

எனக்குத் தெரிந்து ஐந்து அல்லது ஆறு வருடங்களாக நான் பிச்சை எடுத்து வாழ்கிறேன். நான் யார்? என்னைப் பெற்ற தாய், தந்தை யார் என்று தெரியாது. என் சொந்த ஊர் தெரியாது; என் பெயர் என்னவென்றும் எனக்குத் தெரியாது. ஆனால், கடைகளில் இருக்கும் ஆங்கிலப் பலகையில் உள்ள வார்த்தைகளை என்னால் படிக்க முடிகிறது.
ஒருமுறை ரோட்டில் ஒரு கண்ணாடி கிடைத்தது. நான் என்னை பார்த்த முதல் தடவை அது. தலையில் காய்ந்த ஜடை, முகம் முழுவதும் தாடி; எனக்கு என்னையே பிடிக்கவில்லை. ஒரு கிழிந்த சட்டை, அழுக்கு அரை வேட்டி, தோளில் ஒரு பிளாஸ்டிக் பை; அதற்குள் ஒரு அலுமினியத் தட்டு. இதைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்.
ஐந்து வருடங்களுக்கு முன், வடபழனி முருகன் கோயிலில் பகல் 11:30-க்கு அன்னதானம் நடைபெறும். பசியுடன் சென்றேன்; காவலாளி என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. அங்கு வந்த ஓர் அதிகாரி, கடையில் ஓர் அலுமினியத் தட்டு வாங்கி வந்து என்னிடம் கொடுத்தார். "தினமும் இந்தத் தட்டை இதே நேரத்தில் கொண்டு வந்து சாப்பாடு வாங்கிக்கொள்," என்று கருணை காட்டினார். இன்றுவரை எனக்கு ஒருவேளைதான் உணவு.
நான் ஞாயிற்றுக்கிழமை விருகம்பாக்கம் சர்ச்சில் பிச்சை எடுப்பேன்; கொஞ்சம் காசு கிடைக்கும். அதே மாதிரி வெள்ளிக்கிழமை மசூதி சென்று பிச்சை எடுப்பேன்; காசு கிடைக்கும். நான் இரவில் ஏதாவது ஒரு டீ கடையில் டீ கேட்பேன். யாராவது ஒருவர் வாங்கித் கொடுத்துவிடுவார்; இரவு உணவு அவ்வளவுதான். பிறகு விருகம்பாக்கம் சர்ச் அருகே நடைபாதையில் படுத்துவிடுவேன்.
காலை டீ கடை சென்று டீ கேட்பேன். டீ கடை உரிமையாளர் ஒரு பேப்பர் கப்பில் டீ கொடுத்துவிடுவார். யாரும் உதவவில்லை என்றாலும், என்னிடம் பிச்சையில் இருக்கும் சில்லறைகளைக் கொடுத்து டீ குடித்துவிடுவேன். இவ்வளவு சொல்லிவிட்டேன், என் பெயரைச் சொல்லவில்லை. ஆம், உண்மையில் எனக்கு என்ன பெயர் என்று தெரியாது.
அன்றாடம் நான் மலம் கழிக்க வடபழனி பஸ் ஸ்டாப் சென்றுவிடுவேன். அங்கு பைப்பில் வரும் தண்ணீரை என்னிடம் உள்ள கசங்கிய பாட்டிலில் நிரப்பிவிடுவேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டு விஷயங்கள்தான்:
பசி
தாகம்
எனக்கு எதுவும் தெரியவில்லை. விருகம்பாக்கம் துவங்கி வடபழனி வரை என்னால் நடக்க முடியாதபோது பஸ் ஏற முயற்சிப்பேன்; ஆனால், என்னை இறக்கிவிடுவார்கள். கால் வலியுடன் வடபழனி முருகன் கோயில் போவேன். எனக்கு வாசலிலேயே சாப்பாடு வந்துவிடும்; நான் கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன். இது மட்டுமே என் அன்றாட உணவு. எவ்வளவு முயன்றும் என் பழைய வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தாகம் எடுத்தால் வடபழனி கழிவறைத் தண்ணீர்தான் குடிப்பேன். சில நாட்கள் இரவு எனக்கு மிகவும் பசிக்கும்; நான் தண்ணீர் நிறையவே குடித்து தாகம் தணிப்பேன். எனக்குத் தெரிந்தது இரண்டே இரண்டு விஷயங்கள்தான் - மறுபடியும் சொல்கிறேன்: பசி மற்றும் தாகம்.
தினந்தோறும் இதே பிரச்சனைதான். என்னை ஒவ்வொரு விதமாக அழைப்பார்கள்: "ஏ...!", "ஏய்...!!", "யேய்...!!!", "லூசு...!!!!", "பைத்தியம்...!!!!". நான் கண்டுகொள்ள மாட்டேன். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் எனக்கு நன்கு புரிந்தது; நான் வருத்தமடைய மாட்டேன். "சொல்லிவிட்டுப் போகிறார்கள்" என்று விட்டுவிடுவேன்.
என் ஜீவன் உயிரோடு இருப்பதற்கு காரணம்: தினமும் வடபழனி முருகன் எனக்கு ஒருவேளை படி அளக்கிறான்; ஞாயிறன்று விருகம்பாக்கம் சர்ச்சில் சிலவேளைகளில் கிடைக்கும் சில்லறை; வெள்ளியன்று மசூதியில் சிலவேளைகளில் கிடைக்கும் சில்லறை. எனக்கு என்ன வயசு என்று கூடத் தெரியவில்லை.
சரி... சரி... இருக்கட்டும். என் கதையைப் படித்துவிட்டு உங்கள் கண்களில் கண்ணீர் சுரக்கவில்லை என்றால், கோளாறு என்னிடம் இல்லை!
ஆனால் நீங்கள்... உங்கள் மதங்களின் உட்பிரிவுகளில் ஈடுபட்டு சண்டையிட்டுக் கொள்கிறீர்கள். பசி, தாகத்தின் கொடுமையைவிட, இக்கொடுமையே மிக அதிகம்.