- மகாலிங்கம் இரெத்தினவேலு
அவன் பேப்பரும் பென்சிலுமாய் உட்கார்ந்திருந்தான். கோடுகள் வரைந்தான். கைகள் வேகவேமாய் தன்னிச்சையாய் இயங்கின. உருவங்கள் உணர்வுகளோடு உருப்பெற்றன.
”என்ன பண்ற” அவனின் அப்பா.
”ட்ராயிங், பொழுது போகல அதான்” அவன்.
”பொழுது போகலையா? ஏன் படிச்சா என்னவாம்? ட்ராயிங் சோறு போடுமா?”
”ஏன் போடாது? இல்லை, சோறு போட வழி செய்வதை மட்டும் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?" பதில் பேச தைரியமில்லை.
”என்னடா தேமேன்னு நிக்கிற.. பதில் பேச மாட்டியா?”
உருவங்களைச் சுமந்த தாள்கள் உருக்குலைந்து போயின.
எதிர்வீட்டுப் பையன் எங்கிருந்தோ ஒரு கிளியைக் கொண்டு வந்திருந்தான். அதற்குப் பாலும், பழமும் பிடிக்கவில்லை.
மற்றொரு நாள்….
”எங்கே போற?”
”போஸ்ட் ஆஃபீஸ்”
”கையில என்ன அது? இங்க கொண்டா”
(கவர் கை மாறுகிறது)
”காலேஜுக்கு அப்ளிகேஷன் போட வேண்டிய நேரத்தில் சிறுகதைப் போட்டிக்கா எழுதற”
அச்சில் ஏற வேண்டிய எழுத்து அடுப்புக்குப் போயிற்று.
கிளிக்குஞ்சுக்கு இறகுகள் முளைத்திருந்தன. அந்தப் பையன் இறகுகளை வெட்டிக்கொண்டிருந்தான்.
”அப்ளிகேஷனை எடுத்துட்டு வா”
எடுத்து வந்தான்.
“எந்தப் பாடம் கேட்டிருக்க?”
“தமிழ் இலக்கியம்”
“ஏன். படிச்சுட்டு நாக்கு வழிக்கவா?”
“பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போடு”
எதிர்வீட்டுப் பையன் கிளிக்குப் பேசுவதற்குக் கற்றுக்கொடுத்தான்.
”எங்கே, சொல்லு பார்க்கலாம். வாங்க”
”வாங்க” கிளி சொல்லிவிட்டு வேகமாக அவன் கையிலிருந்து விழும் சோற்றுப் பருக்கைக்காக அலைந்தது.
மூன்றாண்டுகள் கழித்து,
”பேப்பர் பார்த்தியா, பேங்குக்கு பரீட்சை வச்சிருக்காங்களே!”
”இல்லைப்பா… நான் ஜர்னலிஸ்டா…”
“போன வருஷம் எங்க ஆஃபீஸ் பியூனோட பையன் பரீட்சை எழுதி ஏ.சி ல உட்கார்ந்து கணக்குப் பார்த்துட்டு இருக்கான். சொன்னதச் செய்யி”
இன்னும் ஓராண்டு கழித்து,
“அம்மா… நான் ஒரு பெண்ணை”
“லவ் பண்றியா”
“ஆமா”
“எவ்வளவு போடுவாங்க?”
“நேத்துத்தான் சினிமால வரதட்சணை கேட்ட பையனோட அம்மாவை திட்டினீங்க”
“அது சினிமா...”
“அம்மா... நான் சொல்ற பொண்ணும், நானும் ஒரே மாதிரி சிந்திக்கறவங்க. நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா...”
“என்ன?... குழந்தை பெத்துக்குவீங்க. அவ்வளவு தானே”
“இல்லம்மா... இது வேற மாதிரி... எங்க தேவை குறைச்சுட்டு, மீதியை உபயோகமா ஏதாவது பண்ணப்போறோம்”
“அப்புறம்”
“தொழிற்சாலைகள்ல வேலை பார்க்கற அப்பா அம்மாவோட குழந்தைகளுக்கு ஓய்வு நேரத்தில ஃப்ரீயா டியூசன் எடுக்கப்போறோம். எங்களை மாதிரி இளைஞர்களச் சேர்த்துக்கிட்டு ஊனமுற்றவர்களுக்கு கெய்டன்ஸ் செல் ஒண்ணு அமைக்கப்போறோம். அவங்க தொழில் தொடங்க படிக்க அரசாங்கம் தர்ற உதவிகளைப் பயன்படுத்திக்க வழிகாட்டப்போறோம்.”
“கனா காண்றியா?”
“இல்லம்மா... நெஜம்”
“உன்னால முடியாது”
“ப்ளீஸ் மா. என்னோட ஆசையைக் காது கொடுத்துக் கேளும்மா”
“ஊர்ல உலகத்தில எல்லோரும் இப்படியா அலையறாங்க... எனக்குன்னு வந்து பொறந்திருக்கே. எனக்கு மட்டும் என் பிள்ளை நல்ல வேலைல உட்காரணும். நாலு காசு (லட்சங்கள்) சம்பாதிக்கணும். நல்ல இடத்தில (பண வசதி) பாத்து கல்யாணம் பண்ணனும். நம்ம சாதி, சனத்துக்கு முன்னால ஒரு சின்னக் குடிசை (பங்களா) கட்டணும். அப்படின்னு நெனப்பிருக்காத. நான் சொல்ற பொண்ணைக் கட்டிக்கல்ல என் பொணத்தைத் தான் நீ பார்க்கணம்” அம்மா ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
எதிர் வீட்டில், கூண்டுக் கதவைத் திறக்க, கிளி கூண்டிற்குள் சென்றது.
இப்போதெல்லாம் கிளி பறக்க முயற்சிப்பதேயில்லை.
அதற்குக் கூண்டிற்குள் விழும் சோற்றுப் பருக்கைகளே அமிர்தம். சந்தோஷமாய் (?) எல்லோரையும் ”வாங்க! வாங்க!” என்று அழைக்கிறது.
வீட்டில் உள்ளவர்களும் வருபவர்களும் அதைப் பெருமையாய் கருதுகின்றனர்.
ஒரு வாழ்க்கை மறுக்கப்பட்டதைப் பற்றி அதன் அடிமனதில் உள்ள சோகம் யாருக்கும் தெரிவதேயில்லை.