
”கண்ணா! நல்லா சாப்பிட்டுட்டு தூங்குடா” என்று வேளாவேளைக்கு கண்ணனை உபசரிப்பதில்… சற்றே பொறாமைப்பட்டார் வேணுகான சீனிவாச ராமானுஜ பெருமாள்.
சின்ன வயசில் இருந்தே கண்ணன் எது செய்தாலும் ”அவன் குழந்தை; அவனுக்கு விவரம் பத்தாது" என்று அவனுக்கு ஆதரவாய்தான் பேசுவாள்… திட்டுகள் மட்டும் சரமாரியாய் வேணுகான சீனுவாச ராமானுஜ பெருமாளுக்கு அன்றாட அஷ்டோத்ர அர்ச்சனையாக விழுவது வாடிக்கையானது.
ஸ்கூலில் இருந்து கம்ப்ளெயிண்ட்… ”ஒங்க பையன் கண்ணன் சேட்டை தாங்க முடியல... கண்டிச்சு வையுங்க…இல்லே டி.சி குடுத்துட்டு பூடுவோம்” என்ற மிரட்டலுக்கு கூட…. "எல்லாம் அவரை விதைப் போட்டா… துவரையாக காய்க்கும்” என்று வேணுகான சீனுவாச ராமானுஜ பெருமாளுக்கு வந்து சேரும்.
அப்படிப்பட்ட வேணுகான சீனுவாச ராமானுஜ பெருமாளின் காதில் விழுந்த சேதி சற்று அதிர்ச்சியாய் இருந்தாலும் சமாளித்து கொண்டு சந்தோஷப்பட்டார். "என்னதான் நான் பெத்த பிள்ளையாய் இருந்தாலும் அவன் செய்தது தப்புதான்! இவ்வளவு பெரிய பையனாகியும் குழந்தையாம் குழந்தை!"
”மாட்டினான்டா கண்ணன்! என்னதான் செய்கிறாள் பார்ப்போம் இந்த கோதை! மனதில் கண்ணனைத் திட்டுவது போலவும் அதை ரசிப்பது போலவும் காட்சி போல எண்ணி மகிழ்ந்து… அதை நேரில் கண்ணார கண்டு… இல்லை... இல்லை… காதார கேட்கவும் வேண்டும் என்று எண்ணியவாறே வீட்டிற்குள் நுழையப் போனவரின் காதில்…
”ஏனடா கண்ணா! நீ இப்படி செய்யலாமா? ஒன்னை குழந்தையாகவே நினைச்சுட்டிருக்கேன். ஆனா நீ செய்துட்டு வந்திருக்கிற காரியம்... தைரியமா வீட்டுக்குள்ளாற வேற கூட்டி வந்திருக்கே…” என்று ஆரம்பித்து ”அடேய் அந்த பொண்ணு யார்டா? எங்கே இருந்து கூட்டி வந்திருக்கேடா? சொல்லுடா சட்டைப்பையை உலுக்கி கொண்டிருந்தாள் கோதை.
”அம்மா! எனக்கு அவளைப் பிடிச்சுடுச்சும்மா. நீயும் அப்பாவும் எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீங்களோ பயத்தில இப்படி செஞ்சிட்டேம்மா… பொண்ணு பேர் பத்மாவதி… திருப்பதி கோவில் பிரசாத கவுன்டர்ல லட்டு வித்துட்டிருந்தாம்மா… அப்பப்ப திருப்பதி போறச்ச பழக்கமாயிடுச்சு… கெடுபிடி நேரத்துல கூட ரெண்டு லட்டு எக்ஸ்ட்ராவும் கொடுப்பாம்மா! அந்த பழக்கம்தான் காதலா மாறி கல்யாணம் வரைக்கும் வந்திடுச்சும்மா” என்றான் கண்ணன்.
”டேய் கண்ணா! பெருமாள் கோவில்ல லட்டு ஸ்டால் போட்டு வியாபாரம் செய்திருந்த என்னை ”லட்டு திங்க ஆசையா”ன்னு சிலேடையாய் பேசி காதல் வார்த்தை கூறி திருட்டு கல்யாணமும் கட்டிக்கிட்டான் பாரு ஒன் அப்பன்… அவன் புத்திதான் ஒனக்கு வந்திடுச்சா? பிள்ளைய இப்படி வளர்த்து வைச்சிருக்கான் அந்த ஆள் வரட்டும் ரெண்டுல ஒண்ணு பார்த்துடறேன்” என்று காளியாக மாறியிருந்த கோதையை பார்த்த மாத்திரத்தில் வீட்டிற்குள் நுழையாமல் அந்த தெருவில் உள்ள பெருமாள் கோவிலுக்குள் சரண் புகுந்தார் வேணுகான சீனுவாச ராமானுஜ பெருமாள்.
அங்கே ”என்னடா சீனு!” குரல் கேட்டு திரும்பி பார்த்தால்… அவரின் அம்மா… ”அம்மா! ஒன் பேரன் கண்ணன் திருட்டு கல்யாணம் கட்டிகிட்டு வந்திட்டான்ம்மா! பொண்ணு பெருமாள் கோவில்ல லட்டு விக்கறவளாம்“ என்று கண்ணீர் உகுத்தார்.
”அப்படியா செய்தான் என் பேரன்!” எல்லாம் அவன் தாத்தா புத்தி அப்படியே வாய்ச்சிடுச்சு… ஒன் அப்பனும்…"
அந்த வார்த்தையை முடிப்பதற்குள் சிலையாகிப் போனார் வேணுகான சீனுவாச ராமானுஜ பெருமாள்.