

1. நாளைய இயக்குநர்
நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு எடுக்கப்படும் குறும்படத்துக்கான அசிஸ்டெண்ட் டைரக்டர் தேர்வு நடை பெற்றது. ஒரு சினிமாப்பட இயக்குநர் ஆக குறும்படம் விசிட்டிங் கார்டாக அமைவது மாதிரி, குறும்படம் எடுக்க முதலில் சில ஷாட்கள் எடுத்து தம்மை நிரூபிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார்.
போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தி அவர்களில் மூன்று பேரைத்தேர்ந்தெடுத்து ஃபைனல் செலக்சனில் தேர்வாக ஒரு போட்டி வைத்தார். அவர்கள் எடுத்து வந்த சிங்கிள் ஷாட்களை பார்த்து தேர்வு செய்யனும்.
முதல் ஆள் எடுத்த படம் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் ஊர் பெரிய மனிதரின் பிறந்த நாள் விழா. அந்த ஷாட்டை பார்த்தவர் உதட்டைப்பிதுக்கினார். எப்பவும் உதவி செய்பவரின் முகம் தான் லைம் லைட்டுக்கு வரனும், அதுதான் மீடியா எதிக்ஸ். உதவி பெறுகின்றவர் முகம் காட்டப்படக்கூடாது . இந்த ஷாட்ல அந்த தொழில் தர்மம் மீறப்பட்டிருக்கு. இது ரிஜக்டட்.
இரண்டாவது ஆள் எடுத்த படம் ஒரு தகறாரு நடக்குது, அதுல ஒருத்தன் இன்னொருத்தனை தாக்க /கொல்ல கத்தியை ஓங்கறான். அந்த ஷாட்டைப் பார்த்த இயக்குநர் தலையை இட வலமாக ஆட்டினார். மன்னர்கள் காலத்தில்; வேல் கொண்டு எதிரியைத்தாக்கும்போதுதான் இந்த மாதிரி கைப்பிடி இருக்கும். அல்லது அரிவாளால் தாக்கும்போது இந்த போஸ் ஓக்கே, ஆனா கத்தியால் குத்த வருபவனின் இலக்கு எப்பவும் வயிற்றைக்குறி வெச்சுதான் இருக்கும், ஆனா சுத்தியலால மண்டைல அடிக்க வருபவனின் போக்கு மாதிரி எடுக்கப்படிருக்கு, இதுவும் ரிஜக்டட்.
மூன்றாவது படம் ஒரு லைப்ரரி, அதில் வாசகர்கள் படிச்சிட்டு இருக்காங்க, பிஜிஎம் இல்லை. சிம்ப்பிள் ஷாட். வாவ், இது செலக்டட் என்றார் இயக்குநர்.
சாரி சார், ஃபைனலுக்கு வந்த எங்க 3 பேருக்கும் ஒரு அண்டர்ஸ்டேண்டிங் வந்துடுச்சு. நாங்க 3 பேரும் சேர்ந்து படம் இயக்க நம்பிக்கை வந்துடுச்சு, ஜெ டி ஜெர்ரி மாதிரி, சுரேஷ் பாலா மாதிரி நாங்களும் இணைந்து செயல்படுவோம்.
இயக்குநருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை.
2. ஜெஸ்சி காலிங் கார்த்திக்!
நீண்ட யோசனைக்குப்பின் ஒரு முடிவு எடுத்த ஜெஸ்சி கார்த்திக் நெம்பருக்கு கால் பண்ணினாள்.
"கார்த்திக்…?"
"எஸ்..."
"நான் ஜெஸ்சி…"
"தெரியுது."
"மேரேஜ் ஆகி 5 வருசம் ஆச்சு, இப்போதான் உன் கிட்டே பேச சரியான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு."
"ஓஹோ."
"என்னப்பா? ஒரு சுரத்தே இல்லாம பேசறே?"
"லுக் ஜெஸ்சி, உனக்கும் மேரேஜ் ஆகிடுச்சு, எனக்கும் போன வருசம் வேற ஒரு பொண்ணு கூட மேரேஜ் ஆகிடுச்சு. இனிமே அவங்கவங்க துணைக்கு உண்மையா நாம நடந்துக்கனும்னு நினைக்கறேன்."
"நிஜமா நீதான் பேசறியா?"
"ஆமா, இதுல என்ன டவுட்?"
"என் கால் வராதா? னு ஏங்கிட்டு இருப்பே? கூப்டதும் செய்யற வேலையை அப்டியே விட்டுட்டு பறந்து வருவேனு நினைச்சேன் கார்த்திக்."
"ஜெஸ்சி, நாம லவ் பண்றப்ப நான் வெட்டியா இருந்தேன், எப்போ நீ எங்கே கூப்டாலும் உடனே ஓடி வந்துடுவேன், செலவுக்கு காசு நீ தந்திடுவே, ஆனா இப்போ எனக்கு சில பொறுப்புகள் இருக்கு."
"அப்போ எனக்கு பொறுப்பு இல்லைங்கறியா?"
"அய்யோ நான் அப்டி சொல்லலை. மேரேஜ்க்குப்பிறகு என்னை நம்பி வந்த பெண்ணின் நம்பிக்கைக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்."
"ஷாக்கிங் கார்த்திக், ஜஸ்ட் மீட் பண்ணி பேசறது தப்பா?"
"பேச்சுலதான் முதல்ல ஆரம்பிக்கும் ஜெஸ்சி, அப்றம் நம்மை நாமே கண்ட்ரோல் பண்ண முடியாது.. சாரி."
ஃபோனை கட் பண்ணிய ஜெஸ்சி பிரமிப்புடன் ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
5 நிமிசத்தில் ஒரு குறுஞ்செய்தி கார்த்திக்கிடம் இருந்து வந்தது.
ஹாய், ஜெஸ்சி, வீட்ல அவளும் இருந்தா. நான் பேசறதை உள்ளே இருந்து ஒட்டு கேட்டுட்டு இருந்தா. அதான் அப்டி பேசிட்டேன், ஸாரி. நான் ஆஃபீஸ்க்கு வந்துட்டு உனக்கு கால் பண்றேன்.