

அமைதியான அந்த தெருவில், ஒரு காலத்தில் அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்த நான்கு மாடிகள் உள்ள அந்த வீடு, இப்போது ஒரு பாழடைந்த நிலையில் உள்ளது.
அதன் எதிரே பரந்து விரிந்து காணப்படும் ஒரு திறந்த வெளி மைதானம் கால்பந்து, கிரிக்கெட், கபடி போன்றவற்றிற்காக மட்டுமே பயன்படுத்தபட்டு வருகிறது.
அதனை வாங்குவதற்காக பலர் முன் வந்த நிலையில், ஒரு சிலரின் புரளியின் காரணத்தாலோ என்னவோ, பல ஆண்டுகளாக இன்று வரை விற்பனை ஆகாமல் இருந்து வருகிறது அந்த வீடு. அந்த வீட்டின் உரிமையாளரின் மகன் அந்த வீடு விற்பனை ஆக சமயோசிதமாக, பொங்கல் பண்டிகை விழாவையொட்டிய கபடி போட்டிக்காக தம் வீட்டின் எதிரில் உள்ள காலி மைதானத்தை தன் சொந்த செலவில் சுத்தம் செய்து தருவதாகவும், அங்கே நடத்தி கொள்ளும்படியும் விழா குழுவினரிடம் கூறினார்.
இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற இருக்கும் 'பொங்கல் பண்டிகை விழாவையொட்டிய கபடி போட்டிக்காக' வெளியூரிலிருந்து வந்த பத்து நபர்கள், அந்த காலி மைதானத்தை சுத்தம் செய்ய ஒரு வாரம் ஆகும் என்று கூறினார்கள்.
எனவே, அவர்களை அந்த வீட்டில் தங்கியிருந்து வேலை செய்யுமாறு விழா குழுவினர் கூறினர். வேலை செய்ய வந்தவர்களும் அதனை ஒப்புக் கொண்டார்கள்.
அன்று இரவாகி விட்டதால், தாங்கள் தங்குவதற்காக முதலில் வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அதில் குப்பன், ராமன் என்ற இருவர் மட்டும் ஆர்வத்தின் காரணமாக, முதல் மாடிக்கு செல்ல மாடிப்படியில் ஏற தொடங்கினார். மாடியில் யாரோ நடமாடுவதைப்போல நிழல் தெரிந்தது.
"வீட்டை நாம் தானே திறந்தோம். அப்படியிருக்க வீட்டினுள் வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லேயே...!" என்று குப்பன் கூற, "அதானே.." என்றான் ராமன். "மேலே போக வேணாம்பா...?" என்று குப்பன் கூற, "டேய் குப்பா நாமெல்லாம் கிராமத்தாலுங்க, திறந்த வெளியில படுத்து தூங்கறவங்க, இதுக்கு போய் பயப்படலாமா...? டவுன்ல இருக்கிறவங்களுக்கு தான்டா... பேய், பிசாசு, கறுப்பு, பூதம் என்ற கற்பனை எல்லாம்...! நமக்கு ஏதுடா...?" என்று சொல்லிக்கொண்டே மேலே சென்றான் ராமன்.
நான்கு மாடியையும் நன்கு சுற்றி பார்த்துவிட்டு கீழே இறங்கி வந்தான் ராமன் எந்த விதமான பயமுமின்றி. அனைவரும் ஏழு நாட்களும், அந்த வீட்டில் தங்கி, சமைத்து சாப்பிட்டு, உறங்கி மைதானத்தை சுத்தம் செய்து விட்டு கிளம்பினர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டி ஒரு வாரம் நடைப்பெற்றது. போட்டிகள் நடந்து முடிந்த மறுவாரமே அந்த வீடும், காலி மைதானமும் தனித் தனியாக நல்ல விலைக்கு விற்பனை ஆனது.
'மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'!