பாத்துக்கறேன்," என்ற உமா மூணு மணி நேரம் கழித்து “சாப்பாடு ரெடி” என்று கத்த, யாரையும் காணோம். ஒளிந்திருந்த மதியை மட்டும் கண்ணாடி காட்ட “ஏங்க சின்னப்பிள்ளை மாதிரி திருடன்-போலீஸ் ஆடறீங்க? வாங்க சாப்பிட. அவங்க எங்கே?”
“அவங்கவுங்க வீட்டுக்கு ஓடிட்டாங்க. என் நேரம்... இதுதான் என் வீடு. என்ன புடலங்காய் ரசம் வைச்சிருக்கே?” பயந்து நெளிந்தான் மதி.
“சாப்பிடுங்க. அப்பத்தான் என் அருமை புரியும்” என்றாள் உமா மிளகாய் பாயசத்தை ஊற்றியபடி.