

"அவன் உறங்கட்டும்; அவனை சற்று உறங்க விடுங்கள். அவன் நினைவுகள் அவனை ஆசுவாசப்படுத்தட்டும்."
இப்படியாக அவனை பார்த்த அந்த மருத்துவர் அவனின் பெற்றோரிடம் கூறிக் கொண்டிருந்தார்.
அப்படி என்ன அவனுக்கு ஆனது என்பதை பற்றி அவனுடைய பெற்றோர் புலம்பி கொண்டு இருந்த நிலையில், மருத்துவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
பிறகு பெற்றோரிடம் விசாரித்தார்.
அவர்கள் அவன் தூக்கத்தில் ''கீரை, கீரை, கீரை'' என்று புலம்புகிறான் என்றனர்.
'தம்பி எந்த ரூம்ல தூங்குவார்? எத்தனை மணிக்கு தூங்குவார்? ஏதாவது படித்துக் கொண்டிருப்பாரா?'... இப்படியாக பெற்றோர்களிடம் கேள்விகளை கேட்டுவிட்டு அதற்கான பதிலை நாளை கூறும்படி சொல்லி சென்று விட்டார் !
பெற்றோர்களுக்கு அவன் படிக்கிறான் என்பது மட்டும்தான் தெரியும். எதை படிக்கிறான் என்பதை பற்றி தெரிவதற்கு வாய்ப்பில்லை; காரணம் அவர்களுக்கு ஒரே குறிக்கோள் தன் பிள்ளை ஒரு மருத்துவராக வேண்டும் என்பது மட்டுமே!
மருத்துவர் அடுத்த நாள் அவன் பெற்றோரிடம் "கொரியன் தமிழ் சங்கம்" நடத்திய உலகலாவிய சிறுகதை போட்டி 2025ல் வெளிவந்திருந்த கதையை பற்றி சொல்லிவிட்டு, அதற்கு கீழ் 'பிரபு தாசன்' என்கிற அந்த கலைஞனை பற்றியும் அவன் புகைப்படத்தையும் பெற்றோரிடம் காட்ட, அவர்களுக்கு மயக்கம் தெளிய அரைமணி நேரம் ஆகியது.
பிரபல வார இதழ் 'கல்கி' தன் பிரசுரத்தில் 'Motivation' என்கிற பக்கத்தில் இந்த கதையைப் பற்றிய ஒரு 'Review' பதிவு செய்ததையும் காட்டினார்.
******************
அதை இங்கே காண்க...
பச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி, மணத்தக்காளி, பொண்ணாங்கண்ணி, முளைக்கீரை...
முளைக்கீரை, பச்சைக்கீரை, மணத்தக்காளிக் கீரையோ, கீரை, கீரை...
இப்படி சொல்லிக் கொண்டே போகும் ஒரு வயது முதிர்ந்த பாட்டியை தினமும் நடைப்பயணத்தில் எதிர்கொள்வது இயல்பாக அமைந்தது.
அன்று காலை 7 மணி. என் வீட்டிற்கு திரும்பும் போது அந்த கீரை அம்மாவும் நானும் ஒருசேர நடந்து வந்தோம்.
ஒரு 50 அடி சென்ற பின், ஒரு வீட்டின் மதில் சுவரில் தன் கூடையை தாங்கலாக வைத்தார்.
இதுதான் சமயம் என்று, என் விவாதத்தை தொடங்கும் முன், அந்த பாட்டியிடம் இருந்து 3 கீரை கட்டை ரூபாய் 60 கொடுத்து வாங்கிக் கொண்டேன்.
"பாரம் குறைந்ததா?" என்று ஆரம்பித்தேன்.
“இதில் 15 கிலோவிற்கு மேலே என் முதலாளி ஏற்றி வைத்து இருக்கிறார்! அங்க, அங்க நின்னு சற்று இளைப்பாறிய பின் என் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்,” என்றார்.
“எங்கிருந்து வருகிறீர்கள்?”
“மாத்தூர்.” (இது குடந்தையில் இருந்து 5 கிலோ மீட்டர் இருக்கும்)
அங்கு உள்ள அந்த நிலக்கிழார் தன் வயலில் விளைந்த விளைச்சலை வியாபாரத்திற்காக இந்த பாட்டியிடம் கொடுத்து இருக்கிறார் என்பதை அறிந்தேன்.
“வயது...?”
“அது என்ன... 60-க்கு மேலத்தான் இருக்கும்.”
“சரி; இதில் எவ்வளவு ரூபாய்க்கு கீரை இருக்கும்?”
“ரூபாய் 2000 முதல் ரூபாய் 2500 வரை...”
“இன்னும் எவ்வளவு தூரம் நடப்பீர்கள்?”
“மாகமகம் குளம் வரை...” (இது செல்ல இன்னும் 8 கி.மீ செல்ல வேண்டும்)
“ஆக நீங்க ஒரு நாளைக்கு சுமார் 13 to 15 கி.மீ நடக்குறீங்க?”
“அததெல்லாம் எனக்கு தெரியாது!”
"அப்புறம்?"
“மணி 11 அல்லது 12 மணிக்கு எல்லா கீரையும் விற்ற பிறகு (சில சமயம் தங்கிவிடும்) டவுண் பஸ் பிடித்து மதியம் 2 மணிக்கு மாத்தூர் சென்று விடுவேன். அங்கே போய் தான் சாப்பாடு...”
நெஞ்சம் கன கனத்தது...
தினமும் 10000 அடி நடந்தால் மன அழுத்தம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வலி, இன்னும் பிற வியாதிகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள பகிரப்படும் செய்தியை இந்த அம்மையார் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அந்த வாய்ப்பு வரமாக நெளிந்த உடலுடன், தினமும் தன் உழைப்பை மூலதனமாக கொண்டு செயல்படும் இந்த 65 வயது பாட்டியின் தேகமே ஒரு சான்றாக இருந்தது.
நான் நடந்து செல்ல எனக்கு வேண்டிய விட்டமீனையும், தாது சத்துக்களையும் (கீரை) கொடுத்து விட்டு இயற்கை தந்த அந்த சூரிய ஒளியில் தன் தேகத்தை மிளிர வைக்கும் அந்த 'மாதா' என் குடும்ப விளக்கு.
அந்த 'மாதாவின் குரல்' என் தேசிய கீதம் என்பேன்!
"கீரை... கீரை... பச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி, மணத்தக்காளி, பொண்ணாங்கண்ணி, முலைக்கீரை..."
நகர்ந்தாள் அந்த அம்மையார்.
அந்த ஒலி இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
வீட்டில் பேரனோ, பேத்தியோ அந்த ஒலியை நம்பி காத்துக்கொண்டு இருப்பது நிச்சயம்.
***************
இனி பெற்றோர் 'பிரபு தாசன்'னை பற்றி கவலைப்பட தேவை இல்லை.