அருணின் கார் புது மதகைத் தாண்டியதும், சுடுகாட்டின் புதுக் கூரை வெயிலில் டாலடித்தது! அந்தக் கூரையைப் போலவே அவன் மனதும் உற்சாகத்தில் பிரகாசித்துக்கொண்டிருந்தது! உறவினர்கள், நண்பர்கள் என்று சொந்த ஊரான கீழப்பெருமழையில் அனைவரையும் சந்தித்தது மனதுக்கு இதமாக இருந்தது! அந்தச் சாலை அவனுக்கு எவ்வளவோ ஞாபகங்களை மனதில் அசை போட வைத்தது!
பாண்டியிலிருந்து இடும்பவனம் வழியாகத் தொண்டியக்காடு செல்லும் சாலை அது! அவன், அந்தச் சாலை வழியாகத்தான் ஆறு ஆண்டுகள் இடும்பவனம் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றான்! அப்போதெல்லாம் செம்மண் சாலைதான்! ஒரு பக்கம் நீர் வடிவதற்கான புது ஆறு! மறு பக்கம் நீர் பாய்ச்சுவதற்கான வாய்க்கால்!
வயல்களில் நீர் பாய்ந்து நடவுக்குத் தயாராகும்போது, நிலாக் கால இரவுகளில், வெள்ளித் தட்டுகளாக அந்த வயல்கள் மின்னுவதைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது!
நடவு முடிந்து, சில நாட்களில் பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் பசுமையாய்க் காட்சியளிப்பதைக் காணும்போது மனதிற்குள் விம்மும் உற்சாகம்! அதன்பிறகு, புதுப்பெண் தலை குனிந்து நிற்பதைப்போல் விளைந்த கதிர்கள் வளைந்து நிற்பது தனி அழகு!
நீர்க்காலங்களில் பள்ளிக்குச் செல்கையில் சாலையைக் கடக்கும் தண்ணீர்ப்பாம்புகளுக்கு நண்பர் சிவப்பிரகாசந்தான் எமன்! நொடியில் வாலைப்பிடித்து ஒரே சுற்று! அது எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும் பயப்பட மாட்டார்!
செம்மண் சாலை அகண்டிருந்தது! தற்போதுள்ள தார்ச்சாலை குறுகி விட்டது! வீடில்லா விவசாயத் தொழிலாளர்கள் அங்கு குடிசை வீடுகளைக் கட்டியிருந்தார்கள்! அருணின் கார் செங்கழனி மதகையும் தாண்டிவிட்டது!
இடும்பவனத்தில் படிப்பை முடித்த அருண், திருச்சியில் படித்து அதன் பின்னர் சென்னை ஐஐடியில் சேர்ந்து முதல் மாணவனாகத் தேறினான்! அங்கிருந்து அமெரிக்கா சென்று நாசாவில் எஞ்சினியரானான்! இப்பொழுதுகூட அலுவலக வேலையாகத்தான் டெல்லி வந்து, அங்கு முக்கிய அதிகாரிகளுடன் சில திட்டங்கள் குறித்து கலந்துரையாடிவிட்டு வந்திருக்கிறான்! பிரதமர் மோடி அமெரிக்கா சென்று வந்ததின் விளைவு இது!
இப்பொழுது கலியபெருமாள் டீ கடை இருந்த இடத்தைத்தாண்டி மதகை நெருங்கிய கார், மதகில் ஏறியதும்... மக்கர் செய்தது! என்னவாயிற்று? காரை நிறுத்திவிட்டு அருண் அவசரமாக இறங்கினான்! முன் டயர் ப..ஞ்..ச..ர்..!
அந்த இடத்தைச் சற்று உற்றுப்பார்த்தான்!
ஆம்! அதே இடந்தான்! அவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் ஒருநாள்... அந்த ஒற்றையடிப் பாதைக்கு அருகில் கொத்தாக கிடந்த வேலிக்கருவை முள்ளை... விளையாட்டாக மண்ணில் புதைத்து... யாருடைய சைக்கிள் பஞ்சராகிறதென்று வேடிக்கை பார்க்க முனைந்தார்கள்! அப்போதைக்கு யாரும் வராத காரணத்தால் அப்படியே விட்டு விட்டு அவர்கள் செல்ல... அதன்பிறகு அவ்வழியாக வந்த தமிழாசிரியர் சிவகுருநாதன் அவர்களின் புது சைக்கிளை அது பஞ்சராக்க... அவர் பள்ளி வந்து உண்டு... இல்லை என்று ஆக்கி விட்டார் !
முற்பகல் செய்யின்... அவனுக்கு லேசாகச் சிரிப்பு வந்தது! டயர் புதிதாகத்தான் இருந்தது! அந்தக்கார் அவன் நண்பனுடையது! விரைவில் திரும்ப ஏதுவாக இருக்குமேயென்று எடுத்து வந்தான்! ஆனால்...இப்பொழுது தலைவலியாக விட்டது!
'சரி! ஸ்டெப்னி மாற்றலாம்!' என்று வீலைக் கழற்றினான்! சாலை குறுகலாக இருந்ததாலும், பஸ் வரும் நேரமென்பதாலும், நல்ல ஓரமாகத் துணி ஒன்றை விரித்து... கழற்றிய நான்கு நட்டுகளையும் அதில் வைத்து விட்டு... பின்னாலிருந்த ஸ்டெப்னியைக் கழற்றும்போது...
வழக்கமாக மேலப்பெருமழைக்கு இரவு தங்க வரும் காக்கைகள் நான்கைந்து ஏதோ தின் பொருளென்றெண்ணி அந்தத் துணியை இழுக்க... துணியுடன் நட்டுகளும் வாய்க்காலில் விழுந்துவிட்டன! இது என்ன சோதனை? இடும்பையில் ரன்னர் திரு நடராஜனைப் பார்த்துவிட்டு உடன் திரும்ப வேண்டுமே! அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை!
பேன்ட், ஷர்ட்டுடன் வாய்க்காலில் குதிக்க முடியாதே!
அப்பொழுது, அழுக்கு லுங்கி கட்டிய கிராமத்து ஆசாமி ஒருவர் தலையில் முள் கட்டுடன் அங்கு வந்தவர், "என்னய்யா ஆச்சி?" என்றார்!
"அட... போங்க பெரியவரே! காரைப்பற்றி உங்களுக்கென்ன தெரியும்?" என்று அவன் கோபம் அடைய... அவர் மெல்ல நடந்தார்!
சற்று சுதாரித்துக்கொண்ட அருண் 'இவரை வாய்க்காலில் இறங்கி நட்டுகளைத் தேடி எடுக்கச் சொல்லலாமே' என்றெண்ணி அவரை அழைத்தான்!
"பெரியவரே! வாய்க்கால் தண்ணிக்குள்ள நட்டுகள் விழுந்துடிச்சு! அவற்றைக்கொஞ்சம் தேடி எடுத்துக்கொடுத்தீங்கன்னா... நல்லாருக்கும்!"
"தேடலாந்தான்! ஆனா... அவ்வளவு சீக்கிரமா கெடைக்குமாங்கிறது சந்தேகந்தான்! நான் வேற ஒரு வழி சொல்லவா?"
அருணுக்கு எரிச்சலாக இருந்தது! 'இந்த ஆளு வேற உயிரை வாங்கறானே! சரி! இவனையும் விட்டு விடக்கூடாது!' என்றெண்ணியபடி...கோபத்தை வெளிக்காட்டாமல் "சொல்லுங்க பெரியவரே!" என்றான்!
"அதில்லை தம்பி! இப்ப ஒவ்வொரு வீல்லயும் நாலு நட்டு இருக்கில்ல... அதில ஒவ்வொன்னைக் கழற்றினா மூணு நட்டு கெடச்சிடும்! அந்த மூணை இந்த வீலுக்குப் போட்டுக்கிட்டு திருத்துறைப்பூண்டி போய்ட்டீங்கன்னா அங்க எல்லாத்தையும் சரி பண்ணிக்கிடலாம்!... பத்து கிலோ மீட்டர்தானே! ஒண்ணும் பிரச்னை வராது! சரி தம்பி! நான் வரேன்!"
அருண் சில வினாடிகள்... உறைந்தே போனான்!
ஒரு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிதாகச்சொல்லி விட்டுப் போகிறார்?! அவர் சென்ற திசை பார்த்துக் கை எடுத்துக் கும்பிட்டான்!
இவரைப் போன்றோர் இந்த மண்ணில் வாழ்கின்ற காரணத்தால்தானோ தனக்கும் ஓரளவு அந்த அறிவு கிடைத்து, அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிட்டியதோ என்று எண்ணி... அந்தப் பெரியவர் காலடி பட்ட மண்ணை எடுத்து அவன் நெற்றியில் இட்டுக்கொண்டான்!