

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பார்த்தசாரதிக்கு மடிக்கணினியின் திரையைப் பார்த்தபோது, அதனை எடுத்து உடைத்துவிடலாமா என்று கோபம் பொங்கியது.
"என்னோட கம்பெனில , என்னையே ஒருத்தன் அவமானப்படுத்தறானா ? அவனை உண்டு இல்லன்னு பண்ணிடறேன். என்ன திமிரு அவனுக்கு" என்று மனதுக்குள் பொருமினார் பார்த்தசாரதி.
பார்த்தசாரதி ஒரு பெரிய தனியார் கணினி நிறுவனத்தில், தலைமைச் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். அங்கு அவருக்கு கீழ் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை பார்த்தனர். அவரது அலுவலகத்தில் கடைக் கோடியில், கோடிகளில் சம்பளம் வாங்கும் நபர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மிக்க மதிப்பு வாய்ந்த "கார்னர் ஆபிஸ்" அதாவது 'ஓர அலுவலகம்' அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த அறையில் நுழைவதற்கு சாதாரண ஊழியர்கள் முன்கூட்டியே, பார்த்தசாரதியின் உதவியாளர் முருகப்பனை அணுக வேண்டும். முருகப்பன் அனுமதித்தால் மட்டுமே, பார்த்தசாரதியைப் பார்க்க முடியும்.
சிறிய விஷயங்களுக்கு முருகப்பனே முடிவெடுத்து, பார்க்க வருபவர்களை திருப்பி விடுவார். பெரிய விஷயங்கள், பெரிய புள்ளிகள் போன்றவர்கள் மட்டுமே பார்த்தசாரதியைப் பார்க்க அனுமதிக்கப்படுவர்.
பார்த்தசாரதி அலுவலகத்தில் நுழைந்தவுடனே, எல்லாரும் அவரைப் பார்த்த மாத்திரத்தில் தங்களது வணக்கத்தைச் சொல்வார்கள்.
உணவருந்தவோ, தேநீர், காபி போன்றவற்றிக்கு கூட, அவர் வெளியே செல்ல மாட்டார். ஏதாவது, சந்திப்பில் எவராவது நேரம் தாழ்ந்து வந்தால், சந்திப்பையே நிறுத்தி விடும் அளவுக்கு முன்கோபக்காரராக, பணியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
நிற்க. இப்போது பார்த்தசாரதிக்கு என்ன கோபம் வந்துவிட்டது என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. சரி. அந்த விஷயத்திற்கு வருகிறேன்.
பார்த்தசாரதி அன்றைய தினம், தனக்கு கீழே வேலை பார்க்கும் எல்லா பணியாளர்களுடன், ஒரு இணைய வழி சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த சந்திப்பில் இருக்க, அவர் பேசிக் கொண்டிருந்தபோது, கேட்ட ஒரு ஓசை அவரை சினம் கொள்ள வைத்தது. அவரது கூர்மையான காதுகளுக்கு அந்த ஓசை கேட்டுவிட்டது. யாரோ ஒரு ஊழியன் குறட்டை விடும் சத்தம்தான் அது. அது மிகவும் சன்னமாகவும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இசையைப் போல சீராகவும் கேட்டது.
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் முன்பு, தனது பேச்சை ஒருவன் புறக்கணிப்பது, அவருக்கு அவமானமாகப்பட்டது. தேநீர் இடைவேளையில், முருகப்பனை அலுவலக இன்டர்காமில் தொடர்பு கொண்டு, அவரை அறைக்கு அழைத்தார்.
"முருகா. நம்ம ஆபிஸ்ல எவனோ என்னை கிண்டல் பண்ணறான் இல்ல என்னை அலட்சியப்படுத்தறான்" என்றார் பார்த்தசாரதி
"என்ன சார் சொல்லறீங்க. உங்கள பாத்தாலே சும்மா அதிருதுல்லங்கற மாதிரி, அவனவன் நடுங்குவான். எவனுக்கு உங்கள அலட்சியம் பண்ணற தைரியம் இருக்கு" என்றார் முருகப்பன்.
"இல்ல முருகா. என்னோட மீட்டுங்குல ஒருத்தன் தூங்கி குறட்டை விட்ட சத்தம் கேட்டது. அவன் மட்டும் என்னோட கையில கிடச்சான். அவன் தீந்தான். அவன வீட்டுக்கு அனுப்பிட்டுத்தான் மறுவேல. இந்த விஷயம் உன்னோட இருக்கட்டும். வெளியில தெரிய வேண்டாம். அவனக் கண்டுபிடிக்கறதுதான் என்னோட அடுத்த வேலை," என்றார் பார்த்தசாரதி.
"இருங்க சார். டீ பிரேக் முடிஞ்சப் பிறகு, பார்க்கலாம். எவனுக்கு அந்த தைரியம் இருக்கும்னு பார்த்துடலாம்" என்றார் முருகப்பன்
டீ பிரேக் இடைவேளை முடிந்து, மறுபடியும் சந்திப்பு தொடர்ந்தது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பார்த்தசாரதியும், முருகப்பனும் ஒலிபெருக்கியை முழு சத்தத்தில் வைத்து, கூர்ந்துக் கேட்கத் தொடங்கினர். பார்த்தசாரதி சொன்னது உண்மைதான். எவனோ ஒருவனின் குறட்டைச் சத்தம் ஒலிபெருக்கியின் பேச்சுக்கு பின்னிசையாக கொர்... கொர்... கொர்... என்று ரீங்காரமிட்டது.
"சார். நீங்க சொல்றது சரி. நாங் கூட முதல்ல நம்பல. எவ்வளோ தைரியம் இருந்தா, நீங்க பேசறபோது, ஒருத்தன் தூங்குவான். உங்களோட மீட்டிங்க அவன் அவமானப்படுத்தறான். உங்க மீட்டிங்குல, தூங்கற அளவுக்கு அவனுக்கு இவ்ளோ தில் இருக்கா. அவனக் கண்டுபிடிக்கறது என்னோட வேலை. நீங்க கவலப்படாதீங்க. இன்னிக்கோட மீட்டிங்கில் கலந்துகிட்டவங்க லிஸ்ட கொடுங்க. அவன கண்டுபிடிக்கிறேன்." என்றார் முருகப்பன்.
"முருகா. வெளியில விஷயம் தெரியாம காரியத்த முடிக்கணும். இன்னிக்கு யாரு யாரு ஆபிஸூக்கு வந்தாங்கன்னு பார்த்து, சிசிடிவி வீடியோ புட்டேஜ்ல என்னோட மீட்டிங் நேரத்துல, எவன் தூங்கினான்னு பாக்கணும். வா செக்யூரிட்டி ரூமுக்கு போகலாம்," என்றார் பார்த்தசாரதி.
பாதுகாப்பு அறையில், சுவரில் மாட்டியிருந்த தொலைக்காட்சியில், ஓடிய சிசிடிவி காட்சிகளை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தபடியே, சாயா ஒன்றை அருந்திக் கொண்டிருந்த, உன்னி கிருஷ்ணனிடம் முருகப்பனும், பார்த்தசாரதியும் நின்றபோது, உன்னியின் கை நடுங்கியது.
உன்னியிடம், "அரை மணி நேரத்துக்கு முன்னாடியோட வீடியோ புட்டேஜ் சார் பாக்கணும் என்று கூறி, முருகப்பனும் பார்த்தசாரதியும் அரைமணி நேரத்தின் காட்சிகளை கண்கொட்டாமல் பார்த்தனர்.
ஒன்றும் தெரியாததால், "ஸ்... சார். குற்றவாளி ஆபிஸ்ல இல்ல சார். அவன் வீட்டுல தான் இருக்கான். அவன கையும் களவுமாக பிடிக்காம இன்னிக்கு தூக்கம் கிடையாது. இது எங்க ஊரு ஆத்தா மகமாயி மேல சத்தியம்" என்றார் முருகப்பன்.
இருவரும் மறுபடி பார்த்தசாரதியின் அறைக்கு வந்தனர்.
"சார். இன்னிக்கு உங்க மீட்டிங்கல 200 பேர் இருந்தாங்க. அதுல வீட்ல இருந்து வேல செஞ்ச 40 பேர் தான் இருக்கான் அந்த குற்றவாளி. நீங்க 10, 10 பேரா 4 மீட்டிங் உடனே ஏற்பாடு பண்ணுங்க. அந்த குற்றவாளி எந்த குரூப்புல இருக்கான்னு பாத்து அவனோட வீட்டுக்கே போய், அவனை தூக்கறோம். கம்பெனிய விட்டே தூக்கறோம்" என்றார் முருகப்பன்.
40 பேருக்கும், 4 தனித்தனியான இணைய சந்திப்புகள் ஏற்பாடு செய்தார் முருகப்பன். மூன்று சந்திப்புகள் முடிந்தன. கொர் , கொர் சத்தம் கேட்கவில்லை. நான்காவது சந்திப்பு நடந்தபோதும், கொர், கொர் என்ற சத்தம் ஒலிபெருக்கியில் மார்கழி மாதத்தில் கோவில்களில் ஒலிக்கும் "ஓங்கி உலகளந்த" திருப்பாவையைப் போல் ஓங்கி ஒலித்தது. பார்த்தசாரதி இதுவரை பார்த்திராத ஒரு ரௌத்திர சாரதியாக மாறினார். அந்த ரௌத்திரத்தைக் கண்டு, முருகப்பனுக்கு ஒரு விநாடி , நாடி நரம்பெல்லாம் நொறுங்கியது.
"இதுக்கு மேலும் பொறுக்க முடியாது. அந்த 10 பேர்ல ஒவ்வொருத்தனா நான் மீட்டிங்கல மியூட் பண்ணி எவன்கிட்ட இருந்து சத்தம் வருதுன்னு பாக்கறேன். நாம அவன சந்தேகப்படறது அவனுக்கு தெரியக்கூடாது" என்றார் பார்த்தசாரதி.
பார்த்தசாரதி சந்திப்பின் ஒலிவாங்கியினை ஒவ்வொருத்தனாக அணைத்துக் கொண்டே வந்தார். கடைசியில் ஒருவனது ஒலிவாங்கியினை அணைத்தபோது, குறட்டை சத்தம் நின்றது. பார்த்தசாரதிக்கு அவனை தலைமுடியைப் பிடித்து உலுக்கி, ஓங்கி ஒரு அறை விட வேண்டுமென்று கை நடுங்கியது. சட்டென்று அழைப்பைத் துண்டித்தார்.
"டேய். ராமசுந்தரம். அப்பாவி மாதிரி இருந்துகிட்டு அடப்பாவி வேலை பாக்கறியா. கம்பெனியோட சிஈஓ வையே கிண்டல் பண்ணற அளவுக்கு உனக்கு தில்லு வந்துடுச்சாடா. இப்பவே, உன்னோட வீட்டுக்கு வந்து, உன்ன கம்பெனிய விட்டுத் தூக்கறேண்டா" என்றார் பார்த்தசாரதி.
"சார். அவசரப்படாதீங்க. ராமசுந்தரத்தை நாம சந்தேகப்படறது அவனுக்குத் தெரியாது. மறுபடி ஒரு மீட்டிங் செட் பண்ணுங்க. ஏதாவது பேசிகிட்டு இருங்க. நாம காரை நேரா அவன் வீட்டுக்கு ஒட்டிக்கிட்டு போய், அவன கையும் களவுமா பிடிக்கறோம்."
மறுபடி பார்த்தசாரதி ஒரு சந்திப்பை ஏற்படுத்தி, சம்பந்தமில்லாமல் ஏதோ பேசிக் கொண்டிருக்க, முருகப்பனின் வாகனம், அண்ணாசாலையிலிருந்து, குரோம்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்து, பல்வேறு சந்து பொந்துக்களைக் கடந்து, ஒரு ஆள்அரவமில்லாத தெருவில் நுழைந்தது.
அங்கு தெருக்கோடியிலிருந்த, மரங்கள் சூழ இருந்த வீட்டை நோக்கி, இருவரும் பூனை போல் நடந்து சென்றனர். வீட்டின் அழைப்பு மணியை அழைத்தால், ராமசுந்தரம் விழித்துக் கொள்வான் என்று இருவரும் சுவரேறிக் குதித்தனர்.
பார்த்தசாரதி மடிக்கணினியோடு சுவரேறிக் குதிக்கையில், கால் இடறி, கால்சராய் கிழிந்து, சட்டையெல்லாம் சகதியாகி, பார்க்க பயங்கரசாரதியாக தெரிந்தார். அவருக்கு உதவச் சென்ற, முருகப்பனை தடுத்து, அமைதியாக இருக்குமாறு விரலால் சைகை காட்டினார். மடிக்கணினி சைடுஓரத்தில் சற்று உடைந்தது. இருவரும் வீட்டின் சாளரங்கள் ஒவ்வொன்றாக கடந்துச் சென்று ராமசுந்தரத்தைத் தேடினர். பார்த்தசாரதி மெல்லிய குரலில் ஒலிவாங்கியில் பேசிக் கொண்டிருந்தார். ஒரு சாளரத்தின் வழியே நோக்கியபோது, ராமசுந்தரம் உள்ளே, கணினி முன்பு உட்கார்ந்திருப்பது தெரிந்தது. குற்றவாளியைக் கண்ட சந்தோஷத்தில், இருவரும் சாளரத்தை நெருங்கி வந்தனர். மறுபடி குறட்டை சத்தத்தை பார்த்தசாரதி மடிக்கணினியின் ஒலிபெருக்கி அருகே காதை வைத்து ஊர்ஜிதம் செய்துக்கொண்டார்.
பார்த்தசாரதியும், முருகப்பனும் சாளரத்தின் வழியே நோக்கியபோது, ராமசுந்தரம் அங்கு தூங்கவில்லை. ராமசுந்தரம் கணினியை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ராமசுந்தரத்தின் காலுக்கு கீழேயிருந்து குறட்டை சத்தம் பலமாக கேட்டது. கீழே நோக்கியபோது, ஆஜானுபாகுவான ஒரு நாய் குறட்டை விட்டுக் கொண்டிருந்தது!