

சுகுணாவிற்கு ஓரிடத்தில் நிற்க முடியலை.
வேலைக்காரி அங்காளம் கூட 'என்னம்மா உடம்பு சரியில்லையா?'னு கேட்டாள்
“அடி போய் வாயைக் கழுவுடி,” என்று சந்தோஷமாய் திட்ட,
“பின்னே ஏம்மா டென்ஷனாய் இருக்கீங்க?”
“அது மகனையும், மருமகளையும் பாக்கப்போற குஷியில் ஆடறேன்.”
“என்னமோ போங்க. என் வீட்டுக்காரர் முனியான்டி தினம் தண்ணி போட்டு இப்படித்தான் ஆடுவார். கிட்ட போனால் அறைவார்.”
“நீ குடிகாரன் பெண்டாட்டி. அதான் இப்படி பேசறே. சரி நான் மகனை பாக்க பாம்பே போறேன். திரும்பி வர ஒரு மாசமாகும். அதுவரை வீட்டை காலையும் மாலையும் ஒரு அரைமணி நேரம் விளக்கேத்தி பாத்துக்க. உனக்கு ழுழு சம்பளத்தையும் தரேன்.”
“முழு சம்பளமா?” வாயை பிளந்தாள் அங்காளம்.
“ஆமாடி. நான் சம்பளம் தரலைனா நீ எப்படி சாப்பிடுவே? உன்னை கஷ்டத்தில் விட்டுட்டு நான் அங்கே நிம்மதியாய் இருக்க முடியுமா?”
“நீங்க நல்லாயிருக்கனும்மா.” கை கூப்பினாள்.
“அடச்சீ, கையை கீழே போடு. இந்த மாவடு பாட்டில், அரிசி அப்பளம், ஆவக்காய் ஊறுகாய், கை சுத்தல் முறுக்கு எல்லாத்தையும் பையில் போடு!”
“சரிம்மா.”
“வாயை காட்டாமல் வேலை பாக்கனும்," என்று சொல்லி தலை வாரி கொண்டை போட்டாள் சுகுணா.
“ஏம்மா அரைமணி நேரம் முன்னாடி தானே கொண்டை போட்டீங்க. இப்ப மறுபடியும், உங்களை பெண் பார்க்க போற மாதிரி...” கிண்டலடித்தாள் அங்காளம்.
“ஹாரன் அடிக்குது ஆட்டோ வருதா பாரு!”
“வந்துடிச்சும்மா. பையை கொடுங்க என்னிடம். நான் தூக்கியாறேன்.”
“விடுடி. நீயே சிசேரியன் செய்த உடம்பு. போ வழியை விடு...” என்று ஆட்டோவில் ஏறி டாட்டா காட்டினாள் சுகுணா.
*****
பாம்பே ஸ்டேஷன் வந்ததும் குஷியாக இறங்க, மகன் மாது, மருமகள் லதாவும் ரிசீவ் பண்ண காத்திருந்தனர்.
மகனை பார்த்ததும் “நல்லாயிருக்கியா ராஜா”? என்று கட்டிப்பிடித்தாள் சுகுணா.
“சும்மா இரும்மா எல்லாரும் பாக்கறாங்க,” நெளிந்தான் மாது.
“யார் பார்த்தால் எனக்கென்ன?” என்றவள், மருமகள் லதாவை பார்த்து, "நல்லாயிருக்கறியம்மா? ஏதாவது விசேஷம் உண்டா?” என்று கேட்க, "வாம்மா எல்லாதையும் இங்கேயே பேசனுமா? வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்," என்று சொன்ன மாதுவிடம் “டவுன் பஸ் வருமா?” என்று கேட்டாள் சுகுணா.
“நம்ம கார் இருக்கும்மா.”
“கார் வாங்கிட்டியா? சொல்லவேயில்லை. வெரி குட்.”
“காரில் ஏறும்மா... பேசிக்கலாம்."
அபார்ட்மென்டில் 37ஆவது மாடி.
“லிப்டில் ஏற முடியாது. கரண்ட் இல்லை.” லதா படபடத்தாள்.
“ஜெனரேட்டரும் ரிப்பேராம்.” மாது கவலையாய் முனக,
“எவ்வளவு நேரமாகுமாம்?” லதாவின் கேள்வி மாதுவை படபடக்க வைக்க “லிப்டில் போகலாம் ரெடியாச்சு?” என்ற கூர்க்காவின் அறிவிப்பு மாதுவின் வயிற்றில் பாலை வார்த்த்து.
“ஒரு வழியாய் வீட்டுக்கு வந்தாச்சு அப்பாடா!” என்ற சுகுணா, “ரொம்ப களைப்பா இருக்கு, குளிச்சா தேவலாம். பாத்ரூம் எங்கே இருக்கு?”
“வாசலில்” என்ற லதாவிடம் “பாத்ரூமை யாராவது வாசலில் வைப்பாங்களா?”
“கதவை மூடி வைச்சிருக்கே... எப்படி காத்து வரும்?” கதவை திறந்தவள் “ஏன்டி வாசலில் கோலம் போடலையா?” கோபமாய் கேட்டாள்.
“போட்டிருக்கேன்” என்று ஒரு வழவழ ஷீட்டை காட்ட, “அடிப்பாவிகளா! கோலம் போடறதே பூச்சிகள், பறவைகள் சாப்பிட... அரிசி மாவில் போடுவாங்க. இப்ப என்னடான்னா, பேப்பரில் போடறீங்க. சரி கலி முத்திப்போச்சு “முனகியபடி குளித்தாள் சுகுணா
“வாங்க, காபி சாப்பிடலாம்” என்று சுகுணாவை கூப்பிட, காபியை குடித்தவள் “கொஞ்சம் டிகாஷன் ஊத்துனு” சொன்ன சுகுணாவை அசர வைத்தாள் லதா..
“டிகாஷன் இல்லை.. தேவைனா இன்னொரு ஸ்ட்ராங் காபி ஆர்டர் போடலாம்” என்று செல்லை எடுத்து “இன்னொரு ஸ்ட்ராங் காபி” என்று சொன்ன லதாவிடம்,
“வீட்டிலே காபி பவுடர் இல்லையா? இல்லை என்றால் வாங்கிப்போடு.” ஆர்டர் போட்டாள் சுகுணா
“ஐயோ அம்மா, இது கடையில் வாங்கினது”
“ஏன் லதாவுக்கு காபி போடக்கூட தெரியாதா?”
“டச் விட்டுப்போச்சு” லதா சமாளிக்க...
“சரியாப்போச்சு ” என்ற சுகுணா, “டேய் காபி பவுடர் ஆர்டர் போடு. காலையில் நான் காபி போட்டுத்தரேன்.” சுகுணா தேற்றினாள்.
“இன்னைக்கு ஏகாதசி விரதம். ராத்திரி டிபன் வேணாம்” என்றாள் சுகுணா.
அப்பாடா என்று பெருமூச்சு விட்ட லதா, "பால்?" என்று கேட்க, “வேணாம்” என்றவள், “கொஞ்ச நேரம் டிவி போடு” என்று டிவியை பார்த்து விட்டு தூங்கினாள்.
அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்த சுகுணா வாசலில் தண்ணி தெளிச்சு கோலம் போட, வாக்கிங் போக வந்த மற்ற வீட்டுக்குரியவர்கள் வழுக்கி விழ ஒரே களேபரம்.
“அம்மா நீ சும்மா இருந்தால் போதும். வேலை பாக்காதே இது நம் ஊரில்லை” என்று கட்டளையிட்டான் அன்பு மகன்.
“காபி பவுடர் வாங்கிட்டு வந்தியா?” என்று கேட்க, “இல்லை காபியே வந்துடும்” என்ற மாது “எல்லாத்தையும் ஆர்டர் போட்டுத்தான் வாங்கனும்...." பயந்தபடி சொன்னான்.
“சரி டிபனாவது பண்ணுவீங்களா இல்லே அதுவும் ஆர்டர் தானா?”
“எல்லாமே ஆர்டர் தான்” என்று பெட்டிலிருந்து எழுந்து கால் டவுசரில் வந்தவளை பார்த்து “என்னடி இது? புடவையை கட்டிட்டு வா” எரிந்து விழுந்தாள் சுகுணா.
“அவளிடம் புடவையே கிடையாது.”
“எப்படி ஆபீஸ் போவா?”
“சுடிதார் தான்” என்றான்.
“டிபன் என்ன ஆர்டர் போடனும்?” லதா அன்பாய் கேட்டாள்.
“ஒன்னும் வேணாம். அவல், தயிர் ரெண்டையும் வாங்கி வாங்க கலந்து சாப்பிடறேன்.”
மாது ஆன்லைனில் ஆர்டர் போட்டு “அம்மா ஒன்னு சொல்றேன் கேட்டுக்க. இங்கே எல்லாமே ஆர்டர் தான். கொஞ்சம் பொருத்துக்க.”
“சமைக்கறதே இல்லையா? நான் சமைக்கறேன்” சுகுணா சொல்ல,
“கிச்சனே கிடையாது. இங்கே இருக்கும் 260 வீட்டிலும் கிச்சனே கிடையாது” என்றான். “எல்லாருமே ஆன்லைனில் தான் ஆர்டர் பண்ணி சாப்பிடறாங்க” மேட்டரை போட்டுடைத்தான் மாது.
“கிச்சன் இல்லாத வீடா?” மாமியார் சுகுணா ஆச்சரியத்தையும், எரிச்சலையும் கலந்து கேட்டாள்.
“அத்தை, இங்கே இருக்கறவங்க மெஜாரிடி ஷிப்ட்டில் வேலை பாக்கறவங்க. ஐ.டி எம்ப்ளாயிஸ் பத்து முதல் பன்னிரெண்டு மணி நேரம் வேலை... வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வர மினிமம் முக்கால் மணி நேரமாகும். வீட்டுக்கு வந்து அக்கடானு உட்கார மொத்தம் 14 மணி நேரமாகும். அப்ப வந்து கேஸ் பத்த வைக்க முடியுமா சொல்லுங்க.”
“என்ன டா இது.. எனக்கு இது சரி வராது. நான் கிளம்பறேன்” என்ற சுகுணா “நாளைக்கு டிக்கெட் போடு. நான் திரும்பறேன்” கோபம் பொங்கியது மனதில்.
“நான் அடுப்பு கிடைக்குமானு பாக்கறேன். ஒரு நாள் பொறு” மாது கெஞ்சினான்.
“யார் வீட்டு அடுப்பில் யார் சமைப்பது? அதெல்லாம் வேணாம்.”
“சரி அவல் சாப்பிட்டு படு. காலையில் பாத்துக்கலாம்,” என்ற மாது, லதாவிடம் 'அனுப்பிடுவோம்' என்று சைகை காட்டினான்.
அதிகாலை சுகுணாவை நாற்காலியில் கட்டிப்போட்டு வீட்டு டிவி, டிரஸ், பர்ஸ், நகைகள் எல்லாம் யாரோ திருடிச்செல்ல... காலை 8 மணிக்கு எழுந்த மாது,
“அம்மா என்ன நடந்தது? யார் உன்னை கட்டிப்போட்டா?” பதைபதைத்து அழுது விட்டான் மாது.
நடுங்கியபடி சுகுணா “காலை 4 மணிக்கு வாசலை திறந்து விட்டு கோலம் போட்டு திரும்பினா, ரெண்டு பேர் என்னை ஒரு அறை விட்டு நாற்காலியில் கட்டிப்போட்டு வீட்டை கொள்ளை அடிச்சிட்டாங்கடா!” பயத்தில் உடம்பு நடுங்கியது.
“இங்கே எட்டு மணிக்கு தான் கதவை திறக்கனும். நாலு மணிக்கு கதவை திறந்தால் இப்படித்தான். சரி வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம்,” என்று போய் ரிபோர்ட் கொடுக்க “விசாரிக்கறோம்” என்று சொல்லியனுப்பினர்.
நல்ல வேளையாக திருடர்கள் பொருட்களை விற்றபோது போலீஸிடம் மாட்டினர். போன பொருட்கள் திரும்ப கிடைத்தன.
“அம்மா நீங்க ஊருக்கு போங்க. ஃப்ளைட்டில் டிக்கெட் புக் பண்ணியிருக்கேன். இந்த ஊர் உங்களுக்கு செட் ஆகாது. காரில் கொண்டு போய் விமானத்தில் ஏத்திவிடறேன்,” என்றான் மாது.
"சமத்துடா நீ. உனக்கு புண்ணியமா போகும் என்னை நம்ப ஊருக்கு அனுப்பு," என்று சொன்னாள் சுகுணா.
ரயிலில் வந்த சுகுணாவை ஃப்ளைட்டில் ஏற்றி அனுப்பினான் மாது.
வீட்டுக்கு வந்த மாதுவிடம், “அப்பாடா. என்னமா பேசறாங்க உங்கம்மா” என்று வியந்தாள் லதா.