
'முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கிறார்கள்!' என்ற சொலவடை பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் நிலவி வருகிறது.
பூசணிக்காய், சாதாரணமாகவே பெரிதாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! உருவத்திலும், எடையிலும் மிகப் பெரியவை உண்டு! அவ்வாறு பெரிதாக இருப்பவற்றைச் சோற்றில் மறைக்க வேண்டுமானால், மணல் குவியலைப் போல் சோற்றைக் குவித்து வைத்தால்தான் முடியும்! அது சாத்தியமாகாது! மேலும், இப்பொழுதெல்லாம் சோறு சாப்பிடுபவர்கள் எண்ணிக்கையே குறைந்து வருகிறது! பெரும்பாலானோர்க்கு சர்க்கரை வியாதி வந்து விட்டதே! இந்த நிலையில், எக்காரணத்தால் இந்தச் சொலவடை வந்தது என்று பார்ப்போமா?
அது ஒரு சிறிய ஊர்! அந்த ஊரின் பண்ணையார் செல்வாக்கானவர் மட்டுமல்ல! அந்தக் காலத்திலேயே கோடீசுவரர்! நில புலன்களும், எடுப்புகளும் அவருக்கு ஏகமாக இருந்தன! சிறிய பயணங்களுக்கு 'ரேக்ளா'வண்டியையும், சற்றே பெரிய பயணங்களுக்குக் 'கூண்டு' வண்டியையும் பயன் படுத்துவார்! இரண்டுக்கும் தனித்தனி ஜோடி மாடுகள்! வண்டிகளை ஓட்டத் தனித் தனி ஆட்கள்!
அன்றைக்கு, மாலை கூண்டு வண்டியில் வந்து கொண்டிருந்த போது, பண்ணையாரின் தர்ம பத்தினி சொன்னார்கள்! "என்னங்க! பொழுதுதான் சாய்ஞ்சிடுச்சே! நாம எறங்கித் தோட்டத்துக்கள்ளே பூந்து, பேசிக்கிட்டே வீட்டுக்குப் போகலாமுங்க! இந்த வழியா நாம நடந்து போயி ரொம்ப நாளாகுதுங்க!"
பண்ணையார் உடனே பூர்த்தி செய்தார் மனைவியின் விருப்பத்தை! வண்டியை அனுப்பி விட்டு இருவரும் காலாற நடந்தார்கள்! வழியில் எதிர்ப்பட்ட ஒரு சிலர் அவர்களுக்கு வணக்கம் சொல்லி, வழி விட்டு ஒதுங்கி மரியாதையைப் பறை சாற்றினர்!
லேசாக இருட்டு கவியத் தொடங்கியது! அப்பொழுது அவர்கள் இருவரும் ஒரு பூசணித் தோட்டத்தில் பிரவேசித்தனர்! பாதையின் இரு மருங்கும் பூசணிக் காய்கள் புத்தம் புதிதாய்க் கண் சிமிட்டின! பண்ணையார் மனைவிக்கு பூசணிக் கூட்டு என்றால் உயிர்! "ஏங்க! நல்லதாப் பார்த்து ஒரு காய் பறிச்சிட்டு வாங்க! ராத்திரிக்கே கூட்டு பண்ணிச் சாப்பிடலாம்!" என்று அவர் மனைவி சொல்ல, அவர் சற்றே தயங்கினார்!" என்ன நீ! இது ஒண்ணும் நம்ம தோட்டம் இல்ல! நாம பறிக்கிறதை யாராவது பார்த்துட்டா அசிங்கமாயிடாதா! பண்ணையார் பூசணிக்காயைத் திருடிட்டாருன்னு பேச மாட்டாங்களா?" என்ற பண்ணையாரை இடை மறித்த அவர் மனைவி,
"இதோ பாருங்க! இப்பவே இருட்டிடுச்சி! மேலும் நம்ம வீடும் நெருங்கிடுச்சு! நம்மளைப் பின் தொடர்ந்து யாரும் வரவும் காணும்! ஒரு பூசணிக்காய் பெரிய விஷயமா?" என்று கூற, பண்ணையாரோ அப்பொழுதும் தயங்கினார்! "சரிங்க! அப்படித் தெரிஞ்சு போனா அதுக்கும் ஒரு உபாயம் சொல்றேங்க!" என்று அந்த அம்மா கட்டாயப்படுத்த, பண்ணையார் ஒரு பூசணிக் காயைப் பறித்து வந்தார்! இரவு, பூசணிக் கூட்டில் வீடே மணத்தது!
இரண்டொரு நாட்கள் சென்றதும், ஊரில் அரசல் புரசலாக பண்ணையாரின் திருட்டு பேசப்பட்டது! எப்படியோ அது தெரிந்து விட்டது! பண்ணையார் காதுக்கு அந்தச் செய்தி வந்ததும் அவர் கூனிக் குறுகிப் போனார்! இனி எப்படி வெளியில் தலை காட்டுவது என்று மருகினார்! அப்பொழுதுதான் அவரின் மனைவி அந்த உபாயத்தைச் சொன்னார்!
பண்ணையார் வீட்டில் தடபுடலாக விருந்து வைக்கப் பட்டது! உயர் ரக அரிசிச் சோறும், அறுசுவை பதார்த்தங்களும் தலை வாழை இலையில் அனைவருக்கும் பரிமாறப்பட்டன! ஊரிலுள்ள அனைவரும், வித்தியாசமின்றி அழைக்கப்பட்டு பெருமைப் படுத்தப் பட்டனர்! விருந்தின் தன்மையைப் பார்த்து ஊரே வியந்தது! அது மட்டுமல்ல...
"இவ்வளவு செலவு செய்து அருமையான அறுசுவை உணவு படைத்தவரா கேவலம் ஒரு பூசணிக் காயைத் திருடி இருப்பார்? நிச்சயமாக இருக்க முடியாது! சாத்தியமே இல்லை! அவரைக் குறை சொல்பவர்கள் நாக்குதான் அழுகிப் போகும்!" என்றும் ஊரார் பேச ஆரம்பித்தார்கள்!
திருடிய பூசணிக்காயை, ஊராருக்குச் சோறு போட்டு மறைத்த காரணத்தாலேயே இந்தச் சொலவடை இன்றும் நிலவி வருகிறது!