

ரீல்ஸ் மோகம் பலரை, குறிப்பாக இளைஞர், இளைஞிகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது.
விவேக் மட்டும் என்ன விதி விலக்கா..?
அவனும் மொபைலே கதி என்று ரீல்ஸ்களில் மூழ்கியிருந்தான் சதா சர்வகாலமும்.
வேறு வழியில்லாமல் பட்டம் பெற்று விட்டு வேலைக்கும் தேடிக் கொண்டிருந்தான்.
பல இடங்களுக்கு அப்ளை செய்தும் இன்னும் அவனுக்கு சரியான வேளையும், வேலையும் வரவில்லை.
விடாமுயற்சி தொடர்ந்தது.
அன்று ஒரு இன்டர்வியூவிற்கு அழைப்பு வந்தது.
அப்பா, அம்மாவிற்கு இந்த வேலையாவது அமைய வேண்டுமே என்ற நியாயமான கவலை.
கவலைப்படாமல் விவேக் அந்த இன்டர்வியூவிற்கு சென்றான்.
முதல் நாள் நன்றாக தயார் செய்தான். ரீல்ஸ்களில் வந்த பல்வேறு இன்டர்வியூக்கள் எப்படி நடைப்பெற்றன, எவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்டனர் என்று...
ஒன்று அவன் மனதில் பளிச்சென்று பதிந்தது. இந்த காலத்தில் இன்டர்வியூவில் அட்டென்ட் செய்பவர்கள் அறியாமலேயே அவர்கள் நன்னடத்தைப் பற்றி சோதித்து செலக்ட் செய்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டான்.
பரீட்சைக்கு முன்பாக கேள்வித்தாள் அவுட் ஆகி கையில் கிடைத்த மனநிலை மோடில் இருந்தான் விவேக். சந்தோஷத்தில் மிதந்தான்.
இன்டர்வியூவிற்கு சென்ற பொழுது அங்கு நடைப்பெற்ற நிகழ்வுகள் அவன் எதிர்பார்த்தபடியே நடக்க, கேட்க வேண்டுமா மகிழ்ச்சியில் மேலும் பறந்தான்.
அப்படி என்ன தான் நடந்தது?
விவேக்கையும் சேர்த்து நான்கு நபர்கள் இன்டர்வியூவிற்காக ஹாலில் வெயிட்டிங்.
இரண்டு ஆண்கள் (விவேக் உட்பட) இரண்டு பெண்கள்.
ரிசப்ஷனில் இருந்த பெண், சிறிது நேரத்தில் நிர்வாகி வந்ததும் இன்டர்வியூ ஆரம்பமாகும் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
அப்பொழுது சாதாரண உடையில் வந்த வயதானவர் ஒருவர் ஒரு பார்சலை தூக்க முடியாமல் தூக்கி வந்து கீழே போட்டு விட்டார்.
அவரால் அதை குனிந்து எடுக்க முடியவில்லை. பரிதாபமாக நின்றார். யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
எவ்வளவோ ரீல்ஸ் பார்த்த விவேக்கிற்கு பட்சி சொல்லியது.
உடனே விவேக் எழுந்து அந்த பார்சலை எடுத்துக் கொடுத்தான்.
அவர் ‘மிக்க நன்றி’ என்று கூறும் பொழுது ரிசப்ஷனில் இருந்த அந்த பெண் திரும்ப வந்து விட்டாள். அவரிடம் அந்த பார்சலை உள்ளே கொண்டு வைக்க சொன்னாள். அவரும் சென்று விட்டார் அந்த பார்சலுடன். போகும் முன்பு மறுபடியும் விவேக்கிற்கு ‘நன்றி’ கூறிவிட்டு சென்றார்.
நிமிடங்கள் நகர்ந்தன. விவேகிற்கு உள் மனதில் நம்பிக்கை துளிர்த்தது. அந்த பார்சல் கொண்டு வந்தவர் தான் நிர்வாகி. டெஸ்ட் செய்ய வந்திருப்பதாக நினைத்தான்.
நால்வரும் ஒரே சமயத்தில் உள்ளே செல்லும் படி கூறப்பட்டது.
உள்ளே சென்றதும் விவேகிற்கு 'ஜிவ்'வென்றிருந்தது.
அவன் எதிர்பார்த்தபடியே அந்த பார்சல் எடுத்து வந்த மனிதர் அந்த அறையின் உள்ளே நின்று கொண்டிருந்தார்.
உள்ளே சென்ற நால்வருக்கும் ஷாக்.
நால்வரையும் அமர சொன்னார்.
இப்பொழுது ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் ஏற்பட்டது.
ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தார். அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு இன்டர்வியூவை தொடங்கினார்.
அந்த பார்சல் கொண்டு வந்த நபர் உள்ளே சென்று, சிறிது நேரத்தில் அங்கு இருந்த ஐந்து நபர்களுக்கும் காபி கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்.
இன்டர்வியூ தொடர்ந்தது. நால்வரும் போட்டிப் போட்டுக் கொண்டு நன்றாக செய்தனர்.
சிறிது நேரம் ஆனதும் இன்டர்வியூ நடத்திய அந்த இளைஞர் இன்டர்வியூ ஓவர். ஒருவரை தேர்ந்து எடுத்துள்ளோம் என்று கூறி நிறுத்தினான்.
நால்வருக்கும் திகைப்பு, பயம் கலந்த எதிர்பார்ப்பு.
அப்பொழுது உள்ளே திரும்பி வந்த அந்த நபர் "நான் தான் செலக்ட் செய்தேன். இவர் என்னுடைய மகன். நான் தான் இந்த நிறுவனத்தின் நிறுவனர். மிஸ்டர் விவேக் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்," என்று கூறினார்.
"உதவும் மனப்பான்மை கொண்டவர்களை எங்கள் நிறுவனம் என்றும் ஆதரிக்கும். மேலும் எல்லோரும் எந்த வகை பணி செய்வதற்கும் தயாராகவும் இருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்று முடித்தார் அந்த நிறுவனர்.
வீடு திரும்பும் பொழுது மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் மிதந்த விவேக் மறக்காமல் ரீல்ஸ்களுக்கு நன்றி கூறினான்.