
பாஸ்கரபூபதி என்ற பெயர்கொண்ட அந்த மாவட்ட வருவாய் அதிகாரி ஒரு கண்டிப்பான பேர்வழி. கண்டிப்பான பேர்வழி என்பதற்காக அவர் நேர்மையானவர் என்று அர்த்தமல்ல. மேலிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். அவரது உறவினர் ஒருவர் முக்கியமான மந்திரியாக இருக்கிறார். அதுமட்டுமல்ல சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அவர் மிகவும் நெருக்கமானவர். அவரிடம் உள்ள பலவீனம் சதா ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பதுதான். திக்கித் திணறித்தான் அவரால் ஆங்கிலத்தில் பேசமுடியும். கடந்த முப்பது வருடங்களாகவே ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த போதிலும் அம்மொழியை சரளமாக அவரால் இன்னும் கையாளமுடியவில்லை. இப்படித் திக்கித் திக்கிப் பேசுகிறோமே என்ற கூச்ச நாச்சம் சிறிதுமில்லை அவருக்கு. இதன் காரணமாகத்தான் பாஸ்கரபூபதி என்ற அவரது பெயர் இங்கிலீஸ் பூபதி என்று திரிந்தது.
அரசாங்க அலுவலகங்களில் தமிழ் மொழிதான் அனைத்து மட்டங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கை. அதன்படி முக்கால்வாசிக் கடிதப் போக்குரத்துகள் தமிழில்தான் இருக்கின்றன. அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில்தான் கையொப்பமிடுகின்றனர். இருப்பினும் இவரைப்போல் சிலர் ஆங்கிலத்தை இன்னும் பிடித்துத் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆய்வுக் கூட்டங்ளுக்கு நடுவில் ஜோக் அடிப்பதாக நினைத்துக்கொண்டு எதையாவது சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பார். அதிகாரியல்லவா ஜோக் அடிக்கிறார். அலட்சியம் செய்ய முடியுமா? கூட்டத்திலிருக்கும் அனைவரும் ஒருவரை ஒருவர் அசடு வழியப் பார்த்துக்கொண்டு சிரித்து வைப்பார்கள். அதிகாரி என்ற ரீதியில், கடந்த காலத்தில் தான் செய்த பராக்கிரமங்களில் ஏதேனும் ஒன்றை விவரிப்பார். அதை அனைவரும் முதல் முறையாகக் கேட்பதுபோன்று முகபாவத்தை வைத்துக்கொண்டு ஆச்சரியமாகக் கேட்பார்கள். ஆனால் அந்தப் பராக்கிரமத்தை அப்பொழுது அவர் சொல்வது பதினைந்தாவது முறையாக இருக்கும்.
கோப்புகளில் சாதாரணமாகக் கையெழுத்துப் போட்டுவிடமாட்டார். ஏதாவது படிகிறதாவென்று காத்திருந்து, படிந்தபின் கையெழுத்துப் போடுவார். தன்னைப் பார்க்கவரும் அலுவலர் எவரையும் உட்காரச் சொல்லமாட்டார். மணிக்கணக்கில் நிற்க வேண்டிய அலுவலக அவசியம் இருந்தாலும் கண்டுகொள்ளமாட்டார். யாருக்கும் எந்த நன்மையும் மறந்தும் செய்துவிடமாட்டார். அத்தகைய குணம்படைத்த அவருக்குக்கீழ் பணிபுரிவதை அலுவலர்கள் ஒரு பொருமலோடு பொறுத்துக் கொண்டிருந்தனர். இவரது சொந்த மாவட்டம் சேலம். இளநிலை உதவியாளர் முதல் வட்டாட்சியர்வரை முப்பது வருடங்கள் சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்து பதவி உயர்வில் வேறு மாவட்டங்களுக்கு வந்தவர்.
ஒருநாள் அலுவலகக் கண்காணிப்பாளர் அவரிடம் வந்து,
“சார்! என் மகளுக்கு சேலம் மாவட்டம் வருவாய்த்துறையில் ஜூனியர் அசிஸ்டன்ட் வேலைகிடச்சிருக்கு, சார்!” என்றார்.
“Very good! Congratulations!” என்று சொன்ன அந்த அதிகாரி, சேலம் மாவட்டத்தில் வேலைசெய்யும் அதிகாரிகள் அனைவரும் தனக்கு வேண்டப்பட்டவர்கள்தான் எனச் சொல்லி, கண்காணிப்பாளருக்கு எந்த இடத்தில் பணி நியமனம் வேண்டுமோ அதே இடத்தில் வாங்கித் தருவதாக ஆங்கிலத்திலேயே சொன்னார்.
“கலெக்டர் ஆபீஸில் வேலை வாங்கிக் குடுத்தா நல்லா இருக்கும், சார்!” என்றார் கண்காணிப்பாளர்.
“I will talk to the PA (General) to Collector. You go and meet him. He will do the needful” என்றார் அதிகாரி. தனது மகளைக் கூட்டிக்கொண்டு சேலம் சென்ற கண்காணிப்பாளர் இரண்டு நாட்களுக்குப் பின்பு திரும்பி அலுவலகம் வரும்பொழுது முற்பகல் மணி பதினொன்றே கால் ஆகிவிட்டது. அப்பொழுது தாசில்தார்கள் அடங்கிய ஆய்வுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. கண்காணிப்பாளர் முத்துசாமி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் வந்து அதிகாரிக்கு வணக்கம் சொல்லிவிட்டு தனக்கான இருக்கையில் போய் அமர்ந்துகொண்டார். கூட்டம் முடிந்தடன் கண்காணிப்பாளரைப் பார்த்து அதிகாரி கேட்டார்,
“போன காரியம் எனாச்சு?” சில சமயங்களில் அவர் தமிழிலும் பேசுவதுண்டு....
“கலெக்டர் ஆபீஸிலேயே போஸ்டிங் கெடச்சிருச்சு, சார்! ரொம்ப நன்றிங்க, சார்!” என்றார் பவ்யமாகக் கண்காணிப்பாளர்.
“சேலம் கலெக்டர் ஆபீஸில் என்னைப்பற்றி விசாரிச்சீங்களா?” எனக் கேட்டார் அதிகாரி.
“யாருகிட்டக் கேட்டாலும் உங்கள நல்லாத் தெரியும்னு சொல்றாங்க, சார். பரவாயில்ல, சார்! சேலம் கலெக்டர் ஆபீஸுல நீங்க ரொம்ப notorious ஆக இருந்திருக்கீங்க, சார்!“ இப்படிச் சொல்விட்டு பேந்தப் பேந்த விழித்தார் கண்காணிப்பாளர். அங்கிருந்த தாசில்தார்கள் மத்தியில் சின்ன சலசலப் ஏற்பட்டது.
“What nonsense! what do you mean by the word notorious, man?” என்று ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் பொரிந்து தள்ளினார் அதிகாரி. அவரது கண்களும் கன்னங்களும் சிவந்துவிட்டன. நெற்றியில் ஒரு கண்மட்டும் இருந்திருந்தால் முத்துசாமியை எரித்துப் பஸ்பமாக்கி இருப்பார். முத்துசாமியால் இருக்கையில் அதற்குமேலும் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அதிகாரி தன்மீது ஏன் இப்படிக் கோபப்படுகிறார் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை போலும்.
“நான் ஏதாவது தப்பாப் பேசி இருந்தால் மன்னிச்சுக்கங்க, சார். நான் பேசுனதில அப்படி என்ன தப்பிருக்குன்னு தெரியலையே, சார்!” என்று மிகமிக அடக்கத்துடன் பேசினார் கண்காணிப்பாளர் முத்துசாமி.
“Notorious என்ற வார்த்தைக்கு என்னையா அர்த்தம்?” என்று அதிகாரி அதட்டினார். சற்று நேரம் யோசிப்பவர்போல் மௌனமாக இருந்துவிட்டு
“பிரபலமான அல்லது புகழ்பெற்ற என்று அர்த்தம், சார்! என்று ஒரு பள்ளி மாணவனைப் போல அடக்கமாகப் பதில் சொன்னார் முத்துசாமி.
“இங்கிலீஷ் தெரிஞ்சாப் பேசணும்! இல்லைனா வாய மூடிட்டு சும்மா இருக்கணும். கண்டதையெல்லாம் உளறக் கூடாது! Understand?” என்று உக்கிரமாகக் கத்தினார் அதிகாரி.
இந்த இக்கட்டிலிருந்து முத்துசாமியை எப்படியாவது காப்பாற்ற நினைத்த அவரது நண்பர் தாசில்தார் பழனிசாமி அடக்கமாக எழுந்து நின்று,
“Notorious என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் முத்துசாமிக்குத் தெரியாது, சார்! சார்கூடப் பேசும்போது இடையிடையே ஆங்கிலச் சொற்களப் பயன்படுத்தினால் சார் சந்தோஷப் படுவீங்ன்னு நெனச்சு இப்படி உளறிட்டாருங்க, சார்! பாவம் அப்பாவி மனுஷன்! எங்களுக்காக இந்த ஒருமுற மன்னிச்சு விட்டுடுங்க, சார்!” என்றார்.
“உங்களுக்குத் தெரியுமா அந்த வார்த்தைக்கான அர்த்தம்?” என்று பழனிசாமியைப் பார்த்துக் கேட்டார் அதிகாரி. பழனிசாமிக்கு அர்த்ததம் தெரிந்திருந்தும் மரியாதையின் நிமித்தம் மௌனம் காத்தார். முத்துசாமி அறியாமையில்தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்திவிட்டார் என்பதை அதிகாரி ஒருவாறாக ஏற்றுக்கொண்டது போல் தெரிந்தது. இருப்பினும் அவரது உள்ளம் அவமானத்தால் துவண்டுபோய் இருந்ததை அவரது முகத்தில் காணமுடிந்தது.
அதிகாரி மதிய உணவிற்காக வீட்டிற்குச் சென்ற பின்பு அலுவலக ஹாலில் இருந்த கண்காணிப்பாளரது இருக்கையைச் சுற்றி தாசில்தார்கள் அனைவரும் உட்கார்ந்து கொண்டார்கள்.
“முத்துசாமி! ஏம்பா இப்படிப் பேசிப்புட்ட! Notorious என்பது ஒரு எதிர்மரையான சொல். கெட்ட விஷயத்திற்குப் பேர்பெற்றவர்களைத்தான் அந்தச் சொல்லைக் கொண்டு சுட்டுவார்கள். எந்த வார்த்தையையும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தப் புரிஞ்சுகிட்டுப் பேசணும்பா! அதுவும் இப்படிப்பட்ட அதிகாரிக முன்னால பேசாமல் இருப்பதே நல்லது” என்று பழனிசாமி சொன்னார்.
“சரியான ஏமாத்துக்காரப் பேர்வழி, சார்! இந்த அதிகாரி. சேலத்தில இருக்குற அதிகாரிகளுக்குப் போன் பண்ணி கலெக்டர் அலுவலகத்திலேயே போஸ்ட்டிங் போடச் சொல்லுறேன்னு ஏங்கிட்டச் சொன்னாறு. ஆனால் அங்க போன் பண்ணி 'வேலைக்குச் சேரும்போதே சொகுசா இருக்கணும்னு யாரும் எதிர்பார்க்கக் கூடாது. அந்தப் பொண்ணுக்கு சேலத்துக்கு வெளியில் ஏதாவது ஒரு சிறு நகரத்திலுள்ள தாலுகா அலுவலகத்தில போஸ்ட்டிங் போடுங்க' என்று சொல்லி இருக்கிறார். இவரை அங்குள்ள யாருக்கும் பிடிக்காது. காரணம் இவர் பிறருக்குக் கெடுதல் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார். நான் போன உடனே ரெஜிஸ்தறார் என்னிடம் அனைத்து உண்மையையும் சொல்லிவிட்டார். நான் வருவாய்த்துறையில் வேலைபார்ப்பதைத் தெரிஞ்சுகிட்டு ஏங்கிட்ட அன்பு ஆதரவா பேசினாங்க. சேலத்திலேயே என் மகளுக்கு போஸ்ட்டிங் போட்டுக் கொடுத்துட்டாங்க. Notorious என்ற வார்த்தைக்கு எனக்கு நன்றாக அர்த்தம் தெரியும். அந்த அதிகாரியின் மனசுல நல்லா தைக்கணும், அவர் மனசு சுடணும்னுதான், அர்த்தம் தெரியாத அப்பாவிபோல் நடித்து, அந்த வார்த்தையப் பயன்படுத்தினேன்...” என்று முடித்தார் முத்துசாமி.
அதிகார வர்க்கத்தை எதிர்க்க அப்பாவி வேஷத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி இருக்கிறார் முத்துசாமி. ஏதோ அவரால் முடிந்தது.